ரஷ்ய ராணுவத்தை தடுக்க பாலத்தை தகர்த்து மனித வெடிகுண்டாக சிதறிய உக்ரைன் வீரர்

By செய்திப்பிரிவு

கீவ்: ரஷ்யாவின் ராணுவ டாங்கியை தடுப்பதற்காக உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து தானும் உயிர் தியாகம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள், 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீவ் நகருக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால், தலைநகர் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.

ஆனால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் ரஷ்யாவின் ராணுவ டாங்கியை தடுப்பதற்காக உக்ரைன் ராணுவ வீரர் ஒருவர் குண்டு வைத்து பாலத்தை தகர்த்து தானும் உயிர் தியாகம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான கிரிமியாவையும், உக்ரைனையும் இணைக்கும் வகையில் உள்ள ஹெனிசெஸ்க் பாலத்தின் வழியே ரஷ்யா படைகள் உக்ரைனுக்குள் நுழைய முயன்றன.

பீரங்கி வண்டிகளுடன் வந்த ரஷ்யாவின் படை வேகமாக நுழைந்தது. இதனால் உக்ரைன் வீரர்கள் செய்வதறியாது தவித்தனர். ரஷ்ய வீரர்களை தடுக்க அந்த பாலத்தை தகர்ப்பது மட்டுமே ஒரே வழி.

இதையடுத்து உயரதிகாரி உத்தரவை தொடர்ந்து விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச் வேகமாக செயல்பட்டு அந்த பாலத்தை வெடிவைத்து தகர்த்தார். அப்போது அவரும் வெடித்து சிதறி உயிர் தியாகம் செய்தார்.

இதனையடுத்து உக்ரைன் ராணுவம் தனது முகநூல் பக்கத்தில் தனது உயிரை தியாகம் செய்த விட்டலி ஸ்காகுன் வோலோடிமிரோவிச்சை பெருமிதத்துடன் புகழந்துள்ளது.

அதில் ‘‘இந்த கடினமான நாளில் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் உக்ரைனை எல்லா திசைகளிலும் தாக்கி வருகின்றனர். இப்போது உக்ரைனின் வரைபடத்தில் கடினமான இடங்களில் ஒன்று கிரிமியன் பகுதி. அங்கு எதிரிகளை ஒருவர் தன்னந்தனியாக சந்தித்தார்.

அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்க பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. அவர் உயிர் தியாகம் செய்தபோதிலும் ரஷ்யப்படை உள்ளே வராமல் தடுக்கப்பட்டது. அவரது நினைவு என்னென்றும் போற்றப்படும்’’ எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE