’எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல’ - அமெரிக்காவிடம் உக்ரைன் அதிபர் ஆவேசம்

By செய்திப்பிரிவு

கீவ்: ரஷ்ய படைகள் நெருங்குவதால் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள் என்ற அமெரிக்காவின் ஆலோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஏற்க மறுத்துவிட்டார்.

ரஷ்ய படைகள் நெருங்கி வருவதால், 'தலைநகர் கீவ் நகரிலிருந்து வெளியேறுங்கள்' என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு அமெரிக்கா ஆலோசனை வழங்கியுள்ளது. ஆனால் ஜெலன்ஸ்கி இந்த ஆலோசனை ஏற்க மறுத்திருக்கிறார். "சண்டை இங்கேதான் நடக்கிறது. எனக்கு ஆயுதங்கள்தான் தேவை, சவாரி அல்ல" என்று ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கிறார் என்று ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கீவ் நகரிலிருந்து அவரை பத்திரமாக வெளியேற்றுவதற்கு வழங்குவதாக தெரிவித்த அமெரிக்காவின் உதவிகளையும் அவர் பெற மறுத்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள், 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாள மேஜர் ஜெனரல் ஐகர் கொனஷெஙோவ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கீவ் நகரிக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால், தலைநகர் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ’தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான எங்களது போராட்டம் தொடரும்; நாங்கள் தலைநகரில்தான் இருக்கிறோம்’ என்று வீடியோ வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE