ராணுவ பலம் முதல் மர்மத் திரை வரை: 10 ஆண்டு கால கிம் ஆட்சியில் வடகொரியா - ஒரு பார்வை

By இந்து குணசேகர்

வடகொரிய அதிபராக கிம் ஜோங் உன் தலைமையேற்று 10 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. ஏவுகணை சோதனைகள் மூலம் ராணுவ பலத்தைப் பறைசாற்றியது முதல் வறட்சியின் பிடியில் தவித்த மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டிய சூழலுக்கு ஆளானதுவரை இவரது ஆட்சிக் காலத்தில் சொல்லப்பட வேண்டிய சரித்திரமும், வெளிவராத வரலாறும் ஏராளம்.

வடகொரிய முன்னாள் அதிபரும், கிம் தந்தையுமான கிம் ஜோங் இல், 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, வடகொரியாவின் ஒட்டு மொத்த ஆட்சி அதிகாரமும் 28 வயதான கிம்மின் தலைமையின் கீழ் வந்தது. ஆரம்பத்தில் கிம் இந்த பெரும் பொறுப்பை இந்த இளம் வயதில் எப்படி கையாளப்போகிறார் என்றே பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பினர். ஆனால், நடந்தது வேறு. வடகொரியா தனது உள்நாட்டு விவகாரங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும் தன்மை கொண்ட நாடு. கிம்மின் ஆட்சியில் இது பல மடங்கு அதிகரித்தது.

வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகள் அறிந்துகொள்ள முடியாத வண்ணம் இரும்புத் திரையை வடகொரியாவை சுற்றிலும் கிம் ஏற்படுத்தினார். மேலும், தன்னைப் பற்றி புரிந்து கொள்ளப்படாத பிம்பத்தையும் கிம் இந்த 10 ஆண்டுகளில் வடிவமைத்துக் கொண்டார். இதன் காரணமாக உலகின் சக்தி வாய்ந்த தலைவராகவும் கிம் தன்னை தற்போது நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் கிம் ஆட்சியில் நடந்த முக்கிய நிகழ்வுகள் இவை...

ஏவுகணை சோதனையும், அமெரிக்க மோதலும்

கிம்மின் ஆட்சிக்குப் பிறகு வடகொரியா உலக நாடுகளிடையே தன்னை சக்தி வாய்ந்த நாடாக மாற்றிக்கொள்ள தீவிரமாக இறங்கியது. அதன் பொருட்டு ஏவுகணை சோதனைகளில் இறங்கியது. இதன் காரணமாக அமெரிக்க - வடகொரியாவுக்கு இடையே தீவிர மோதல் நிலவியது. வடகொரியாவின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தது. மேலும், உலக நாடுகளால் வடகொரியா தனிமைப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்புடன் சமாதான முயற்சிகளில் வடகொரிய அதிபர் கிம் இறங்கினார். அதன் முதல் படியாக தென்கொரிய அதிபர் மூன் ஜி இன்னை கின், கிம் சந்தித்தார். வரலாற்றுச் சிறப்பு நிகழ்வாக அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் - கிம் சந்திப்பு நடந்தது. வடகொரிய எல்லையில் ட்ரம்பை கிம் சந்தித்தார். இதன்மூலம் வடகொரியாவுக்குள் முதலில் நுழைந்த அமெரிக்க அதிபர் என்ற பெருமை ட்ரம்புக்கு கிடைத்தது.

கரோனா 'இல்லாத' வடகொரியா?

வடகொரியா தனது உள்நாட்டு விவகாரங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும்போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்கு இதுவரைகூட தெரியவில்லை.

ராணுவத்தை பலம்

தனது ஆயுத பலம் மற்றும் ஏவுகணைகள் பலத்தை உலக நாடுகளுக்கு வெளிகாட்டு வகையில் இந்த 10 வருடங்கள் பலமுறை ராணுவ அணிவகுப்பை கிம் நடத்தி இருக்கிறார்.

வறட்சியின் பிடியில் வடகொரியா

கரோனா பரவலைத் தொடந்து, வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை முற்றிலுமாக மூடியது. குறிப்பாக, சீனாவுடனான வர்த்தகத் தொடர்பை நிறுத்தியதாலும், அமெரிக்காவின் பொருளாதார தடையாலும், வெள்ள சேதத்தாலும் வடகொரியா பஞ்சத்துக்கு தள்ளப்பட்டது. இதனை இந்த ஆண்டு தொடக்கத்தில் கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டு நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டார்.

கிம்மின் உடல் நலம் குறித்த சர்ச்சை

கடந்த ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கிம்முக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை மோசமானதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. எனினும் தான் நலமாக இருப்பதாக அடுத்தடுத்து பொது நிகழ்வுகளில் தோன்றி கிம் அச்செய்திகளுக்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்தார்.

சர்ச்சைக்குள்ளான மரணங்கள்

*2013 ஆம் ஆண்டும் கிம்மின் மாமா ஜாங் சாங் தேக் தேச துரோக குற்றத்துக்காக கிம்மின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

> கிம் ஜோங் இல்லின் மூத்த மகன் கிம் ஜோங் நாம்தான் அடுத்த அரசியல் வாரிசு என்று வட கொரிய மக்கள் நினைத்துக் கொண்டிருக்க, எதிர்பாராத விதமாக ஜப்பானுக்கு போலி பாஸ்போர்டில் நுழைந்த காரணமாக தன் ஆட்சி வாய்ப்பை நாம் இழந்தார். 2003-ல் வட கொரியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து வடகொரியா அரசை அவர் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம் ஜோங் உன்னின் சகோதரர் கிம் ஜோங் நாம் மர்ம முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் கிம் ஜோங் உன் தான் உள்ளார் என்று பரவலாக பேசப்பட்டது.

கிம் ஜோங் நாம்

> அமெரிக்காவைச் சேர்ந்த 22 வயதான ஒட்டோ வார்ம்பியர் வடகொரியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது அந்நாட்டை உளவு பார்த்ததாகக் கூறி வடகொரிய அரசு அவரை கைது செய்தது. பின்னர் பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால், அமெரிக்கா வந்தடைந்த ஓட்டோ வாம்பியர் சில மாதங்களிலே மரணம் அடைந்தார். இந்த விவகாரமும் கிம்முக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

இதுமட்டுமல்லாது கிம்மின் ஆட்சியில் மரணத் தண்டனைகள் அதிக அளவில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் விமர்சித்துள்ளன.

சகோதரிக்கு அதிகாரம் அளிக்கும் கிம்

வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் கடந்த பத்து வருடங்களாக அறியப்படுகிறார். கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கி வருகிறார்.

உண்மையில் வடகொரிய அதிபர் கிம் குறித்து வரும் செய்திகளும், வடகொரியா பற்றிய தகவல்களும் பெரும்பாலும் நேரடியாக களம் சென்று தரப்படுப்பவை அல்ல. அமெரிக்க ஊடகங்களோ, சர்வதேச ஊடகங்களோ, தென் கொரிய ஊடகங்களோ அளிக்கும் செய்தி வாயிலாகவே கிம் பெரும்பாலும் உலக மக்களுக்கு அறியப்படுகிறார். இவ்வாறு இருக்கையில் இதுதான் கிம்மின் நிஜ பிம்பம் என்று உறுதிப்பட கூறுவது நியாயமற்றது. அறத்திற்கு முரணானதும் கூட.

எது எவ்வாறு இருப்பினும், ஊடகங்கள் கிம் மீது வைக்கும் சர்ச்சைகளைத் தவிர்த்து, பார்த்தோம் என்றால் கிம் கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு பொருளாதாரத் தடைகளைத் தாண்டி நாட்டை வளர்ச்சி பாதையிலேயே கொண்டு சென்றிருக்கிறார். அறிவியல் வளர்ச்சி, விவசாயம் என வடகொரியாவை அடுத்தக் கட்டத்திற்கு கிம் நகர்த்தியுள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை என்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள். எனினும், 'கிம் நல்வரா, கெட்டவரா?' - இந்தக் கேள்வி மட்டும் விடையின்றி தொடரும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்