கீவ்: உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரஷ்யா ராணுவ நடவடிக்கையை அறிவித்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய நாடு ஒன்று சந்தித்துள்ள மிகப் பெரிய போர் என்ற பெயர் மட்டும் தான் இந்த ஒரு மாத காலத்தின் சாட்சியாக உள்ளது.
சுற்றுலா தலமாகவும், வெளிநாட்டு மாணவர்களை கல்விக்கு ஈர்க்கும் களமாகவும், சூரியகாந்தி எண்ணெய் வித்துகளின் உற்பத்திக் கலனாகவும் உக்ரைன் அறியப்பட்டது. ஆனால் இன்று உக்ரைன் இடிந்து, எரிந்த கட்டிடங்கள் நிறைந்த நகரங்கள், மக்களற்ற தெருக்கள், ஆங்காங்கே பங்கர்களில் உணவின்றி, தண்ணீரின்றி தவிக்கும் மக்கள், பதுங்குழிகளில் விளையாடும் குழந்தைகள் என்று உருக்குலைந்துள்ளது.
மொத்தம் 4.5 கோடி மக்கள் தொகை கொண்ட உக்ரைனிலிருந்து 1 கோடி பேர் வெளியேறிவிட்டனர்.
இந்த ஒரு மாத போர் 'சாதித்தது' தான் என்ன? பிப்ரவரி 24: உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையை அறிவித்தது.
பிப்ரவரி 26: ரஷ்ய வங்கிகளை ஸ்விஃப்ட் நடவடிக்கையிலிருந்து விலக்கி தனிமைப்படுத்தியது மேற்கத்திய நாடுகள்.
பிப்ரவரி 27: ஐரோப்பிய ஒன்றிய வான்வழிப் பரப்பு ரஷ்யா விமானங்களுக்கு நோ சொல்லின.
பிப்ரவரி 28: ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. ரஷ்யா, உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தை தொடங்கியது. அதே நாளில் ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் சென்ட்ரல் வங்கியுடனான பணப் பரிவர்த்தனைகளை தடை செய்தது.
மார்ச் 1: கார்கிவ், மரியுபோல், கெர்சான் நகரங்கள் ரஷ்யப் படைகளின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகின.
மார்ச் 2: கெர்சான் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றியது. ரஷ்யாவிடம் வீழ்ந்த முதல் உக்ரைன் நகரானது கெர்சன். தொடர்ந்து மரியுபோல் நகரையும் சுற்றி வளைத்தது.
மார்ச் 3: சர்வதேச நீதிமன்றம் ரஷ்ய போர்க் குற்றங்களை ஆராய உக்ரைனுக்கு ஒரு குழுவை அனுப்பியது.
மார்ச் 4: ட்விட்டர், ஃபேஸ்புக், வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகிய சமூக வலைதளங்கள், பிபிசி, டட்ஷே வெல் போன்ற ஊடகங்களுக்கு ரஷ்யாவில் தடை விதித்தார் புதின். ரஷ்ய நாடாளுமன்றத்தில் ஊடகங்களைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது.
மார்ச் 5: அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் அந்தோணி பிளின்கன் உக்ரைன் வெளியுறவுச் செயலர் டிமிட்ரோ குலேபாவில் போலந்து எல்லையில் சந்தித்துப் பேசினார்.
மார்ச் 7: சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் 139 டாலர் என்றளவை எட்டியது. உக்ரைனில் வெளியேறிய அகதிகள் எண்ணிக்கை 10 லட்சம் அளவைக் கடந்த நாள்.
மார்ச் 8: சுமி நகரிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பு வழித்தடங்கள் வாயிலாக வெளியேறினர்.
மார்ச் 9: ரஷ்ய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் மகப்பேறு மருத்துவமனை தகர்க்கப்பட்டது.
மார்ச் 10: மரியுபோல் நகர் மீது ரஷ்யா கடும் தாக்குதல் நடத்தியது. மக்கள் வெளியேறும் பாதைகளில் குண்டு மழை பொழிந்தது ரஷ்யா.
மார்ச் 11: மெலிட்டோபோல் நகர மேயரை ரஷ்யப் படைகள் கடத்தின. சிரியாவிலிருந்து வந்த 16000 பேர் ரஷ்ய ராணுவத்துடன் உக்ரைன் போரில் இணைந்தனர்.
மார்ச் 12: மரியுபோல் நகரில் ஏபி செய்தியாளர், மருத்துவப் பணியாளர்கள் எனப் பலரும் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
மார்ச் 13: உக்ரைனின் மேற்கு பகுதியை குறிவைத்து ரஷ்யா தாக்குதலைத் துவக்கியது. ஒரே நாளில் 35 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
மார்ச் 14: செச்சன் தலைவரான ரம்சான் காடிரோவ் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யப் போரில் தாங்களும் இணைவதாக அறிவித்தார்.
மார்ச் 15: நேட்டோ மீது இனியும் நம்பிக்கையில்லை. நேட்டோவில் இணைய கெஞ்சப்போவதில்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்தார். நேட்டோவில் இணைய உக்ரைன் காட்டிய ஆர்வமும் போருக்கு முக்கியக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 16: ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாஸ்கோவில் மக்கள் மத்தியில் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புதின், போரை எதிர்க்கும் உள்நாட்டு மக்களை தேசத்துரோகிகள் என்றழைத்தார்.
மார்ச் 18: உக்ரைனின் மரியுபோல் நகரில் மக்கள் தஞ்சமடைந்திருந்த தியேட்டரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் பைடன் காணொலியில் ஆலோசித்தனர். பைடன் அப்போது சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார். ரஷ்யாவுக்கு உதவினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
மார்ச் 21: மரியுபோலில் சரணடையுமாறு ரஷ்யா விதித்த நிபந்தனையை உக்ரைன் புறக்கணித்தது.
மார்ச் 22: உக்ரைனிடன் ரசாயன, உயிரி ஆயுதங்கள் இருப்பதாக ரஷ்யா குற்றஞ்சாட்டுவது தான் அதைப் பயன்படுத்த எத்தனிக்கும் விளைவு என்று அமெரிக்கா ரஷ்யா மீது குற்றஞ்சாட்டியது.
மார்ச் 23: உக்ரைன் அதிபர் ஜெலஸ்ன்ஸ்கி, தங்கள் நாட்டின் மீதான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
ரஷ்ய வீரர்கள் 13,000 பேரையும் நூற்றுக்கணக்கான ரஷ்ய டேங்குகளையும் அழித்துள்ளதாக உக்ரைன் கூறுகிறது. உக்ரைனில் பொதுமக்களின் உயிரிழப்பு எண்ணிக்கை என்ற துல்லியத் தகவல் இல்லை. ஆனால், அன்றாடம் நாட்டை விட்டு வெளியேறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அடுத்தது, ரசாயன ஆயுதம், அணு ஆயுதம், உயிரி ஆயுதம் என ரஷ்யா எச்சரிக்கைகளை அள்ளி வீசுகிறது. இந்தச் சூழலில் போரை நிறுத்துவது மட்டுமே மக்கள் நலன் சார்ந்த முடிவாக இருக்க முடியும். தேசம் மக்களால் ஆனது. மக்களை இழந்து ஜெலன்ஸ்கி வெறும் தேசத்தை வைத்து என்ன செய்வார் என்ற கேள்விகளும் எழாமல் இல்லை.
ஆனால், ஜெலன்ஸ்கி சரணடைவது ரஷ்யா அடுத்ததாக லிதுவேனியா, லாட்வியா, ஈஸ்டோனியா போன்ற சிறிய பால்டிக் நாடுகள் மீதும் படையெடுக்கலாம் என்ற மமதையைக் கொடுக்கலாம் எனக் கூறுகின்றனர் அரசியல் நிபுணர்கள்.
இன்றுடன் ஒருமாதம் நிறைவடைந்துவிட்ட நிலையில் போர் யாருக்கும் வெற்றி தரவில்லை. வெற்றியைத் தரப்போவதுமில்லை. ராணுவ டாங்குகள் பேசிக் கொள்ளும் வரை உக்ரைன் இன்று தனது மக்களை அகதிகளாக அனுப்பிக் கொண்டே இருக்கும். ரஷ்யா சொந்த மக்களை பொருளாதார இழப்புகளுக்கு ஆளாக்கிக் கொண்டே இருக்கும் எனக் கூறுகின்றனர் போர் அரசியல் நிபுணர்கள்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago