கொழும்பு: வாங்கிய கடனின் ஒரு பகுதியை வரும் ஜூலை மாதத்துக்குள் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள இலங்கைக்கு எந்த சலுகையும் வழங்க முடியாது என சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது.
இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 12 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
இலங்கையின் இந்த பொருளாதார சீரழிவுக்கு அந்நாடு வரம்பற்று வாங்கிய கடனே காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனா வங்கிகளிடம் அதிகமான கடன் பெற்றது முக்கிய காரணமாகும். எந்த வருவாயும் வராத திட்டங்களுக்கு தொடர்ந்து வாங்கிய கடன் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் காணாத பெரும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.
கழுத்தை நெறிக்கும் கடன்
இலங்கையை பொறுத்தவரையில் இந்த ஆண்டு 4 பில்லியன் டாலர் மதிப்புடைய கடனை திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ஜூலையில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் சர்வதேச தங்கப்பபத்திர கடன் உள்ளது. இலங்கை கடந்த 2007-ம் ஆண்டு முதல் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி செலவு செய்து வருகிறது.
மொத்தமாக தங்கப் பத்திரங்கள் மூலம் 11.8 டாலர்கள் பில்லியன் மதிப்புள்ள கடனை இலங்கை வாங்கிக் குவித்துள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியில் 14.3 சதவீத பங்குடன் அதிக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனாவிடம் அதிகமாக கடன் பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது.
சீனாவிற்கு இலங்கை செலுத்த வேண்டிய மொத்தக் கடன் 8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. இது இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனான 45 பில்லியன் அமெரிக்க டாலர்களில் கிட்டத்தட்ட ஆறில் ஒரு பங்காகும். சீனாவிற்கு மட்டும் 5 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் கடன்பட்டுள்ளது. இதில் 5 பில்லியன் அளவுக்கு நேரடியாக டாலர்களாக பெற்றத் தொகையாகும்.
சீனாவிற்கு இலங்கை உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை சுமார் 400 முதல் 500 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள கடன் இந்தியா போன்ற நாடுகளுக்கும் உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடு உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களுக்கும் இலங்கை செலுத்த வேண்டும்.
இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கைக்கு ஜனவரி முதல் 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் மற்றும் 500 மில்லியன் அமெரிக்க டாலரில் கடன் வழங்கியுள்ளது. இதுமட்டுமின்றி 2.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் உதவி வழங்கவும் உறுதியளித்தள்ளது. கடந்த மாதம், உணவு, மருந்துகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியாவுடன் 1 பில்லியன் அமெரிக்க டாலர் கடனாக பெற இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நிலையில் ஒப்பந்தப்படி ஜூலை மாதத்துக்குள் இலங்கை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகை பெரிய அளவில் உள்ளது. இந்த தொகை இலங்கையின் கழுத்தை நெறிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டதாக அந்நாட்டின் மத்திய வங்கி ஏற்கெனவே கவலை தெரிவித்துள்ளது. குறிப்பாக சீனாவிடம் பெற்ற கடனுக்கான வட்டியுடன் ஜூலையில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும்.
நெருக்கடி தரும் சீனா
ஜூலை மாதத்தில் முதிர்ச்சியடையும் 1 பில்லியன் டாலர் தங்கப்பத்திரம் உட்பட இந்த ஆண்டு அதன் டாலர் மதிப்பிலான கடன் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை 6 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உள்ளது. இதையும் கூட செலுத்தும் நிலையில் இலங்கை தற்போது இல்லை என்று ரேட்டிங் ஏஜென்சிகள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடனை திருப்பிச் செலுத்துவதில் எந்த சலுகையும் வழங்க முடியாது என இலங்கைக்கு சீனா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கடனை செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும், வட்டி உட்பட சில தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை சீனா பதிலளிக்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம் வட்டி உட்பட உடனடி தேவைக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.
இலங்கைக்கான சீன தூதர் மார்ச் இறுதி வாரத்தில் இலங்கை நிதித்துறை அதிகாரிகளை சந்தித்தபோது இதனை உறுதி செய்ததாக தெரிகிறது. இலங்கையின் கடன் சுமை குறித்து ஹாங்காங் போஸ்ட்டின் சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
லாபமற்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதற்காக சீனாவிடம் இருந்து பொறுப்பற்ற முறையில் கடன் வாங்கியதன் இறுதி விளைவுதான் இலங்கையின் இந்த நிலைக்கு காரணம். இலங்கையின் நிதி நெருக்கடியானது பல காரணங்களினால் ஏற்பட்டுள்ள போதிலும், அது இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கை உரிய முறையில் மேற்கொள்ளாததே முக்கிய காரணம்.
முக்கியமாக சீனாவின் கடன் பொறியில் இலங்கை சிக்கிக் கொண்டதன் விளைவாகும். ஏழை நாடுகளை கடனில் சிக்க வைப்பது, நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்ய மறுப்பது, பின்னர் கடன் வாங்கிய நாட்டின் உள்கட்டமைப்பைக் கட்டுப்படுத்துவது என்ற சீனாவின் திட்டமாகும். இதனால் இலங்கையில் இதுவரை கண்டிராத மோசமான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தெற்காசியாவில், இந்தியப் பெருங்கடல் மற்றும் இந்தோ-பசிபிக் ஆகியவை போட்டியின் மையப்பகுதிாயாக இருப்பதால் அங்கு தனது செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இதன் மூலம் சீனா பயன்படுத்திக் கொள்கிறது.
சீனா தனது பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களை மனதில் கொண்டே கடன்கள் வழங்கப்படுகின்றன. சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முயற்சி, பெரும் கடன்கள், கட்டமைப்பு என்ற பெயரில் பொருளாதார ஊதாரித்தனம் ஆகியவை அதனுடன் நட்பு பாராட்டும் நாட்டை பெரும் நெருக்கடிக்குள் தள்ளி விடும். தெற்காசியாவில் உள்ள எந்தவொரு தேசத்திற்கும் இலங்கையின் பொருளாதார அவலங்களை காணும்போது அவர்களது கண்களைத் திறக்க ஏதுவாக இருக்கும். இந்த சிக்கலில் இருந்து மீண்டு இலங்கை இயல்பு நிலைக்கு வருவதற்கு பல ஆண்டுகள் காலம் எடுக்கும்.
இலங்கையின் மோசமான அவலநிலை பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கு உரத்த எச்சரிக்கை மணியை அனுப்பியுள்ளது. பாகிஸ்தானிலும் இலங்கையைப் போலவே, பொருளாதார வாக்குறுதியின் பெரும்பகுதி சீன கடன்கள் அடிப்படையாகக் கொண்டது.
பாகிஸ்தானின் நிலை மிகவும் ஆபத்தானது. 27.3 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களுடன் பெல்ட் அண்ட் ரோடு உதவி பெறும் நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago