உக்ரைனில் மருத்துவமனைகள் மீதான தாக்குதல் அதிகரிப்பு: அதிர்ச்சித் தகவல்களுடன் WHO கவலை

By செய்திப்பிரிவு

ஜெனிவா: உக்ரைனில் மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அமைப்புகள் மீதான தாக்குதல்கள் தினமும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவப் படைகள் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் மரியுபோல். கீவ், கார்கிவ் பகுதிகள் அதிகம் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன. இந்தத் தாக்குதல்களின்போது பொதுமக்கள் குறிவைக்கப்படவில்லை என சர்வதேச சமூகத்தின் முன்பாக ரஷ்யா தெரிவித்து வருகிறது. இருந்த போதிலும் உக்ரைனின் போர் முனையில் இருந்துவரும் தகவல்கள் மற்றும் காணொலிகள் நிலைமையின் தீவிரத்தை வெளியுலகிற்கு அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கிய நாளில் இருந்து, இதுவரை அங்கு மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவர்களைக் குறிவைத்து 70-க்கும் அதிகமான தனிப்பட்ட தாக்குதல்கள் நடந்துள்ளன. இந்தத் தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றன என்று WHO தெரிவித்துள்ளது.

மருத்துவமனை மீதான தாக்குதல்: கார்கிவ் நகரின் தெற்கே உள்ள இசியேம் என்ற இடத்தில் இருக்கும் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட உக்ரைனின் மத்திய மருத்துவமனை ஒன்று மார்ச் 8-ம் தேதி தாக்குதலுக்குள்ளானது. ரஷ்யப் படைகள் மருத்துமனையை தாக்கியதாக உக்ரைனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதல்கள் குறித்து நகரின் துணைமேயர் விளாடிமிர் மட்சோகின், "முதல் தாக்குதலில் மருத்துவமனையின் ஜன்னல்கள் வெடித்துச் சிதறின. இரண்டாவது தாக்குதலில் அறுவை சிகிச்சை அறைகள் அழிக்கப்பட்டன" என்றார். தாக்குதல் நடந்தபோது மருத்துவமனையில் பொதுமக்கள், போரில் காயமடைந்த வீரர்கள், கர்ப்பிணிகள், புதிதாக பிறந்த குழந்தைகள் சிகிச்சையில் இருந்ததாக உக்ரைனின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நவீன போர் யுக்தி: கடந்த 24-ம் தேதியில் இருந்து உக்ரைனின் நிலவரத்தைக் கண்காணித்து வரும் உலக சுகாதார நிறுவனம், உக்ரைனின் சுகாதார அமைப்புகள், மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் மருந்து விநியோகக் கடைகள் 72 தனிப்பட்டத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என உலக சுகாதார நிறுவனத்திற்கான உக்ரைன் பிரதிநிதி ஜார்னோ ஹபிச்ட் சர்வதேச ஊடகமான பிபிசி-யிடம் தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் நடக்கும் போர், இரு நாடுகளுக்கு இடையிலான சர்வதேச ஆயுத மோதல் என்பதால் ஜெனிவா ஒப்பந்தம் பொருந்தும். இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் விரிவுபடுத்தப்பட்ட ஜெனிவா ஒப்பந்தம், பொதுமக்கள், ராணுவ வீரர்களின் அடிப்படை உரிமைகளை வகுத்து, காயம்பட்ட வீரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியது. ரஷ்யாவும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன்படி, போரின்போது எந்தக் காரணத்திற்காகவும், பொதுமக்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் தாக்கப்படக்கூடாது. எல்லா நேரங்களிலும் அவைகளின் பாதுகாப்பும் மதிப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கிறது.

ஆனாலும், இந்த சர்வதேச சட்டத்திலும் சில ஓட்டைகள் இருக்கின்றன என்கிறார், லண்டனில் உள்ள ராணிமேரி பல்கலைக் கழகத்தின், சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை பேராசிரியர் நேவ் கார்டன். அவர் கூறும்போது "இன்றைய போர்ச்சூழலில் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவப்பிரிவுகள் தீக்கிரையாக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.

மருத்துவமனையின் முன்னால் ராணுவ வீரர்கள் இருந்தாலோ, மருத்துவமனை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்தாலோ அவை தாக்கப்படலாம். காயமடைந்த வீரரின் கையில் தொடர்பு சாதனம் ஏதும் இருந்து, அவர் அருகில் இருக்கும் பிற படைகளுக்கு தகவல் தரமுடியும் என்பதால் தாக்குதல் நியாப்படுத்தப்படுகிறது. ஒப்பந்தத்தின் இந்த ஓட்டைகள் மருத்துவமனை மீதான தாக்குதல்களை சட்டப்பூர்வமாக்குகின்றன” என்கிறார்.

ஜெனிவா ஒப்பந்தத்தை மீறி மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் நவீனப் போரின் யுக்தியாக மாறியுள்ளது என உலக சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது.

இந்தத் கவலையை உண்மை என்கிறது உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைக்கான இயக்குநர் மைக்கேல் ரியானின் கூற்று. கடந்த வாரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "போர்ச்சூழலில் உலக அளவில் இந்த அளவிற்கு சுகாதார அமைப்புகள் தாக்கப்படுவதை இதுவரை பார்த்தில்லை" என்றார்.

மருத்துவமனைகளின் மீதான தாக்குதல்கள் நம்பிக்கைகள் அழிக்கப்படுவது, மற்றும் மனித உரிமைகளை மறுப்பது பற்றியான எச்சரிக்கைகளாகும். ஏனெனில் போர் இருநாட்டு வீரர்களுக்கு இடையில் மட்டும் நடப்பதில்லை.

தகவல், படங்கள் உறுதுணை: பிபிசி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE