இவை இல்லாமல் வரமாட்டேன் - கருஞ்சிறுத்தை, ஜாகுவாருடன் உக்ரைன் யுத்த பூமியில் தவிக்கும் இந்திய மருத்துவர்

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைனில் பதற்றமிகு போர்ச் சூழலில் குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு இடையே தனது செல்லப் பிராணிகளான கருஞ்சிறுத்தைக்கும், ஜாகுவாருக்கும் இறைச்சி வாங்கி வருகிறார் இந்தியாவை சேர்ந்த டாக்டர் கிரிகுமார் பாட்டீல்.

தான் அன்புடன் வளர்த்து வரும் கருஞ்சிறுத்தை, ஜாகுவார் இல்லாமல் நாடு திரும்பப் போவதில்லை என்று தீர்க்கமாக இருக்கிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த மருத்துவரான கிரிகுமார் பாட்டீல்.

மேற்கு உக்ரைனில் உள்ள டான்மாஸ் மாகாணத்தில் உள்ள சிறு நகரமான செவரோடோனெட்ஸ்க்கி ஆறு ஆண்டுகளாக தனியாக வசித்து வரும் கிரில்குமார், 20 மாதங்களுக்கு முன்னர்தான் கீவ் உயிரியல் பூங்காவிலிருந்து கருஞ்சிறுத்தை, ஜாகுவார் இரண்டையும் 35,000 டாலர் (இந்திய மதிப்பில் 26,74,692 ரூபாய்) கொடுத்து வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில், ரஷ்ய படைகளால் தாக்கப்பட்டும் உக்ரைனில் போரில் சிக்கிக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ சிறுவயதில் இருந்தே எனக்கு பிடித்த தென்னிந்திய நடிகர் சிரஞ்சிவி படங்கள் பார்த்து சிறுத்தைகள் மீது பெரியளவில் ஈர்ப்பு வந்துவிட்டது. எனது செல்லப் பிராணிகள் வீட்டின் அடிதளத்தில்தான் என்னோடு இரவை கழிக்கின்றன. குண்டுவெடிப்புச் சத்தங்களுக்கு இடையே அருகிலுள்ள கிராமங்களிலிருந்து செல்லப் பிராணிகளுக்காக இறைச்சி வாங்கி வருகிறேன். நிறைய குண்டு வெடிப்புகள் எங்களைச் சுற்றி நடத்துக் கொண்டிருக்கிறன. எனது செல்லப் பிராணிகள் அவற்றை கேட்டு பயம் கொள்கின்றன. அவை ஒழுங்காக சாப்பிடுவதில்லை. என்னால் அவற்றை விட்டு தனியாக வரமுடியாது.

நான் எதிர்கொண்டிருக்கும் இரண்டாவது போர் இதுவாகும். இதற்கு முன்னர் உக்ரைனின் லுகான்ஸ்க் பகுதியில் வசித்தேன். அங்கு, ரஷ்ய ஆதரவு படையினருக்கும், உக்ரைன் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்கும். அந்த சண்டையில்தான் என்னுடைய இந்திய உணவகம் அழிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தே நான் இங்கு வந்தேன். இங்கும் சண்டை ஆரம்பித்துவிட்டது.

ஆனால், இது மிகுந்த அச்சம் தரக் கூடியதாக உள்ளது. எனது பெற்றோர் என் நிலை குறித்து கவலை கொண்டுள்ளனர். ஆனால், என் செல்லப் பிராணிகளை விட்டு நான் வரமுடியாது. நான் மட்டும்தான் இங்குள்ள ஒரே இந்தியன், எனது பக்கத்து வீட்டுக்காரர்களில் பெரும்பாலானோர் அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்றுவிட்டனர். நான் காத்திருக்கிறேன்” என்று பேட்டி ஒன்றில் அவர் விவரித்துள்ளார்.

சிறுத்தைகள் மட்டுமல்லாது, நாய்களையும் கிரிக்குமார் பாட்டீல் வளர்த்து வருகிறார்.

40 வயதாகும் கிரிகுமார் பாட்டீல் 2007 ஆம் ஆண்டு, மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றிருக்கிறார். 2014 ஆம் ஆண்டு முதல் எலும்பியல் மருத்துவராக இருந்து வரும் கிரிகுமார் பாட்டீல் செவெரோடோனெட்ஸ்கில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார் .

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE