பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராடுவதைத் தடுக்க ராணுவத்தை நிறுத்திய இலங்கை அரசு

By செய்திப்பிரிவு

கொழம்பு: இலங்கையில் பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ராணுவப் படையினரை நிறுத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டு வருவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு கிலோ கோழி இறைச்சி ரூ.1000-ஆகவும், தேநீர் ஒரு கப் ரூ.100 ஆகவும், ஒரு முட்டை விலை ரூ.36 ஆகவும் விற்கப்படுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

இலங்கையில் கேஸ் சிலிண்டர் தடுப்பாடு நிலவுவதால் நாட்டின் 90% உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழலுக்குச் பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கடந்த வாரம் அதிபர் மாளிகையில் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. அதன்படி, பெட்ரோல் பங்க்-குகளில் மக்கள் நடத்தும் போராட்டத்தைத் தடுக்க, அங்கு ராணுவப் படையினரை அனுப்ப இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கையில் பெட்ரோல் வாங்குவதற்கு நீண்ட நேரமாக வரிசையில் நின்ற இருவர் உயிரிழந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அனைத்துக் கட்சி கூட்டம்: நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அந்த அழைப்பை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளனர்.

முன்னதாக, நாட்டின் நிலவும் பொருளாதாரப் பற்றாகுறையைத் தடுக்க, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்கு முடிவெடுத்துள்ளதாகவும் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE