2 மாகாணங்களுக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கியது ரஷ்யா: உக்ரைனில் போர் பதற்றம் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மாஸ்கோ: உக்ரைனின் 2 மாகாணங்களை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்துள்ளது. இதனால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

உக்ரைனில் 24 மாகாணங்கள் உள்ளன. இதில் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள டான்ஸ்க், லாஹன்ஸ்க் மாகாணங்களில் ரஷ்ய வம்சாவளியினர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த மாகாணங்களை சேர்ந்த கிளர்ச்சிக் குழுக்கள், உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

இந்தப் பின்னணியில் உக்ரைனின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்துள்ளது. இதற்குபதிலடியாக, உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில் குவிக்கப்பட்டதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாரோவ் நேற்று கூறும்போது, "ரஷ்ய அதிபர் புதின் மற்றும் டான்ஸ்க், லாஹன்ஸ்க் பகுதிகளின் தலைவர்கள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன்படி இரு பகுதிகளையும் தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. உலக நாடுகளும் இதை அங்கீகரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

மேலும் இந்த 2 மாகாணங்களிலும் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதனிடையே, ரஷ்யா மீதுகடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் திட்டமிட்டுள்ளன.

ஐ.நா. சபையின் அதிகாரமிக்க அமைப்பான பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் விவகாரம் குறித்து நேற்று விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் திருமூர்த்தி பேசும்போது, "உக்ரைன் கிழக்கு எல்லைப் பகுதி நிலவரத்தை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு ஏற்பட்டிருக்கும் பதற்றம் கவலையளிக்கிறது. இப்போதைய நிலையில் பதற்றத்தை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இந்திய மாணவர்கள் மீட்பு..

உக்ரைனில் சுமார் 20,000 இந்திய மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள் உடனடியாக வெளியேற மத்திய அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் நேற்று உக்ரைன் தலைவர் கீவ் சென்றடைந்தது. அந்த விமானம் மூலம் 256 மாணவர்கள் நேற்று நாடு திரும்பினர். மாணவர்களை அழைத்து வர வரும் 25, 27, மார்ச் 6-ம் தேதிகளில் உக்ரைனுக்கு ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE