உக்ரைன் விவகாரத்தில் எங்களை இந்தியா ஆதரிக்க வேண்டும்: ரஷ்யா

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: "உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐ.நா. கவுன்சில் கொண்டு வரும் தீர்மானத்தின்போது, எங்களுக்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்" என்று ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.

இது குறித்து இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் ரோமன் பாபுஷ்கின் பேசும்போது, “இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் சமநிலையாகவும் சுதந்திரமாகவும் உள்ளது. நாங்கள் அதை பாராட்டுகிறோம். தற்போதைய நிலவரம் குறித்தும், அதற்கான காரணத்தையும் இந்தியா நன்கு புரிந்து வைத்திருக்கிறது. நாங்கள் இந்தியாவின் ஆதரவைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்.

உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை குறித்து புதிய தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் இன்று கொண்டு வருகிறது. இதில், வாக்களிப்பின்போது ரஷ்யாவுக்கு இந்தியாஆதரவு அளிக்க வேண்டும். இதில் ரஷ்யாவை இந்தியா ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE