"ஏமன் மக்கள் படும் வேதனை கற்பனை செய்ய முடியாதது. ஏமனில் மிருகத்தனமான மோதல்கள் தொடர்கின்றன; ஒவ்வொரு நாளும் அப்பாவி உயிர்கள் இழக்கப்படுகின்றன.” - ஐ.நா. சார்பாக ஏமனுக்கு மூன்று நாட்கள் பயணம் சென்ற ஏஞ்சலினா ஜூலி கூறிய வாக்கியம் இது.
”போரில் யாருமே வெற்றி பெறுவதில்லை” என்ற வாக்கியம் உள்நாட்டு போர்களுக்கு என்றும் பொருத்தமானதாகவே இருக்கும். உலகம் முழுவதும் ரஷ்யா - உக்ரைன் குறித்த போரை பேசிக் கொண்டிருக்கும் இதேவேளையில் ஏமனின் உள்நாட்டுப் போர் இந்த வாரம் 8-ஆம் ஆண்டுக்குள் நுழைந்திருக்கிறது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டுப் போர் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மன்சூர் ஹைதி தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது எமனின் அதிபராக அலி அப்துல்லா சாலே இருக்கிறார். 7 வருடங்களாக நடக்கும் இந்த உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியா அரசு செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
இவற்றுக்கிடையே ஐக்கிய அமீரக ஆதரவு பெற்ற ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வருகின்றனர். இவ்வாறு ஏமனில் அனைத்து புறங்களிலும் சண்டை நடக்கின்றது. ஆம், இந்தச் செய்தியை நீங்கள் படிக்கும் இந்த விநாடியில் கூட ஏமனில் எதாவது இடத்தில் குண்டு வெடித்திருக்கக் கூடும்; மக்கள் அலறி ஓட்டம் பிடித்திருப்பார்கள்.
7 வருடங்களாக நடக்கும் ஏமன் உள் நாட்டுப் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி இருக்கின்றனர். லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். என்றாவது ஒரு நாள் ஏமனில் அமைதி திருப்பும் என்று அயல் நாடுகளிலுள்ள ஏமன்வாசிகள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், போர்ச் சூழலில் வாழும் மக்களின் மன நிலையை எவ்வாறு இருக்கிறது..?
முகமது கைத் (20): "ஏமனில் போருக்குப் பிறகு பெட்ரோல் தட்டுப்பாடு அதிகமாகிவிட்டது. பெட்ரோல் இங்கு கள்ளச் சந்தையில் இரண்டு மடங்கு விலை அதிகமாக விற்கப்படுகிறது. போருக்கு முன்னர் நான் வெறும் மாணவன்தான். பெட்ரோலை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அப்போது ஏமனில் கள்ளச் சந்தை எல்லாம் இல்லை. ஆனால் எல்லாம் தலைகீழாகிவிட்டது. நான் இப்போது சாலையில் பெட்ரோல் விற்றுக் கொண்டிருக்கிறேன்."
அமின் (35): "நான் போர் காரணமாக இந்த டென்ட்டில்தான் வசிக்கிறேன். போர் எங்களை, எங்களது சொந்த வீட்டை விட்டும், சொந்த கிராமத்தை விட்டு வெளியே வரச் செய்தது. நான் இங்கு வந்தபோது விரைவில் வீடு திரும்பிவிடுவேன். இது தற்காலிகமானது என்று எண்ணினேன். ஆனால், 7 வருடங்கள் கடந்தும் போர் நிற்கவில்லை."
முஸ்தபா (38): "நான் ஓர் ஆசிரியர். ஆனால், தற்போது டைஸ் சந்தையில் பழம் விற்றுக் கொண்டிருக்கிறேன். போருக்கு பின்னர் எனக்கு பள்ளியில் சம்பளம் வழங்கப்படவில்லை. நான் என் பள்ளியிலிருந்து வெளியேறினேன். எனது வாழ்க்கையின் மோசமாக நாட்களை கடந்து கொண்டிருக்கிறேன். ஆனால், இந்த நாட்டில் உள்ள பிற ஆசிரியர்கள் போல எனக்கு சம்பளம் வரும் என்று நான் காத்திருக்கவில்லை. அந்தவகையில் நான் அதிர்ஷ்டசாலி."
ஹாஃப் சலே (11): "பிற சிறுமிகளை போல நானும் டென்ட்டில்தான் வசிக்கிறேன். எனது குடும்பத்திற்கு தண்ணீர் எடுப்பது போன்ற அன்றாட பணிகளுக்கு உதவுகிறேன். எனது குடும்பத்திற்கு உதவுவதே இப்போது எனது முன்னுரிமை."
ஏமன் போர் நிச்சயம் தீர்க்கக்கூடிய ஒன்று என்ற ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுக்கு நேர்மாறாக ஏமன் அரசு - கிளர்ச்சியாளர்களின் போக்கு உள்ளது. இதன் விளைவு ஏமனில் லட்சக்கணக்கான மக்களை பஞ்சத்தில் தள்ளியுள்ளது.
விரைவில் ஏமன் அரசு - ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே சுமுகமான பேச்சுவார்த்தை ஏற்பட்டு, ஏமனின் உள்நாட்டு போர் முடியும் வரும் என்று ஏமன்வாசிகள் நம்புவதுபோல் நாமும் நம்புவோம்..!
தகவல் உறுதுணை: அல் ஜஸீரா
தமிழில்: இந்து குணசேகர்
முக்கிய செய்திகள்
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago