கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி: க்ரெட்டா துன்பெர்க் போராட்டம்

By செய்திப்பிரிவு

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற பருவநிலை மாற்ற மாநாடு பெருந்தோல்வி எனக் கூறி சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

1995-ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற வேண்டிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நடக்கிறது.

உலக அளவில் கார்பன் உமிழ்வு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை 5 அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 6-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மாநாடு பெருந்தோல்வி என சூழலியல் செயற்பாட்டாளரான கிரெட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தில் போராட்டத்தில் ஈடுபட்ட அவர் பேசியதாவது:

காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டில் ஒரு வார காலமாக உலகத் தலைவர்கள் வெற்றுப் பேச்சை பேசியுள்ளனர். இந்த மாநாடு படுதோல்வி என்பதை யாருக்கும் சொல்லித் தெரியத் தேவையில்லை. இது ஒரு கண் துடைப்பு மாநாடு. விஞ்ஞானிகள் காலநிலை மாற்றம் தொடர்பாக அறிவியல் ரீதியாக முன்வைக்கும் உண்மைகளை உலகத் தலைவர்கள் புறந்தள்ள முடியாது. அதுபோலத் தான் அவர்கள் எங்களையும் புறக்கணிக்க முடியாது. உண்மையில் தலைவர்கள் வழிநடத்துபவர்களாக இல்லை. இப்படித்தான் தலைமை இருக்கிறது என்பது வேதனை.

இவ்வாறு அவர் பேசினார்.

இரண்டு நாட்கள் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

பிரதமர் மோடி உறுதி:

முன்னதாக, பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

''பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அம்சங்களைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு, உறுதிமொழியைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன. பாரீஸ் மாநாட்டில் கூறப்பட்டுள்ள பல அம்சங்களைக் கடைப்பிடிக்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதற்காகக் கடுமையாக உழைத்து அதற்கான பலனையும் வெளிப்படுத்துவோம். நிலக்கரி பயன்பாடு உள்ளிட்டவற்றைக் குறைத்து புதைபடிவமற்ற ஆற்றல் உற்பத்தியை 500 ஜிகாவாட்டாக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்துவோம். இந்தியாவின் 50 சதவீத மின் தேவையை 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெறுவதற்கு முயலும். இப்போதிருந்து 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 100 கோடி டன்னுக்குள் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

பொருளாதாரத்தில் கார்பனின் தீவிரத்தன்மையை 45 சதவீதத்துக்குள் குறைத்து, 2070-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் கார்பன் இல்லாத பூஜ்ஜிய நிலைக்கு வர இலக்கு வைத்துள்ளோம்'' என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE