மூன்றாவது நாள் | உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள்; 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள் அழிப்பு- ரஷ்ய ராணுவம் தகவல்

By செய்திப்பிரிவு

கீவ்: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளாக தொடரும் நிலையில், இதுவரை உக்ரைனின் 211 ராணுவத் தளங்கள்; 17 கமாண்ட் மையங்கள், 39 ரேடார் யூனிட்டுகள், 67 டேங்கர்கள், 6 போர் விமானங்களை வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ராணுவ செய்தித் தொடர்பாள மேஜர் ஜெனரல் ஐகர் கொனஷெஙோவ் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், கீவ் நகரிக்கு வெளியே உள்ள மிக முக்கியமான விமான நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதனால் தலைநகர் விரைவில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று ரஷ்ய படைகள் தெரிவித்துள்ளன. அதேபோல் அசோவ் கடற்பகுதிக்கு அருகில் உள்ள மெலிட்டோபோல் துறைமுக நகரையும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இது மற்ற நாடுகளின் ராணுவ உதவிகளைத் தடுக்கும் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

ரஷ்ய தரப்பில் இதுவரை 1000 ராணுவ வீரர்களை வீழ்த்திவிட்டதாக உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், ரஷ்ய தரப்பில் இருந்து எவ்விதத் தகவலும் வெளியாகவில்லை.

மூன்றாவாது நாளான இன்று கீவ் நகரின் தெருக்களில் இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ளன.

விடிய விடிய தாக்குதல்: முன்னதாக நேற்று மாலை தொடங்கிய ரஷ்ய தாக்குதல் விடிய விடிய தொடர்ந்தது. உக்ரைனின் பல நகரங்கள் குண்டு மழையில் தத்தளித்தன. கிழக்குப் பகுதியில் தாக்குதல் அதிகமாக இருக்க மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக நடந்தே பிற நாடுகளின் எல்லைகளை அடைந்தனர்.

பொதுமக்கள் உயிரிழப்பு: முதல் நாள் முடிவில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என 137 பேர் உயிரிழந்துவிட்டதாக உக்ரைன் தெரிவித்தது. ஆனால், நேற்று தரை வழி மற்றும் வான்வழித் தாக்குதல் உக்கிரமடைந்த நிலையில் குடியிருப்புப் பகுதிகள் பெரும் சேதத்துக்கு உள்ளாகி உள்ளன. ஐ.நா மனித உரிமைகள் செய்தித் தொடர்பாளர் ரவீனா சம்தசானி நேற்று மட்டும் பொதுமக்களில் 25 பேர் பலியாகியுள்ளனர். 102 பேர் காயமடைந்துள்ளனர் என்றார். அதேபோல் ஐ.நா. அகதிகள் முகமை செய்தித் தொடர்பாளர் ஷபீனா மன்டூ கூறும்போது, உக்ரைனில் இருந்து இதுவரை ஒரு லட்சம் பேர் வெளியேறியுள்ளனர். இதே நிலை நீடித்தால் 40 லட்சம் பேர் வரை வெளியேற வாய்ப்புள்ளது என்றார்.

நேரடியாக கோரிக்கை வைத்த போப் பிரான்சிஸ்: உக்ரைனுக்கு எதிரான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி போப் பிரான்ஸி வாட்டிக்கனில் உள்ள ரஷ்ய தூதரகத்துக்கு நேரில் சென்றார். அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் அங்கிருந்தார். உக்ரைனுக்கு எதிரான போரைக் கைவிடுமாறு வலியுறுத்தியுள்ளார். போப் ஒருவர் நேரடியாக தூதரகத்திற்கே சென்று கோரிக்கை விடுப்பது இதுவே முதன்முறை எனக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைக்கு தயாராகும் தரப்புகள்: இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு தோதான் இடமும், நேரமும் குறித்து ரஷ்ய தரப்பும், உக்ரைன் தரப்பும் ஆலோசித்து வருவதாக அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர் செர்கெய் நிக்கிஃபோரோவ் கூறியுள்ளார். முன்னதாக பெலாரஸ் தலைநகர் மின்ஸ்கில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், உக்ரைன் தரப்போ வார்சாவில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று விருப்பம் தெரிவித்துள்ளது. பெலாரஸ் ரஷ்ய ஆதரவு நாடு. வார்சா என்பது போலந்து நகரம். போலந்து உக்ரைன் ஆதரவு தேசம். ஆகையால் உக்ரைன் தரப்பு போலந்தின் வார்சா நகரில் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகிறது.

கீவ் நகரில் ரஷ்ய தரப்பு முன்னேறுவதால் இன்றே உக்ரைன், ரஷ்யா பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE