இரண்டு ஆண்டுகளாக தொற்றிலிருந்து தப்பித்த நாட்டையும் தாக்கியது கரோனா!

By செய்திப்பிரிவு

2019-ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், கரோனாவின் கோரத் தாக்குதலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் சில நாடுகள் தப்பித்து இருக்கின்றன என்றால் நீங்கள் நம்புவீர்களா?

ஆம், பசிபிக் நாடுகளில் ஒன்றான கிரிபாட்டி தனது எல்லையை இரண்டு ஆண்டுகள் மூடியதால் கரோனா தொற்று பரவலைத் தடுத்து நிறுத்தியது. ஆனால், இந்த சாதனை நீடிக்கவில்லை. கிரிபாட்டியில் தற்போது கரோனா பரவத் தொடங்கியுள்ளது, அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிரிபாட்டி இந்த மாதம்தான் தனது எல்லைகளை திறந்தது. இதனைத் தொடர்ந்து எல்லை மூடலுக்கு முன்னர் நாட்டைவிட்டுச் சென்ற மத போதர்கள் 50 பேர் மீண்டும் நாடு திரும்பினர். இவர்களில் பலருக்கு கரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளதுதான் கிரிபாட்டி அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

கிரிபாட்டியில் தீவிர சிகிச்சை பிரிவின் படுக்கைகள் மிக சொற்பமான எண்ணிக்கையில்தான் உள்ளன. மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அந்த நிலையில்தான் உள்ளன.

கிரிபாட்டியில் தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சைக்காக ஃபிஜி அல்லது நியூசிலாந்துக்குதான் செல்வார்கள். இந்த நிலையில்தான் கிரிபாட்டி அரசு கரோனாவின் தீவிரவத்தை தற்போது உணர்ந்துள்ளது.

கரோனா பரவல் குறித்து கிரிபாட்டி அதிபர் டேனட்டி மாமவ் கூறும்போது, ”கிரிபாட்டியில் தற்போது தனிமைப்படுத்துதல் ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கரோனாவைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு, கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் தடுப்பூசி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை சமூகப் பரவல் கண்டறியப்படவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், தேவாலயங்கள் சார்பிலும் மக்கள் கரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கிரிபாட்டி முதன்முதலாக எதிர்கொண்டுள்ளது. எனினும் உலக நாடுகளைப் பார்த்து கரோனா தொற்றை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை கிரிபாட்டி அரசு பெற்றிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE