மாஸ்கோ: ரஷ்யா, உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகளிடையே நேற்று 16-வது நாளாக போர் நீடித்தது. இதனிடையே இருதரப்பும் பெலாரஸ், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாரவும், உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமைத்ரோ குலேபாவும் நேற்று முன்தினம் துருக்கி நாட்டில் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தச் சூழலில் ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸின் அதிபர் அலெக்சாண்டர் லுகாஸ்கென்கோ நேற்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோ சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசினார். இரு தலைவர்களும் உக்ரைன் விவகாரம் குறித்து நீண்ட நேரம் ஆலோசித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ரஷ்ய அதிபர் புதின் சிலமுக்கிய தகவல்களை பெலாரஸ்அதிபருடன் பகிர்ந்து கொண்டார்."ரஷ்யா, உக்ரைன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்த முழுவிவரங்களை பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்" என்று பெலாரஸ் அதிபரிடம் புதின் கூறியுள்ளார். ரஷ்ய ஊடகங்களில் இந்த செய்தி வெளியாகி உள்ளது.
அதிபர்கள் சந்திப்பு?
ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித்தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ரஷ்யா, உக்ரைன் பிரதிநிதிகள் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினர்.அதன்பிறகு இரு நாடுகளின் அமைச்சர்களும் சந்தித்து பேசினர். அடுத்ததாக இரு நாடுகளின் அதிபர்களும் சந்தித்து பேச வாய்ப்புள்ளது. இதை மறுக்கவில்லை.
உக்ரைனை ஆக்கிரமிப்பது எங்கள் நோக்கம் கிடையாது. எங்களது நியாயமான நிபந்தனைகளை உக்ரைனிடம் தெளிவாக எடுத்துரைத்துவிட்டோம். அந்த நாட்டின் பதிலுக்காக காத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, உக்ரைனில் ராணுவ தாக்குதலை ரஷ்யா தீவிர படுத்தியுள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த வீரர்கள், உக்ரைனில் முகாமிட்டு ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். இதற்கு பதிலடியாக ரஷ்ய ராணுவத்தில் உடனடியாக ஒரு லட்சம் வீரர்களை சேர்க்க அந்தநாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய வம்சாவழியினர் பெரும்பான்மையாக வசிக்கும் டிபிஆர், எல்பிஆர் பகுதிகள் முழுமையாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த பகுதிகளில் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சுமார் 16,000 வீரர்களை களமிறக்கி, உக்ரைனுக்கு எதிராக போரிட செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இல்லத்தில் ரஷ்ய ராணுவ ஏவுகணைகள் நேற்று விழுந்தன. அந்த இல்லத்தில் 330 பேர் தங்கியிருந்த நிலையில் 63 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளோரின் நிலைமை தெரியவில்லை என்று உக்ரைன் அரசு கூறியுள்ளது.
உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிஹிவ், லட்ஸ்க், மைகோலிவ், மேரிபோல், டினிபுரோ உள்ளிட்ட நகரங்கள் மீதும் ரஷ்ய ராணுவம் நேற்று தீவிர தாக்குதல்களை நடத்தியது. தலைநகர் கீவை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்திருப்பதாகவும் தொடர்ந்து முன்னேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கீவ் நகர மேயர் விடாலி கூறும்போது, "தலைநகரில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்தனர். அவர்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் உட்பட 10 லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்குஅனுப்பிவிட்டோம். கீவ் நகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டையும் ஒரு கோட்டையாக மாற்றியுள்ளோம்" என்று தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்கிநேற்று வெளியிட்ட வீடியோவில் "உக்ரைனின் பாதுகாப்புக்காக ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைன் மக்களை காப்பாற்ற வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
போர் முடிவுக்கு வருமா?
நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் நேற்றுகூறும்போது, "உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க நேட்டோ சார்பில் தடை விதிக்க முடியாது. அவ்வாறு செய்தால் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் போர் பரவிவிடும். ஏராளமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.நேட்டோ அமைப்பை சேர்ந்த துருக்கி, ரஷ்யா, உக்ரைன் இடையே சமரசத்தை ஏற்படுத்த முயற்சி செய்துவருகிறது. இதனை வரவேற்கிறோம். ரஷ்யா, உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படும் என நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இருதரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ரஷ்ய அதிபர் புதின் பகிரங்கமாக கூறியிருப்பதால் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago