லியோ டால்ஸ்டாய் தனது ‘போரும் அமைதியும்’ நாவலை இவ்வாறு தொடங்குகிறார், “நல்லது இளவரசே! ஜெனோவும் லுக்காவும் தற்போது நெப்போலியன் போனபார்ட்டின் குடும்பத்தின் வசமுள்ள நிலப்பரப்புகள் அன்றி வேறில்லை.’’
உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பிராந்தியத்திலிருந்து 2014-ம் ஆண்டிலிருந்து தன்னாட்சி உரிமை கோரி வரும்டானெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களுக்கு சில நாட்களுக்கு முன்பு ரஷ்யா முறையான அங்கீகாரம் அளித்தபோது, எனக்கு ‘போரும் அமைதியும்’ நாவலின் முதல் வரிகள்தான் நினை வுக்கு வந்தன.
ரஷ்யாவுக்கு ஏன் பதற்றம்?
ரஷ்யாவின் நிலப்பரப்பு கற்பனைக்கு எட்டாத வகையில் மிகவும் பெரியது. 17 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 36,000 கி.மீ கடலோரத்தையும் 11 வெவ்வேறு நேரப் பகுதிகளையும் (time zones) கொண்டதாக அது பிரமிக்க வைக்கிறது. ஆனால் பரப்பளவில் தன்னைவிடச் சிறிய நாடான உக்ரைனின் ஆதரவையும் நிலப்பரப்பையும் இழப்பதற்கு ரஷ்யா ஏன் பதற்றப்பட வேண்டும்? இதற்கான விடை புவியியல் அமைப்பில் உள்ளது.
ரஷ்யாவின் கடலோரப் பரப்பு அத்தனை நீளமானதாக இருந்தும் அதன் முழுமையான நீளம் வடதுருவம் வரை பரவியிருப்பதால் வருடம் முழுவதும் கடல் உறைந்தே இருக்கிறது. இதன் காரணமாக கடல் வணிகத்துக்கு ஏற்ற நல்ல துறைமுகங்கள் அமைவதற்கு இயற்கை கை கொடுக்கவில்லை. கடல் வணிகம் வருடம் முழுவதும் நடை பெறவும், தெற்குப் பகுதிகளுக்கு பண்டமாற்றுத் தொடர்புக்கும், வருடம் முழுவதும் நீர் உறையாத துறைமுகங்கள் அவசியம். இதற்கு ரஷ்யாவிடம் உள்ள ஒரே விடைதான் உக்ரைன். ஏனெனில் உக்ரைனின் கடற்பரப்பு கருங்கடலில் அமைந்துள்ளது. மேலும் கருங்கடல் வழியாக மத்திய தரைக்கடலை அடைந்து மற்ற நாடுகளுக்கு உக்ரைன் கடல் வணிகம் செய்ய முடியும்.
ஒருங்கிணைந்த ரஷ்யாவின் (சோவியத் யூனியன்) வீழ்ச்சிக்குப் பிறகு ரஷ்யப் பகுதிகளுக்கு அருகேயுள்ள உஸ்பெகிஸ்தான், கஜகஸ்தான் போன்ற நாடுகள் ரஷ்ய சார்பு நிலையை மேற்கொண்டன. ஆனால் ஐரோப்பியப் பகுதிகளுக்கு அருகே அமைந்துள்ள ருமேனியா, லித்துவேனியா போன்ற நாடுகள் ஐரோப்பிய மேலைநாடுகள் மற்றும் நேட்டோவின் சார்பு நிலைப்பாட்டை மேற்கொண்டன. நடுப்பகுதியில் அமைந்த உக்ரைனின் கிழக்குப் பகுதி ரஷ்ய சார்பு நிலைப்பாட்டையும், மேற்குப்பகுதி ஒருங்கிணைந்த ஐரோப்பிய சார்பு நிலைப்பாட்டையும் மேற்கொண்டன.
செவஸ்டபுல் துறைமுகம்
உக்ரைன், புவியியல் ரீதியாக தனக்குதெற்கில் உள்ள கிரிமியாவில் செவஸ்டபுல் எனும் துறைமுகத்தை பெற்றிருந்தது. ரஷ்ய - உக்ரைன் புரிந்துணர்வின்படி ரஷ்யா அந்தத் துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது. பதிலுக்கு உக்ரைனின் இறையாண்மையை ரஷ்யா காப்பதாக உறுதியளித்தது. ரஷ்யாவின் தற்போதைய பதற்றம் என்னவென்றால், ஒருங்கிணைந்த ஐரோப்பா அல்லது நேட்டோ நாடுகளுடன் உக்ரைன் சேர்ந்துவிட்டால் இந்தத் துறைமுகத்தை நிரந்தரமாக இழக்க நேரிடும் என்பதுதான்.
செவஸ்டபுலைத் துறைமுகமாகக் கொண்டு செயல்பட்டாலும் மத்திய தரைக்கடலுக்குச் செல்வதற்குத் துருக்கியின் கட்டுப்பாட்டில் உள்ள பாஸ்ஃபரஸ் கால்வாயை ரஷ்யா பயன்படுத்தித் தான் ஆகவேண்டும். நேட்டோ உறுப்பு நாடானதுருக்கி இதுவரையிலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ரஷ்யாவை அனுமதித்து வருகிறது. ஆனால் சர்வதேசஅழுத்தம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் ரஷ்யாவுக்கு அனுமதி மறுக்கப்படலாம். உக்ரைனை மேலை நாடுகள் பக்கம் செல்லாதவாறு ரஷ்யா தடுப்பதற்கு இதுவே முக்கியக் காரணம்.
உக்ரைனின் நிலைப்பாடு எப்போதும் மதில்மேல் பூனையாகவே இருந்துள்ளது. 2013-ம் ஆண்டில் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக முனைப்பு காட்டிய போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் விரைந்து நடவடிக்கை எடுத்து கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைத்து, செவஸ்டபுல் துறைமுகத்தை தனதுமுழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதன் பிறகு உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதற்கான திட்டத்தைக் கைவிட்டது. கிரிமியாவையும் அது இழந்தது.
திருகு சுருள் - எதிர்வினை
கிரிமியாவை ரஷ்யாவுடன் 2013-ல்இணைக்கும் போது புதின், ஒரு நேர்காணலில், “ஒரு திருகு சுருளை (spring) நீங்கள் ஒரு அளவுக்கு மீறி அழுத்தினால் அது உங்களைத் திருப்பி பலமாகத் தாக்கும். நீங்கள் இதை நினைவில் கொள்ள வேண்டும்” என்றார்.
2021-ம் ஆண்டுக்கு வருவோம். உக்ரைன் நேட்டோவின் உறுப்பு நாடாகவிரும்புகிறது. அப்படி ஆகிவிட்டால் அமெரிக்கா ரஷ்யாவை கடல்வணிகத்தில் இருந்து துண்டிக்க உக்ரைன், ருமேனியா, துருக்கி போன்ற நாடுகளின் உதவியுடன் அமெரிக்கா முயற்சி மேற்கொள்ளும். திருகு சுருளை அளவுக்கு மீறி அழுத்தி னால் திருப்பி பலமாக தாக்கும் அல்லவா? அந்த எதிர்வினையைத்தான் ரஷ்யா இப்போது செய்து வருகிறது.
இதற்கு புதின் கற்பிக்கும் நியாயம், உக்ரைனில் ரஷ்யக் குடிகள் இன அழிப்புக்கு ஆளாவதை தடுக்கவே இந்தப் படையெடுப்பு என்கிறார். ஐரோப்பிய ஒன்றியமோ நேட்டோ நாடுகளோ உக்ரைனின் உதவிக்கு வருமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும். ஆனால் அதற்குள் திருகு சுருள் தனது எதிர்வினையை ஆற்றி முடித்துவிடும்.
இதிலிருந்து நாம் கற்கும் பாடமானது ஒரு நாட்டின் பொருளாதாரத்தில், அந்நாட்டின் கடல் வணிகம் மூலம் பெறும் ‘நீலப்பொருளாதாரம்' எவ்வளவு முக்கியம் என்பதுதான். நமது நாட்டின் 7600 கி.மீ கடலோரப் பரப்பில் 12 முக்கியத் துறைமுகங்களையும், எண்ணற்ற சிறு துறைமுகங்களையும், உள்நாட்டு நீர்ப்போக்குவரத்தையும் மேம்படுத்துவதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தலாம்.
இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் வேளையில், உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையை ரஷ்யா தன் வசப்படுத்திவிட்டதாக செய்தி வெளி யானது.
லியோ டால்ஸ்டாய் தனது ‘போரும் அமைதியும்’ நாவலின் இறுதியில், “உலகநாடுகள் தமக்குள்ளேயே சட்ட ஒழுங்கை ஏற்படுத்தி அதை முறையாக அமல்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அணுஉலை நாசத்தால் அழிய நேரிடும்” என்றார். டால்ஸ்டாயின் தீர்க்கம் பலிக்காதிருக்கக் கடவதாக!
கட்டுரையாளர்:
நா. சோமசுந்தரம், கமாண்டன்ட்
இந்தியக் கடலோரக் காவல்படை
nsscg1992@gmail.com
முக்கிய செய்திகள்
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago