உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 198 பேர் உயிரிழப்பு, 1,110+ காயம்

By செய்திப்பிரிவு

கீவ்: மூன்றாவது நாளாக ரஷ்ய தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் உக்ரைனில் 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதில் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்க வைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதால், தலைநகர் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. சமீபத்திய நிலவரப்படி, ரஷ்ய படைகளில் பெரும்பகுதி கீவ்வில் இருந்து 30 கிமீ தொலைவில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனாலும், தலைநகர் கீவ் மற்றும் அதனை சுற்றியுள்ள முக்கிய பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளன என்றும் எங்களுக்கு உதவ விரும்புகிறவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறோம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு: ரஷ்யா நடத்திய தாக்குதலில் 198 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 33 குழந்தைகள் உட்பட 1,115 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உக்ரைன் சுகாதாரத்துறை அமைச்சர் விக்டர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "தரவுகளின்படி, 198 பேர் இறந்துள்ளனர், இதில் 3 குழந்தைகள். இதேபோல் 1,115 பேர் காயமடைந்தனர், அவர்களில் 33 பேர் குழந்தைகள். இராணுவம் ஆயுதங்களுடன் நாட்டை காத்து வருகிறது. மருத்துவர்கள் தன்னலமற்ற உழைப்பை வெளிப்படுத்திவருகின்றனர். ராணுவ வீரர்களை மட்டுமே குறிவைத்ததாக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா நியாயப்படுத்த முயற்சித்தாலும், பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, உக்ரைனுக்கு 10 நாடுகள் ஆதரவளித்து வருகின்றன என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை நெருங்கியுள்ள நிலையில், கீவ்வில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா 350 மில்லியன் டாலர் உதவி: உக்ரைனுக்கு உடனடி ராணுவ உதவியாக 350 மில்லியன் டாலர்களை அமெரிக்கா வழங்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அனைத்து திசைகளிலும் தாக்க புதின் உத்தரவு: உக்ரைன் அரசு பேச்சுவார்த்தைக்கு மறுப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டிய சில மணிநேரங்களில் அந்நாட்டு அதிபர் புதின் உக்ரைனை அனைத்து திசைகளிலும் முன்னேறி தாக்க ரஷ்ய படைகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது போர் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE