இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்ற துணை சபாநாயகர் நிராகரித்தார். இதையடுத்து, இம்ரான் கான் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் உத்தரவிட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் இணைந்து புதிய பிரதமரை அறிவித்துள்ளதால் அங்கு பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக எண்ணெய், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 184.79 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவி வந்தது. பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளும் மேற்கொண்டன. பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான் கானுக்கு ஆதரவாக இல்லை. இதனால் அவர், எப்போது வேண்டுமானாலும் பதவி விலகுவார் என்று செய்திகள் வெளியாகி வந்தன.
இதனிடையே, பிரதமர் இம்ரான்கானை பதவிநீக்கம் செய்வதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 எம்.பி.க்களில் இம்ரான் கானுக்கு 140 எம்.பி.க்கள் ஆதரவும், எதிர்க்கட்சிகளுக்கு 200 எம்.பி.க்களின் ஆதரவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, இம்ரான் கான் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றம் நேற்று காலை 11.30 மணி அளவில் கூடியது. அப்போது எதிர்க்கட்சிகளால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை ரத்து செய்வதாக நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் சூரி அறிவித்தார். இந்த தீர்மானம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 5-க்கு எதிரானது என்பதால் அதை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர். ‘‘தீர்மானத்தை துணை சபாநாயகர் நிராகரித்தது செல்லாது. ஷெபாஸ் ஷெரீப்பை நாட்டின் புதிய பிரதமராக நாங்கள் நியமிக்கிறோம்’’ என்று அவர்கள் அறிவித்தனர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களால் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்ட ஷெபாஸ் ஷெரீப், அவையில் பேசினார்.
அப்போது பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் ஷெர்ரி ரெஹ்மான், தங்களுக்கு 197 எம்.பி.க்களின் ஆதரவு இருப்பதாகவும், நாடாளுமன்ற புதிய சபாநாயகராக பிஎம்எல்-என் கட்சி எம்.பி.ஆயாஸ் சாதிக்கை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து ஆயாஸ் சாதிக், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்துவதாக அறிவித்தார். இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து கூச்சல் - குழப்பம் நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஏப்ரல் 25-ம் தேதி வரை பாகிஸ்தான் நாடாளுமன்றம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதிபருக்கு கடிதம்
இந்த பரபரப்பான சூழலில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிபர் ஆரிப் ஆல்விக்கு பிரதமர் இம்ரான் கான் கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தான் மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிபருக்கு எழுதிய கடிதத்தில் இம்ரான் கான் கூறியுள்ளதாவது: நாடாளுமன்ற துணைத் தலைவரின் முடிவை ஒவ்வொரு பாகிஸ்தானியரும் வரவேற்றுள்ளனர். நம்பிக்கையில்லா தீர்மானம் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான வெளிநாட்டுச் சதியாகும். நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரிக்கும் முடிவு சரியானதே.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும். நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும். ஜனநாயக முறைப்படி இந்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். பாகிஸ்தான்மக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
பாகிஸ்தானை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக அதிபர் ஆரிப் ஆல்வி உடனடியாக அறிவித்துள்ளார். இன்னும் 90 நாட்களில் பாகிஸ்தானில் தேர்தல் நடத்தப்படும் என்று தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் பரூக் ஹபீப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. பாகிஸ்தானில் தேர்தல் நடக்கும் வரை இம்ரான் கான் பிரதமராக தொடர்வார் என தகவல்கள் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்துள்ளன.
புதிய பிரதமராக ஷெபாஸ்ஷெரீப் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் அவர்பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளதால் பாகிஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள ஷெபாஷ் ஷெரிப், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட்டில் இருந்து அரசியல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலகக் கோப்பையை 1992-ல் பெற்றுத் தந்தவர் இம்ரான் கான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். இதற்கு நீதிக்கான அமைப்பு என்று பொருள். சுருக்கமாக இதை பிடிஐ என்று கட்சித் தொண்டர்கள் அழைத்து வருகின்றனர்.
கடந்த 2002-ல் நடந்த தேர்தலில் இக்கட்சிக்கு ஒரேயொரு எம்.பி. கிடைத்தார். அடுத்து 2007-ல் நடந்ததேர்தலில் 80 எம்.பி.க்களும் கிடைத்தனர். 2013 தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்தார் இம்ரான் கான். 2018-ல் நடந்த தேர்தலில் 116 இடங்களில் வெற்றிபெற்று, சிறு கட்சிகளின் உதவியோடு பிரதமர் ஆனார். சுமார் 4 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில், இம்ரான் கான் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
3 திருமணம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இதுவரை 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியான ஜெமிமா கோல்ட்ஸ்மித்துக்கு இம்ரான் கான் மூலம் 2 மகன்கள் உள்ளனர். 1995-ல் ஜெமிமாவை மணந்த இம்ரான் கான் 2004-ல் விவாகரத்து செய்தார்.
பின்னர் பத்திரிகையாளர் ரெஹம் கானை மணந்தார். இருவரும் 2018-ல் விவாகரத்து பெற்றனர். அதன்பின்னர் 2018-ல் தனது ஆன்மீக குருவான புஷ்ரா பீபி கான் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் இம்ரான் கான். தற்போது அவரையும் பிரிந்து இம்ரான் தனியாக வசித்து வருவதாக தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago