காபூல்: "உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மீதான சர்வதேச கவனம் குறைந்துள்ளது. வல்லாதிக்க சக்திகளின் அதிகாரப் போட்டி விளையாட்டை நம் நிலத்தில் அனுமதிக்கக் கூடாது. ஆப்கனின் அனுபவப் பாடங்களை உக்ரைன் கற்றுக்கொள்ள வேண்டும்" என ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார். மேலும், ஆப்கானிஸ்தானில் இந்தியா மீண்டும் தனது தூகரகத்தைத் திறந்து அந்நாட்டுடன் தொடர்புகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ரஷ்ய - உக்ரைன் போர், ஆப்கான்- இந்தியா உறவு குறித்து 'தி இந்து' ஆங்கில நாளிதழின் சிறப்புச் செய்தியாளரிடம் சமீபத்தில் ஹமீது கர்சாய் நீண்ட உரையாடல் நடத்தினார். அப்போது அவர் ஆப்கன் குறித்த தற்போதை நிலையையும், உலகம் எப்படி அந்நாட்டை அணுக வேண்டும் என்பதையும் விவரித்தார். "இந்த ஆறு மாதங்களில் இங்கு ஒரு வாழ்க்கை இருந்து வருகிறது. அதில் கஷ்டமும் இருக்கிறது. ஆப்கன் மக்களின் வருமானம் மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியிருக்கிறார்கள். இங்குள்ள வங்கிகளுக்கும் வெளிநாட்டு வங்கிகளுக்கும் இடையிலான தொடர்புகள் மூடப்படுகிறது. முந்தைய வறட்சி பாதிப்பு இன்னும் நீங்கவில்லை என அதற்கான காரணங்கள் தெளிவாக உள்ளன.
தற்போது நிலைமை மாறி வருகிறது. மருத்துவ உதவிகள், தேவையின் அடிப்படையில் உதவுவது என ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா உதவி செய்கிறது. குறிப்பாக, இந்தியா கோதுமை அனுப்பி உதவியது. இதற்காக இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நடந்து வருவதால் ஆப்கன் மீதான உலகின் கவனம் கொஞ்சம் குறைந்துள்ளது. நாங்கள் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள். எங்கள் நாடு போரினால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை புரிந்து கொள்ளும் அதேவேளையில் உக்ரைன் மக்கள் அனுபவித்து வரும் வேதனைக்காக முழுமையாக வருந்துகிறோம். இன்னொரு நாடு தன் நாட்டினுள் ஆளுமை செய்ய வரும்போது ஏற்படக்கூடிய விளைவுகள் எங்களுக்குத் தெரியும். அதில் ஆப்கானிஸ்தான் நிறைய அனுபவங்களைப் பெற்றுள்ளது. எங்களின் அனுபவங்களில் இருந்து உக்ரைன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். உக்ரைன், ஆப்கன் போன்ற நாடுகள் வல்லாதிக்க சக்திகளின் பெரிய அதிகார விளையாட்டுகளில் ஈடுபட கூடாது. உக்ரைன் தலைமை தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் என நம்புகிறேன்" என்றார்.
ஆப்கனுடனான தற்போதைய உறவு குறித்தும், எதிர்பார்ப்புகள் குறித்தும் தனது கருத்துகளை கர்சாய் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர், "ஆப்கானிஸ்தானில் இந்தியா தனது தூதரகத்தை மீண்டும் தொடங்கும் என நான் நம்புகிறேன். காபூலில் இருந்து இந்தியா தனது தூதரக அதிகாரிகளைத் திரும்ப பெறும்போது, அதைச் செய்ய வேண்டாம் என நான் கேட்டுக்கொண்டேன். ரஷ்யா இருந்ததைப் போல, சீனா, ஈரான் பாகிஸ்தான் மற்ற பிற நாடுகள் தங்கியிருப்பதைப் போல இந்தியாவும் இருந்திருக்க வேண்டும். நாம் ஒன்றாக இருந்த வரலாறு ஒன்று உண்டு.
ஆப்கானிஸ்தானைப் பொறுத்த வரை கல்விக்கான தேவை அதிக அளவில் இருக்கிறது. ஆப்கன் மக்களுக்கு இந்தியா மீது இருக்கும் நல்லெண்ணத்தின் காரணமாக அதில் இந்தியா மிகப் பெரிய பங்கை வகிக்க முடியும். கிட்டத்தட்ட 2,000 ஆப்கன் மாணவர்கள் இந்தியாவில் தங்களின் கல்வியைத் தொடர விரும்புகிறார்கள். அவர்களுக்கு இந்தியா விசா வழங்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஆப்கானிஸ்தானின் சிறந்த வரலாற்று நண்பராக இந்தியா பார்க்கப்படுகிறது. இந்த நட்பு தொடர வேண்டும்” என்றார்.
பாகிஸ்தான் குறித்து பேசும்போது, ”பாகிஸ்தானை நான் அண்டை நாடு, சகோதர நாடு என்றே கூறியுள்ளேன். அந்நாட்டிற்கு எனது அறிவுரை ஒன்றுதான்: ஆப்கானிஸ்தான் மக்களாகிய நாங்கள் அமைதியுடனும், பண்பாட்டுடனும், உங்களுடன் நல்லுறவுடனும் வாழ விரும்புகிறோம். தயவுசெய்து ஆப்கானிஸ்தானுடன் ஒரு பண்பாட்டு உறவைத் தொடங்குங்கள், நாங்கள் மக்களாக, ஒரு தேசமாக அதற்கு நேர்மறையாக பதிலளிப்போம்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago