ரீல் அதிபர் to ரியல் அதிபர் - உக்ரைனைப் பாதுகாக்க துடிக்கும் 'தலைவன்' வொலாடிமிர் ஜெலன்ஸ்கி!

By மலையரசு

தலிபான் படைகள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலை நெருங்கிய சமயம் அது. அதிபராக இருந்த அஷ்ரப் கானி, தலிபான் படைகளை எதிர்க்க துணிவில்லாமல், மக்களைப் பற்றி கவலையில்லாமல் தனி ஹெலிகாப்டரில் நாட்டைவிட்டு தப்பிச் சென்றார். இதேபோன்ற சூழல்தான் இப்போது உக்ரைனிலும். சொல்லப்போனால் ஆப்கானிஸ்தானை போல அல்லாமல், ரஷ்ய படைகளின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது உக்ரைன். அவர்களின் ராணுவக் கிடங்குகள் தொடங்கி முக்கிய தளவாடங்களை குறிவைத்து தாக்கிவருகிறது ரஷ்யா. ஆனாலும், உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளார்.

அதோடு, "ரஷ்யாவின் முதல் இலக்கு நான் தான். இரண்டாவது இலக்கு எனது குடும்பம். நான் இன்னும் தலைநகர் கீவில்தான் இருக்கிறேன். என் குடும்பம் இன்னும் உக்ரைனில் தான் உள்ளது. ரஷ்யப் படைகளின் இலக்கு நாங்கள்தான் என்று தெரிந்தும் இங்கேயே இருக்கிறோம். என்ன நடந்தாலும் எனது மக்களை கைவிட மாட்டேன். இங்கேயே தான் தொடர்ந்து இருப்பேன்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவின் அத்துமீறலையும், உக்ரைன் உதவியில்லாமல் தனித்துவிடப்பட்டுள்ளதையும் உருக்கமான வார்த்தைகளால் சுட்டிக்காட்டி உலகை உலுக்கி வருகிறார்.

இன்றைய சூழலில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் ஓர் அரசியல் தலைவர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி மட்டுமே. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் அதிபராக ஒரு காமெடி ஷோவில் நடித்தபோது, தனது தேசம் சந்தித்து வரும் இந்த நூற்றாண்டின் கொடிய போர்களில் ஒன்றை வழிநடத்துவோம் ஜெலன்ஸ்கி எண்ணியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அரசியல் நகர்வுகள், அந்த மோசமான நிலைக்கு அவரைத் தள்ளியுள்ளது.

ரீல் அதிபர் டு ரியல் அதிபர்...

1978-ல் சோவியத் யூனியனில் அங்கமாக இருந்த க்ரிவி ரிஹில் பிறந்த வொலாடிமிர் ஓலெக்ஸாண்ட்ரோவிச் ஜெலன்ஸ்கி, யூத பின்னணி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜெலன்ஸ்கியின் பள்ளிப்படிப்பு முதல் ஆரம்ப வாழ்க்கை முழுவதும் ரஷ்ய மொழியியை சுற்றியே இருந்தது. பொருளாதாரம், சட்டம் என இரண்டு படிப்புகளை முடித்திருந்தாலும், ஜெலன்ஸ்கி கலைகளிலேயே அதிக ஆர்வம். அந்த ஆர்வம் அவரை நகைச்சுவை நாடக குழுக்களில் சேர வழிவகுத்தது. கீவ் தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே நாடகங்களில் பங்கேற்கத் தொடங்கினார். ஜெலன்ஸ்கி மற்றும் மற்ற நடிகர்கள் 'குவார்டல் 95' என்ற குழுவை உருவாக்கி நகைச்சுவை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

மேடை நிகழ்ச்சிகளாகத் தொடங்கி 2003-ல் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி செய்யும் அளவுக்கு 'குவார்டல் 95' குழுவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம், நாடகங்களில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் தற்கால அரசியல் சூழல்களை நையாண்டிகளாக்கி மக்களை சிரிக்க வைத்தனர். இந்த அரசியல் நையாண்டியின் மூளை ஜெலன்ஸ்கியே. அவரே இதை முன்னின்று நடிக்கவும் செய்தார். இவர்கள் குழு, 2015-ல் தொகுத்த நிகழ்ச்சியே, 'மக்கள் சேவகன்' (Servant of the People). உக்ரைனின் ஐந்தாவது அதிபராக இருந்த பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியின் ஊழல்கள் மற்றும் ரஷ்ய சார்பை இந்த நிகழ்ச்சி வழக்கமான அரசியல் நையாண்டியால் துளைத்தெடுத்தது. சோவியத்தில் இருந்த பிரிந்து தனி சுதந்திர நாடான பிறகு உக்ரைனின் ஆட்சியாளர்களால் செய்யப்பட்ட ஊழல் மற்றும் தவறுகளுக்கு எதிராக கொந்தளிப்பான மனநிலையில் இருந்த உக்ரேனிய மக்கள் மத்தியில் 'மக்கள் சேவகன்' நிகழ்ச்சி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு அரசியல் கற்பிக்கும் வரலாற்று ஆசிரியர் கதாபாத்திரம் ஏற்றிருந்தார் ஜெலன்ஸ்கி. மாணவர்கள் பாடம் எடுப்பது போல் உக்ரைன் அரசாங்கத்தின் ஊழலுக்கு எதிராக நிகழ்ச்சியில் அவர் வெளிப்படுத்திய செயல்களுக்கு நல்ல ரீச். எந்த அளவுக்கு என்றால், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 'குவார்டல் 95' குழு 'மக்கள் சேவகன்' என்ற அதே பெயரில் கட்சியாக உருமாறும் அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் மூலமாக ஜெலன்ஸ்கி அபரிமிதமான புகழ்பெற்றார். இறுதியாக அதிபர் வேட்பளராகவும் தேர்தல் அரசியலுக்குள் புகுந்தார். பிரச்சாரங்களில் பெட்ரோ பொரோஷென்கோவின் ஆட்சியை தனது வழக்கமான அரசியல் நையாண்டி பாணியில் வறுத்தெடுத்தவர், யூடியூப் போன்ற சமூக ஊடங்கங்கள் வாயிலாக உக்ரேனிய இளைஞர்களையும், மக்களையும் கவர்ந்தார்.

ரஷ்யாவுடனான சிக்கல்களை முடிவுக்குக் கொண்டுவருவதும், கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளை சமாதானப்படுத்துவதும் உக்ரைனியர்களின் நீண்டகால கோரிக்கைகள். ஜெலன்ஸ்கி அதிபர் தேர்தலில் இதை முக்கிய வாக்குறுதியாக மாற்றினார். எதிர்பார்த்து போலவே மிகப்பெரிய வெற்றி. 73 சதவீத வாக்குகளைப் பெற்று உக்ரைனின் ஆறாவது அதிபராக 2019-ல் அரியசானத்தை கைப்பற்றினார். எந்த வாக்குறுதியை சொல்லி ஆட்சிக்கு வந்தாரோ, அதற்கு முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கையை துவங்கினார்.

கிழக்கு உக்ரைனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் மோதல் முற்றிய நிலையில், ரஷ்யாவுடன் ராஜதந்திர பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதனை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்தார். பேச்சுவார்த்தைகள், கைதிகள் பரிமாற்றங்கள் மற்றும் மின்ஸ்க் ஒப்பந்தங்கள் என சமாதான நடவடிக்கைளை அவர் தரப்பு தொடங்கினாலும் ரஷ்யாவின் ஒத்துழைப்புமின்மையால் அந்த நடவடிக்கைகள் எதுவுமே முழுமை அடையாமல் தோல்வியை சந்தித்தது. அதேநேரம், ரஷ்ய அதிபர் புதின் பிரிவினைவாத கட்டுப்பாட்டுப் பகுதியான கிழக்கு உக்ரைனில் வசித்த மக்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்குவதாக அறிவித்து சிக்கலை ஏற்படுத்தினார். ஒருகட்டத்தில் ரஷ்யாவின் அழுத்தங்களை சமாளிக்க தனது முந்தைய அணுகுமுறையை மாற்றிய ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ கூட்டணியில் உக்ரைனை இடம்பெறுவதற்கு முயற்சியை மேற்கொண்டார். இந்த முயற்சியே ரஷ்யாவுடன் தற்போது நடந்துவரும் போருக்கு வழிவகுத்தது.

போர் நடவடிக்கையால் நேற்று முதல் உக்ரைன் 137 ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களை இழந்துள்ள நிலையில், "ரஷ்யர்களே, நான் நாஜி என்று உங்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. நான் எப்படி நாஜி ஆக முடியும்?. சோவியத் ராணுவத்தில் இணைந்து தனது வாழ்க்கை முழுவதையும் நாஜிக்களுக்கு எதிரான போரில் கழித்து என் தாத்தா, சுதந்திர உக்ரைனில் ஒரு கர்னலாக இறந்தது பலருக்கு தெரியாது. அப்படிப்பட்ட வழியில் வந்த நான் எப்படி நாஜி ஆக இருக்க முடியும்.

நீங்கள் (ரஷ்யர்கள்) எதற்காக, யாருடன் சண்டையிடுகிறீர்கள்? உங்களில் பலர் உக்ரைனுக்குச் சென்றிருக்கிறீர்கள். உங்களில் பலருக்கு உக்ரைனில் குடும்பம் உள்ளது. சிலர் உக்ரைனின் பல்கலைக்கழகங்களில் படித்தீர்கள். உங்களுக்கு உக்ரைன் நண்பர் ஒருவர் இருப்பார். எங்கள் குணம் உங்களுக்குத் தெரியும். எங்கள் மக்களை நீங்கள் அறிவீர்கள். எங்கள் கொள்கைகளை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் எதை மதிக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே போருக்கான காரணத்தை உங்கள் தலைவரிடம் நீங்களே கேளுங்கள்.

ஓர் அதிபராக அல்ல, ஒரு உக்ரைன் குடிமகனாக சமாதான வாய்ப்புக்காகக் கெஞ்சுகிறேன். எங்கள் தேசத்தைப் பாதுகாப்பதில் நாங்கள் தனித்துவிடப்பட்டுள்ளோம். எங்களுடன் நின்று போரிட யாருமில்லை. எங்களுக்கு நேட்டோ பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லோருக்கும் பயம். மாஸ்கோ என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும், ஆனால் உக்ரைன் தனது சுதந்திரத்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. மக்களுடன் நான் எப்போதும் துணை இருப்பேன்" என்று அரசியல் அனுபவம் அதிகம் இல்லாத ஒரு தலைவராக அறியப்படும் ஜெலன்ஸ்கி இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்தே தனது முதிர்ச்சியான பேச்சுக்களால் கவனம் ஈர்த்து வருகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்