உக்ரைனில் ரஷ்யா குண்டுமழை: 198 பேர் உயிரிழப்பு; 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம்

By செய்திப்பிரிவு

உக்ரைன் போர் நேற்று 3-வது நாளாக நீடித்தது. அந்த நாட்டின் மீது குண்டுமழை பொழிந்து வரும் ரஷ்யா, பெரும் பகுதிகளை கைப்பற்றியிருக்கிறது. தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 198 பேர் உயிரிழந்துள்ளனர். 35 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணித்தது.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைனின் 800 ராணுவ தளங்களை ரஷ்ய ராணுவம் தகர்த்துள்ளது. அந்த நாட்டின் தலைநகர் கீவில் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன. கீவ் விமான நிலையம் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. தலைநகரில் இரு நாடுகளின் வீரர்களுக்கு இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் முழுவதும் நேற்று 3-வது நாளாக போர் நீடித்தது. ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன.

இதுகுறித்து ரஷ்ய அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் நேற்று கூறியதாவது:

உக்ரைன் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதை ரஷ்யாவும் ஏற்றுக் கொண்டது. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்காரணமாக உக்ரைன் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அதிபர் புதின் உத்தரவிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை.

ஆனால் உக்ரைன் அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வரவில்லை. எனவே சனிக்கிழமை பிற்பகல் முதல் மீண்டும் போரை தொடங்கியுள்ளோம். நாங்கள் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை. உக்ரைனில் ஆட்சி நடத்தும் நவீன கால நாஜிக்கள், ராணுவத்துக்கு எதிராகவே போரிடுகிறோம். ஆனால் உக்ரைன் அரசும், ராணுவமும் தீவிரவாதிகளை போல செயல்படுகிறது. போரில் பொதுமக்களை கேடயமாக பயன்படுத்துகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உக்ரைன் அரசு தரப்பு கூறும்போது, "தலைநகர் கீவில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 198 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளின் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது. ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தீவிரமாக போரிட்டு வருகிறோம். இதுவரை 3,500 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 14 விமானங்கள், 8 ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. 2 பீரங்கிகளை அழித்துள்ளோம்" என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.

உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி நேற்று வெளியிட்ட வீடியோவில், "நாடு முழுவதும் போர் நடைபெற்று வருகிறது. எங்கள் நாட்டை காப்பாற்ற தீவிரமாக போரிட்டு வருகிறோம். தலைநகர் கீவ் எங்களது கட்டுப்பாட்டில் உள்ளது. ரஷ்ய ராணுவத்தை முன்னேறவிடாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம். பொதுமக்கள் சாலை, தெருக்களில் இறங்கி ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். என்னை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல சில நாடுகள் முன்வந்துள்ளன. அதை விரும்பவில்லை. கடைசிவரை உக்ரைனிலேயே இருப்பேன். எங்களுக்கு ஆயுதங்களை அளித்து உதவுங்கள். ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை உடனடியாக சேர்க்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் உளவு துறை வட்டாரங்கள் கூறும்போது, "உக்ரைன் மீதான போரால் ரஷ்யாவுக்கு நாளொன்றுக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படுகிறது. 10 நாட்களுக்கு போர் நீடித்தால் ஏற்படும் பொருளாதார இழப்புகளை ரஷ்யாவால் சமாளிக்க முடியாது. எனவே முடிந்தவரை ரஷ்யாவுக்கு எதிராக தீரமாகப் போரிடுவோம். தலைநகர் கீவில் 1.5 லட்சம் மக்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் போரில் குதித்துள்ளனர்" என்று தெரிவித்தன.

ரஷ்ய கப்பல் சிறைபிடிப்பு

இதனிடையே ஆங்கில கால்வாய் வழியாக சென்ற ரஷ்ய சரக்கு கப்பலை பிரான்ஸ் பாதுகாப்பு படையினர் நேற்று சிறைபிடித்தனர். ரஷ்யா மீது பிரான்ஸ் பல்வேறு தடைகளை விதித்துள்ளது. இவ்வாறு தடை விதிக்கப்பட்ட நிறுவனத்தை சேர்ந்த சரக்கு கப்பலை பிடித்திருப்பதாக பிரான்ஸ் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித் துள்ளது.

உக்ரைனுக்கு பின்லாந்து, சுவீடன், நெதர்லாந்து நாடுகள் ஆயுதங்களை அனுப்பி உதவியுள்ளன. இந்த நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியா புறக்கணிப்பு

உக்ரைன் போர் தொடர்பாக ஐ.நா.வின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா, அல்பேனியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும். அந்த நாட்டில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.

தீர்மானம் மீதான விவாதத்தில் இந்திய தூதர் டி.எஸ்.திருமூர்த்தி பேசும்போது, "உக்ரைன் நிலவரம் கவலையளிக்கிறது. வன்முறையை கைவிட்டு அனைத்து தரப்பினரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே கருத்து வேறுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். உக்ரைனில் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருக் கிறோம்" என்று தெரிவித்தார்.

விவாதத்தின் இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றிருக்கும் 15 நாடுகளில் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷ்யா மட்டும் எதிராக வாக்களித்தது. அதோடு தனது வீட்டோ அதிகாரம் மூலம் தீர்மானத்தை ரத்து செய்தது.

ரஷ்யாவுக்கு வீட்டோ அதிகாரம் இருப்பதால் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அந்த நாட்டுக்கு எதிராக எந்த தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது. எனவே ஐ.நா. பொது அவையில் தீர்மானத்தை கொண்டு வர அமெரிக்கா முடிவு செய் துள்ளது.

பிரதமர் மோடியிடம் உதவிகோரும் உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் வாலோடிமிர் ஜெலன்கி நேற்று தொலைபேசி மூலம் பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினேன். எங்கள் மண்ணில் சுமார் ஒரு லட்சம் ஆக்கிரமிப்பாளர்கள் குவிந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைனுக்கு ஆதரவு அளிக்க வலியுறுத்தினேன்" என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து தரப்பினரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தொடக்கம் முதல் வலியுறுத்தி வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்