எங்களுக்கு முன்பே தூதரகத்தை காலி செய்துவிட்டீர்களே... - கீவ் நகரில் குண்டடிபட்ட இந்திய மாணவர் வேதனை

By செய்திப்பிரிவு

கீவ்: கீவ் நகரில் இந்திய மாணவர் ஒருவர் குண்டடிபட்டதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவரைப் பற்றிய அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது.

ஹர்ஜோத் சிங் என்ற மாணவர் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "நான் உக்ரைனின் தலைநகர் கீவிலிருந்து வெளியேற முற்பட்டேன். நானும் எனது நண்பர்களும் ஒரு வாடகை கார் மூலம் லிவ் நகருக்கு பயணப்பட்டோம். அப்போது வழியில் சண்டையில் சிக்கிக் கொண்டோம். என் தோள்பட்டையில் புல்லட் பாய்ந்தது. மீண்டும் மீண்டும் நான் இலக்கானேன். அப்படியே சரிந்து விழுந்தேன். பின்னர் மருத்துவமனையில் கண் விழித்தேன். என் நெஞ்சிலிருந்தும் ஒரு புல்லட் எடுத்ததாகச் சொன்னார்கள். என் கால் எலும்பு முறிந்துள்ளது. இப்போது கீவ் நகர மருத்துவமனையில் உள்ளேன்.

நான் கீவிலிருந்து தப்பிக்க முயற்சிக்கும் முன்னர் பலமுறை தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டேன். எப்படியாவது நான் லிவ் நகருக்குச் செல்ல ஏதாவது போக்குவரத்து ஏற்பாடு செய்யுமாறு வேண்டினேன். ஆனால், என்னை யாருமே திரும்பத் தொடர்பு கொள்ளவில்லை. இப்போது இந்த உலகம் முழுவதற்கும் அங்கே நடக்கும் உண்மை நிலவரம் தெரிய வரும். இப்போதும் என்னால் நடக்க முடியவில்லை என்று கூறி உதவி கேட்டேன். எல்லாம் போலி வாக்குறுதிகள்தான் வருகின்றன.

என்னைப் போன்று நிறைய ஹர்ஜோத்கள் கீவ் நகரில் சிக்கியுள்ளனர். பலர் அவர்கள் இருக்கும் குடியிருப்புகளிலேயே அடைபட்டுக் கிடக்கின்றனர். வெளியே என்ன நடக்கிறது என்று தெரியாமல் கூட முடங்கியுள்ளனர்.

நான் தூதரக அதிகாரிகளிடம் பேச நிறைய முயற்சிகள் மேற்கொண்டேன். ஒரு முறை தொடர்பு கிடைத்தபோது, நீங்கள் எங்களுக்கு முன்னதாகவே தூதரகத்தை காலி செய்துவிட்டு லிவ் நகருக்குச் சென்றுவிட்டீர்கள். தூதரகம் இயங்கி மாணவர்களைக் காப்பாற்றியிருக்க வேண்டாமா என்று கேட்டேவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

ஆபரேஷன் கங்கா: உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மத்திய அரசு ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து நேற்று வரை மீட்கப்பட்ட சுமார் 7 ஆயிரம் இந்தியர்களில் இதுவரை 300 தமிழக மாணவர்கள் வந்துள்ளனர்.

உக்ரைனில் பயிலும் 20 ஆயிரம் இந்திய மாணவர்களில் சுமார் 5 ஆயிரம் பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (மார்ச் 4) அதிகாலையில் உக்ரைனில் இருந்த 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மேலும் மூன்று சி-17 விமானங்கள் ஹிண்டான் விமான தளத்திற்குத் திரும்பின.

உக்ரைனில் இருந்து 9,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE