'நான் பணயக் கைதியாக வருகிறேன்... மரியுபோல் குழந்தைகளை வெளியேற விடுங்கள்' - உக்ரைன் போலீஸ் அதிகாரி கதறல்

By செய்திப்பிரிவு

மரியுபோல்: உக்ரைனின் தெற்கு துறைமுக நகரமான மரியுபோலில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படைகள் நகரத்தில் இருந்து குழந்தைகள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்கு ஈடாக தான் பணயக் கைதியாக வரத் தயார் என்றும் உக்ரைனின் போலீஸ் ஜெனரல் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான உக்ரைனின் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதலில் தெற்கு துறைமுக நகரமான மரியுபோல், தலைநகர் கீவ், கார்கிவ் போன்ற நகரங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.

மரியுபோல் நகரில் மட்டும் சுமார் 1,00,000 பேர் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதில் பெண்களும் குழந்தைகளும் அடக்கம். இதற்கிடையில், உக்ரைனின் போலீஸ் ஜெனரலான வியாசெஸ்லாவ் அப்ரோஸ்கின் என்பவர், தன்னைப் பணயக் கைதியாக வைத்துக் கொண்டு மரியுபோல் நகரில் இருந்து குழந்தைகள் வெளியேற ரஷ்யப் படைகள் அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள வியாசெஸ்லாவ், "என்னுடைய வாழ்க்கை எனக்கு மட்டுமே சொந்தமானது. இன்னும் மரியுபோல் நகரில் இருக்கும் குழந்தைகளின் உயிர்களுக்கு ஈடாக அதை வழங்குகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்யப் படைகள் தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியதிலிருந்து மரியுபோல்வாசிகள் நகரின் வெளியே பெரிய புதைகுழிகளில் உடல்களை வீசி வருகின்றனர். மரியுபோல்வாசிகள் தங்களுடைய அன்பிற்குரியவர்களுக்கு முறையான இறுதிசடங்கு கூட செய்யமுடியவில்லை என ஏஎஃப்பி நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE