2022 உலகக் கோப்பை கால்பந்து  தகுதிச் சுற்றில் ரஷ்யாவுடன் விளையாட மாட்டோம்: போலந்து

By செய்திப்பிரிவு

அடுத்த மாதம் நடைபெறவுள்ள '2022 உலகக் கோப்பை கால்பந்து' தகுதிச் சுற்றில், ரஷ்யாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள் பலவற்றின் எதிர்ப்பை மீறி, உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதால், தலைநகர் விரைவில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் இந்தப் படையெடுப்பை பல நாடுகள் விமர்சித்து வருகின்றனர். ரஷ்யா மீதும், அந்நாட்டின் அதிபர் மற்றும் அந்நாட்டின் அமைச்சர்கள் மீதும் பொருளாதார தடைகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன.

ரஷ்ய அதிபர் புதின் நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. உக்ரைனில் ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 1,500 பேரை ரஷ்ய போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், ரஷ்யாவில் தொடர்ந்து புதினின் நடவடிக்கைக்கு எதிராக மக்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், உக்ரைன் விவகாரம் காரணமாக, ரஷ்யாவுக்கு எதிராக அடுத்த மாதம் நடக்கவுள்ள 2022 உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து போலந்து கால்பந்தாட்ட வீரர் ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், ”போலந்து எடுத்தது சரியான முடிவு. உக்ரைனில் ரஷ்யாவால் படையெடுப்பு நடந்து கொண்டிருக்கும்போது ரஷ்யாவின் தேசிய கால்பந்து அணியுடன் நாங்கள் விளையாடுவதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது. ரஷ்யாவின் கால்பந்தாட்ட வீரர்களும், ரசிகர்களும் இதற்குப் பொறுப்பல்ல. ஆனால், ஒன்றும் நடக்காததுபோல் இருக்க முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE