உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கவலையளிக்கிறது: தலிபான் அரசு

By செய்திப்பிரிவு

காபுல்: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கவலையளிப்பதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர்.

இதுவரை 100-க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தலிபான் அரசும் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து தலிபான் அரசு இன்று வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் - ரஷ்யா விவகாரத்தை உற்று நோக்கி வருகிறோம். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்து கவலை கொண்டுள்ளோம். வன்முறையைத் தவிருங்கள். பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை நீடிக்க வலியுறுத்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE