பயங்கரவாத தடுப்புச் சட்டம் அன்று தமிழர்களை வதைக்க... இன்று மக்களை ஒடுக்க... - இலங்கை நிலவரம் பகிரும் தமிழர்

By குமார் துரைக்கண்ணு

கொழும்பு: "அரசுக்கு எதிராக நியாயமான காரணங்களுக்குப் போராடும் மக்கள், எதிர்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பதற்காகவே இலங்கை அரசு தற்போது அவசர நிலையைக் கொண்டு வந்துள்ளது" என்று இலங்கைத் தமிழரும், அரசியல் ஆர்வலருமான ஒருவர் கள நிலவரத்தை விவரித்துள்ளார்.

இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை எதிர்த்து மக்கள் போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணிக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்றும் ஓர் அறிக்கையை கொடுத்திருந்தார்கள். இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, அவசரநிலை பிரகடன அறிவிப்பு வெளியானது. பொது அமைதியைப் பாதுகாக்கவும், அத்தியாவசியப் பொருட்கள், சேவைகள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவசர நிலையை அறிவித்துள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொழும்புவில் வசித்துவரும் பெயர் வெளியிட விரும்பாத இலங்கைத் தமிழரும், அரசியல் ஆர்வலருமான ஒருவர் கள நிலவரம் குறித்து நம்மிடம் பகிர்ந்தவை: "இலங்கை அதிபர் அறிவித்துள்ள இந்த அவசரநிலை பிரகடனம், இங்குள்ள விலைவாசி உயர்வை ஒருபோதும் கட்டுப்படுத்தப்போவதில்லை. காரணம் இலங்கையைப் பொறுத்தவரை அத்தியாவசியப் பொருட்கள் தொடங்கி, பழங்கள், காய்கறிகள், எலக்ட்ரிக் பொருள்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் என பெரும்பாலனவை இறக்குமதி சார்ந்தவை.

இந்நிலையில், நாட்டின் அந்நியச் செலாவணி மிகவும் குறைவு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் வர்த்தகம் முற்றிலும் முடங்கிவிட்டது. பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்களை எந்த அரசுகளும் எடுக்காததன் விளைவுதான் இலங்கையின் தற்போதைய நிலைக்கு காரணம். இதனால் நாடு தற்போது கையறு நிலையில் உள்ளது. இந்தியா, வங்கதேசம், சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிடம் கடன் கேட்கும் நிலைக்குச் சென்றுவிட்டது. அப்படியே கடன் வாங்கினாலும், எப்படி திரும்பச் செலுத்தப்போகிறது என்பது தெரியவில்லை.

நாட்டில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் 4500 ரூபாய்க்கும், பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.280-க்கும் விற்பனையாகிறது. ரூ.1200-ஆக இருந்த சிமென்ட் விலை ரூ.3000 ஆக அதிகரித்துள்ளது. இதனால், விஷம் பரவும் வேகத்தில் அனைத்துப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டது. பொருட்களுக்கான விலைகளை வியாபாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு தீர்மானிக்கின்றனர்.

இந்நிலையில்தான், கொந்தளிப்பு உணர்வுக்கு ஆளான மக்கள் தன்னெழுச்சியாக நேற்றுமுன்தினம் இரவு அதிபர் கோத்தபய ராஜபக்சேவைக் கண்டித்து ஜனநாயகபூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவத்தில் 45-க்கும் மேற்பட்டவர்களை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய இலங்கை அரசாங்கம் சிறையில் அடைத்தது. இதில் 10, 15 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 40 வருட காலமாக தமிழர்களை வதைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தச் சட்டம் தற்போது சிங்களர்கள் மீது போடப்பட்டுள்ளது. மக்கள் போராட்டத்தை இந்த அரசங்காத்தால் எதிர்கொள்ள இயலவில்லை. அரசைக் கண்டித்து இன்றுகூட எதிர்கட்சித் தலைவர் சகித் பிரேமதாசா தலைமையில் பிரமாண்ட போராட்டம் நடைபெற்றது. இலங்கை அரசு நொண்டிக் கழுதை சறுக்கியதற்கு சாக்கு சொல்வதைப் போல, எதிர்கட்சிகள், மக்களுக்கு எதிராக அவசரநிலை பிரகடனத்தை அறிவித்து தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளது.

கடந்த 1977-78 முதல் 2009-2010 வரை இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டம் தற்காலிகமான சட்டம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, 2009-2010-இல் யுத்தம் முடியும் வரை. இந்தச் சட்டத்தின்கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுபவர்களை, எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் அடைக்க முடியும். இதன்படி ஏராளமான தமிழர்களை இலங்கை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது.

அவசரநிலை பிரகடனப்படுத்தியிருப்பதால், தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட முடியாது. எதிர்கட்சிகளும், மக்களும் சுதந்திரமாக கூடுவது தடை செய்யப்படும். 5 முதல் 10 நபர்கள் கூடினால் கைது செய்யப்படுவார்கள். பத்திரிகைகளில் வரும் செய்திகள் தணிக்கை செய்யப்படும். இந்நிலையில், அரசுக்கு எதிராக நியாயமான காரணங்களுக்குப் போராடும் மக்கள், எதிர்கட்சிகளின் குரல்வளையை நெறிப்பதற்காக தற்போது இலங்கை அரசு அவசரநிலையைக் கொண்டுவந்துள்ளது.

30 துறைகளைக் கொண்ட இலங்கை அரசில் பெரும்பாலும் அங்கம் வகிப்பவர்கள் ராணுவ அதிகாரிகள்தான். பாகிஸ்தானைப் போல இலங்கையில் நடந்து வந்ததும் ராணுவ ஆட்சிதான். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த அவசரநிலை பிரகடனம் மூலம் கொஞ்சம் நஞ்சமிருந்த ஜனாயாகத்தையும் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது இலங்கை அரசு.
ஆனால், இந்த அறிவிப்பால், விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவோ, பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவோ தற்போதைய அரசால் முடியாது. எப்படியிருப்பினும் நாடும் நாட்டு மக்களும் தற்போது பேராபத்தான சூழலில் இருந்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று அனைத்து அமைச்சர்களையும் அழைத்து அதிபர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இதன்பிறகு அமைச்சர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் வெளியே எங்கும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்தக் கூட்டம் தொடர்பான முழுமையான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை" என்று அவர் கூறினார்.

இலங்கையில் ஊரடங்கு: இலங்கையில் நாளை பொதுமக்கள் மிகப்பெரிய அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இலங்கை அரசு, இன்று (ஏப்.2) மாலை 6 மணியிலிருந்து வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

14 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்