கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து இன்று 5-வது நாள். பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், தீவிரத் தாக்குதலுக்கு ரஷ்யா சற்றே இடைவேளை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
போர் விமானத் தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி, உக்ரைன் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றைய இரவு வான்வழித் தாக்குதல் இல்லாத இரவாக உக்ரைனுக்கு அமைந்தது. 4 நாட்களுக்குப் பின்னர் மக்கள் கொஞ்சம் நிம்மதியுடன் நித்திரை கொள்ள ஏதுவான ஓர் இரவாக அமைந்தது. பெலாரஸ் எல்லையில் பேச்சுவார்த்தைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடத்திற்கு உக்ரைன் ஆலோசனைக் குழு விரைந்துள்ளது. அதேபோல் ரஷ்ய பேச்சுவார்த்தைக் குழுவும் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
படையெடுப்புக்கு முன்னதாக உக்ரைனை ஒட்டிய பெலாரஸ் எல்லையில் ரஷ்யா நிறைய படைகளைக் குவித்து வைத்திருந்தது. அந்த இடத்தில் தற்போது பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேகம் குறைப்பு; வெள்ளை மாளிகையின் வேறு காரணம்... - உக்ரைனுக்குள் புகுந்து தீவிரத் தாக்குதலை நடத்திவந்த ரஷ்யப் படைகள் தற்போது தாக்குதலின் வேகத்தைக் குறைத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக பேச்சுவார்த்தை சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தரப்போ, உக்ரைனுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திவந்த ரஷ்யப் படைகள் வசம் தற்போது போர் ஆயுதங்கள் குறைபாடு ஏற்பட்டுள்ளது. புதிதாக ஆயுதங்கள், குண்டுகள் உள்ளிட்டவற்றைப் பெறுவதில் போக்குவரத்து இடையூறு நிலவுகிறது. உக்ரைன் படைகள் கொடுத்த நெருக்கடியால் ரஷ்ய படைகள் திணறியுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், முதன்முறையாக ரஷ்ய தரப்பில், தங்கள் வீரர்கள் பெருமளவில் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எண்ணிக்கை தெரிவிக்கப்படவில்லை. ஆனால், உக்ரைன் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அண்மைத் தகவலில் இதுவரை 5,300 ரஷ்ய வீரர்களை வீழ்த்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
352 பேர் பலி: ரஷ்யப் படைகளின் தாக்குதலால் இதுவரை உக்ரைனின் அப்பாவி பொதுமக்களில் 352 பேர் பலியாகியுள்ளனர். மேலும், போலந்து, ஹங்கேரி, ருமேனியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு 4 லட்சம் பேர் - பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் இடம்பெயர்ந்துள்ளனர். வரும் நாட்களில் இது அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
பேஸ்புக் வழியில் கூகுள்: ரஷ்யா மீது பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. பல்வேறு நாடுகளும் ரஷ்யா தங்களது வான்வழிப் பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளன. இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் ரஷ்ய அரசு ஊடகங்கள் பேஸ்புக் பக்கம் வாயிலாக வருவாய் ஈட்டும் வழிகளை முடக்கியது. பேஸ்புக்கை தொடர்ந்து அமெரிக்காவின் கூகுள் நிறுவனமும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது.
தொடரும் போராட்டங்கள்; எதிர்ப்புகள்: தாக்குதல் குறைந்திருந்தாலும் கூட, ரஷ்யாவுக்கு எதிரான கண்டனக் குரல்கள் உலகம் முழுவதும் ஒலித்து வருகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டன், தென் கொரிய தலைநகர் சீயோல், கனடாவின் ஒன்டோரியோ நகரம் மற்றும் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நேற்று பெருந்திரளான மக்கள் திரண்டு ரஷ்யா தனது அத்துமீறலை, படையெடுப்பை, அணு ஆயுதத் தாக்குதல் மிரட்டலை உடனடியாக முடித்துக் கொள்ள வேண்டும் என்று குரல் எழுப்பினர்.
இது ஒருபுறம் இருக்க, ரஷ்யா மற்றும் பெலாரஸ் வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. ஒலிம்பிக், பாராலிம்பிக் சாசனங்களை ரஷ்யா, பெலாரஸ் மீறியதால் இந்த நடவடிக்கையை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
3 days ago