'இந்த முழு உலகமும் என் கதையைக் கேட்க வேண்டும்...' - உக்ரைன் போர் பூமியில் இருந்து ஒரு வேதனைக் குரல்

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது. 2000-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அரசு தரப்பு தெரிவிக்கிறது. இந்தச் சூழலில், போர் பூமியிலிருந்து தன் மனைவியை, உடைமைகளை இழந்த ஒருவர் இந்த உலகுக்கு சொல்லும் சேதி என்ன தெரியுமா? - தனது கதையை இந்த உலகம் முழுவதும் கேட்க வேண்டும் என்றே அவரே சொல்கிறார்.

ஓலெக் ரூபக். இவர் உக்ரைனின் ஜைட்டோமிர் நகரில் வசித்து வந்தார். கீவ் நகரிலிருந்து 150 கிலோமீட்டர் தூரத்தில் இந்த ஊர் இருக்கிறது. 32 வயதாக ஓலெக் ரூபக் ஒரு பொறியாளர். மார்ச் 1-ஆம் தேதி இரவு ஓலெக் தனது 6 மாத பெண் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது மணி இரவு 10 இருக்கும். பயங்கர சத்தத்துடன் வீட்டின் அருகே ஓர் ஏவுகணை வந்து விழுந்தது. அவ்வளவுதான்... ரூபக் என்ன நடந்தது என்று ஊகிப்பதற்குள் அவர் இருந்த வீடு தரைமட்டமாகியிருந்தது. அந்த வீடு செங்கல் கற்களாலும், மரத்தாலும் கட்டப்பட்டது.

இதைப் பற்றி ஓலக் கூறுகையில், "அப்போதுதான் என் மனைவி காட்டியா (29), உறங்குவதற்காக படுக்கையறைக்குள் செல்வதைப் பார்த்தேன். அடுத்த நிமிடம் அங்கே எதுவுமில்லை. என்ன நடக்கிறது என்று ஊகிப்பதற்குள்ள் இன்னொரு ஏவுகணை தாக்கியது. வீடு தரைமட்டமாகியிருந்தது. நான் மெல்ல மெல்ல ஊர்ந்து துழாவ, என் கையில் செல்போன் சிக்கியது. அந்த வெளிச்சத்தில் இடிபாடுகளில் கண் பார்வையை படரவிட்டேன். அங்கே என் ஆறு மாத மகள் அசைவின்றி கிடந்தாள். அதைப் பார்க்கும்போது என் கண் முன் நரகம் தெரிந்தது. அவள் கைகளை மெல்லத் தொட்டேன். உடனே அவள் அழுதாள். என் வாழ்நாளில் நான் கேட்ட மிகவும் இனிமையான ஓசை, அந்த அழுகுரல் தான். ஒருநிமிடம் நான் நரகத்துக்கே சென்று திரும்பினேன். என் மனைவியை இடிபாடுகளுக்கு இடையே சடலமாக மீட்டேன். அவள் இப்போது சொர்க்கத்தில் எல்லா வசதியும் பெற்றிருக்கிறாள் என்று நம்புகிறேன். காட்டியாவுக்கு இரண்டு விஷயங்கள் ரொம்பப் பிடிக்கும். ஒன்று நான். இன்னொன்று எங்களின் மகள்.

நான் இத்தருணத்தில் மிகவும் வலிமையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என் கதையை இந்த உலகம் அறிந்து கொள்ளட்டும். புதின் உயிரிழக்க வேண்டும். காலம் முழுவதும் நரகத்தில் அவர் வறுத்தெடுக்கப்பட வேண்டும். அதுவே என் ஆசை.

என் பின்னால் நீங்கள் பார்ப்பதுதான் என் வீடாக இருந்தது. இன்று என்னிடம் எதுவுமில்லை.

ரஷ்யப் படைகள் முன்னேறிக் கொண்டே இருக்கின்றன. நாங்கள் அனைவருமே எங்காவது செல்ல வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், எங்கு செல்வதென்றுதான் தெரியவில்லை" என்று தெரிவித்தார்.

அவரைப் பொறுத்தவரை ரஷ்யத் தாக்குதல் அத்துமீறல். தங்களின் உரிமைகளைப் பறிக்கும் படையெடுப்பு. உறவுகளையும் பிரித்துள்ளதால் அதன் காரணகர்த்தாவான புதின் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமே.

போரை இந்த உலகின் சாமானிய நபர் எவருமே விரும்புவதில்லை என்பதற்கு ஓலெக் ரூபக் ஒரு சாட்சி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

மேலும்