குண்டு வீச்சில் இந்திய மாணவர் பலி: கார்கிவ் நகரில் ரஷ்யா கடும் தாக்குதல்

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைனின் கார்கிவ் நகரில் கடும் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார். இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம் என்றும் இந்திய மாணவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளதாகவும் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா 6-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷ்யா தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.

போர் பீதியால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக தெரிகிறது. இதுவரை 14 குழந்தைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கீவ் நகரில் குடியிருப்புப் பகுதிகள் மீது ரஷ்ய விமானப்படை கொத்துக் குண்டு வீச்சு நடத்தி வருகிறது. உக்ரைனின் வடகிழக்கில் அமைந்துள்ள கார்கிவ் நகரத்தை ரஷ்யப் படைகள் தொடர்ச்சியாக பீரங்கி, ஏவுகணை மற்றும் வான்வழி குண்டுவீச்சி தாக்கி வருகிறது.

கார்கிவ் நகரில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள்

அதுபோலவே தலைநகர் கீவ் நகரிலும் ரஷ்ய படைகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது. அங்கு சுமார் 2,500 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர். கடும் தாக்குதல் நடந்து வரும் நிலையில் அவர்கள் வெளியேற முடியாத சூழல் உள்ளது.

உக்ரைனின் கீவ் நகரில் தங்கியுள்ள மாணவர்கள் உட்பட அனைத்து இந்தியர்களும் இன்று அவசரமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இந்தநிலையில் ரஷ்யப் படைகளின் கடும் குண்டுவீச்சு தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் இன்று கொல்லப்பட்டார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:

உக்ரைனின் கார்கிவ் நகரில் இன்று காலை இந்திய மாணவர் ஒருவர் குண்டுவீச்சு தாக்குதலில் உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் உறுதிப்படுத்துகிறோம். அவரது குடும்பத்தினருடன் அமைச்சகம் தொடர்பில் உள்ளது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கார்கிவ் மற்றும் பிற பகுதிகளில் மோதல் நடைபெறும் நகரங்களில் இன்னும் இருக்கும் இந்தியர்களை அவசரமாகப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம். எங்களின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துமாறு ரஷ்யா மற்றும் உக்ரைனின் தூதர்களிடம் தெரிவித்துள்ளோம்.

ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள நமது தூதர்களும் இதேபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். பலியான இந்திய மாணவர் குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE