3 மின் திட்டப் பணிகளில் இந்தியாவுடன் இலங்கை அரசு ஒப்பந்தம்: சீன நிறுவனத்துக்கு வழங்கிய பணிகள் ரத்து

By செய்திப்பிரிவு

கொழும்பு: இலங்கை யாழ்ப்பாணத்தில் உள்ள 3 தீவுகளில் மரபுசாரா மின்னுற்பத்தி திட்டங்கள் மேற்கொள்ள சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் அதனை ரத்து செய்த இலங்கை அரசு, அப்பணிகளை இந்திய நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் நேற்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் முன்னிலையில் கையெழுத் தாகின.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் உள்ள நைனா தீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத் தீவு உள்ளிட்ட பகுதிகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறைவேற்ற சீனாவைச் சேர்ந்த சினோசோர்-எடெக்வின் என்ற நிறுவனத்துக்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இது ஆசிய வளர்ச்சி வங்கி (ஏடிபி) ஆதரவுடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் நடக்கும் மிகப்பெரிய மின்னுற்பத்தி திட்டமாகும்.

இந்த திட்டப்பணிகளை தமிழகத்தை ஒட்டிய பாக் வளைகுடா பகுதியில் சீன நிறுவனம் அமைக்க ஒப்புதல் அளிப்பது இப்பகுதியில் பதற்றமான சூழலை உருவாக்கும் என மத்திய அரசு அப்போதே தனது அதிருப்தியை இலங்கை அரசுக்கு தெரிவித்தது.

இந்நிலையில் இந்தத் திட்டப் பணிகளை கடனுக்குப் பதிலாக மானிய அடிப்படையில் நிறைவேற்றித் தர இந்தியா முன்வந்தது. இதையடுத்து இப்பணிகளை மேற்கொள்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் இலங்கை அரசு நிறுத்தி வைத்திருந்தது. சமீபத்தில் இலங்கைக்கான சீன தூதர் இது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இலங்கையின் இந்த நடவடிக்கை வெளிநாட்டு முதலீட்டை பாதிக்கும் என குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே கடல்சார் மீட்பு கூட்டு மையம் (எம்ஆர்சிசி) அமைக்க இந்தியா, இலங்கை அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. இதனால் இப்பகுதியில் கூட்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், வடக்கு பகுதியில் உள்ள பாய்ன்ட் பெட்ரோ, பெசாலை, குருநகர் பகுதிகளில் மீன்பிடி துறைமுகம் அமைக்க இந்தியா உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணம் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த 3 மின்திட்டப் பணிகளை இந்திய நிறுவனத்துக்கு இலங்கை அரசு வழங்கியது. இதற்கான ஒப்பந்தம் இருநாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. முன்னர் சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

ஏற்கெனவே என்டிபிசி நிறுவனம் கிழக்கு சம்பூர் நகரில் சூரிய மின்னுற்பத்தி திட்டப் பணியை அமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. அதேபோல அதானி குழுமம் வடக்கு பிராந்தியத்தில் மன்னார் மற்றும் பூநகரி பகுதியில் மின்னுற்பத்தி திட்டத்தை நிறைவேற்ற ஒப்பந்தம் செய்துள்ளது.

அமைச்சர் சுற்றுப்பயணம்

இந்நிலையில் இலங்கையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த ஞாயிற்றுக் கிழமை முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்நாட்டு அரசியல் தலைவர்களுடன் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார். அத்துடன் அங்கு நடைபெறும் 7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்கும் பிஐஎம்எஸ்டிஇசி மாநாட்டிலும் பங்கேற்றார். இந்த மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்டோ ரும் பங்கேற்றனர்.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் (டிஎன்ஏ) அண்மையில் அதிபர் கோத்தபய ராஜபக்ச பேச்சு நடத்தியதற்கு மத்திய அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது. இப்பேச்சுவார்த்தை யில் அரசியல் கைதிகள் விடுதலை, நில பயன்பாடு, காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை, 13-வது விதியை அமல்படுத்துவது மற்றும் வெளிநாட்டு முதலீடு குறித்து விவாதிக்கப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். அதேநேரம் அதிபர் கோத்தபய ராஜபக்சவை ஜெய்சங்கர் சந்தித்து பேசியபோது என்னென்ன அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

தமிழர்களுக்கு சம உரிமை வழங்குவது என்பது அதிகாரப் பகிர்வு அளிப்பதன் மூலமும் அரசியலமைப் பின் 13-வது பிரிவை செயல்படுத்து வதன் மூலமும்தான் சாத்தியமாகும் என்று முன்னதாக நடந்த செய்தியாளர் கள் சந்திப்பின்போது ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்குப் பிறகு ஜெய்சங்கர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததாவது: தமிழர்கள் எதிர்பார்பார்ப்பது சரிசமமாக நடத்தப்படுவது, அனைவருக்கும் ஒரே சட்டம், அமைதி மற்றும் மதிப்புடன் நடத்துவது ஆகியவை மட்டுமே. 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டபோது இலங்கைத் தலைவர்களிடம் இதே கருத்தைதான் வலியுறுத்தினேன். இருப்பினும் இது முற்றிலும் இலங்கை அரசின் உள்ளார்ந்த விஷயம். அதேசமயம் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய் யப்பட வேண்டியதும் அவசியம். இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘இலங்கை அரசின் செயல்பாடுகளை வரவேற் கிறேன். இப்போது நல்ல அறிகுறிகள் தென்படுகிறது. குறிப்பாக அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளுக்கும் உரிய தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன். இந்திய அரசு எப்போதும் இலங்கை அரசின் செயல்பாடுகளுக்கும், இலங்கைத் தமிழர்கள் தங்களது கோரிக்கையை அடைவதற்கும் உறுதுணையாக இருக்கும். ஐக்கிய இலங்கையில் தமிழர்கள் சமமாக நடத்தப்படுவது, ஒரே சட்டம், அமைதி, மதிப்புடன் நடத்தப்படுவது உள்ளிட்ட அனைத்துமே அந்நாட்டின் சட்ட விதிகளுக்குட்பட்டு மேற்கொள்ளப்பட வேண்டும். இரு நாடுகளிடையிலான நல்லுறவு மேம்பட இது வழிவகுக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

2019-ம் ஆண்டு இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு தமிழர் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அமைச்சருக்கு கவுரவம்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரமதர் மஹிந்தா ராஜபக்சவை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியா அளித்த 100 கோடி டாலர் உதவிக்கு இலங்கை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் கூடுதலாக 150 கோடி டாலர் கடன் வழங்க வேண்டும் என்றும் அப்போது அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக இலங்கை வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை அந்நாட்டின் 4 மூத்த அமைச்சர்கள் காமினி லொகுகே, ஜான்ஸ்டன் பெர்ணான்டோ, பிரசன்ன ரணதுங்க மற்றும் டி.வி.சனகா ஆகியோர் விமான நிலையம் சென்று வரவேற்றனர். இது இந்திய அமைச்சருக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவமாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

4 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்