காபூல் இரட்டைக் குண்டு வெடிப்பில் 9 பேர் காயம்: ஐ.எஸ். இயக்கத்தில் ஆப்கன் முன்னாள் ராணுவ வீரர்கள் ஐக்கியமா?

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் காயமடைந்தனர்.

காபூல் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றை குறிவைத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் இத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மருத்துவமனை வாயிலில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படையைச் சேர்ந்த நபர் வெடிகுண்டு வைத்து தாக்குதலில் ஈடுபட்டதில் 9 பேர் காயமடைந்தனர்.

இன்னும் சில தற்கொலைப் படை பயங்கரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்துள்ளதாகவும் அவர்களுடன் தலிபான்கள் சண்டையிட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கட்டுக்குள் கொண்டு வந்ததில் இருந்து, அங்கு விமான நிலையத்தில், மசூதியில் எனப் பல தற்கொலைப் படை தாக்குதல்கள் நடந்துவிட்டன.

இந்நிலையில், ஆப்கன் ராணுவம், உளவுத் துறையின் முன்னாள் அதிகாரிகள் பலரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் இணைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றச்சாட்டை தலிபான் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. அதுவும் குறிப்பாக அமெரிக்காவிடம் பயிற்சி பெற்ற உளவுத் துறை அதிகாரிகள் அந்த அமைப்பில் இணைந்ததாகக் கூறப்படும் நிலையில் ஆப்கன் முன்னாள் ராணுவ வீரர்கள், உளவுத் துறையினர் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்கான சாத்தியக் கூறே இல்லை என்று தலிபான்கள் கூறுகின்றனர்.

யார் இந்த ஐஎஸ்-கோராசன்?

* ஐஎஸ்-கோராசன் அமைப்பு ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள கோராசன் மாகாணத்தில் இயங்கும் முக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

* ஐஎஸ்-கோராசன் பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற தீவிரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய தீவிரவாத அமைப்பாகும்.

* தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், ஒருகட்டத்தில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

* அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர்.

* ஐஎஸ்-கோராசன் என்பது தலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பாகும்.

* 1,500 முதல் 2,200 ஐஎஸ்-கோராசன் அமைப்பின் உறுப்பினர்கள் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது.

* சிரியா, ஈராக்கில் இயங்கி வந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஆப்கானிஸ்தானிலும் பரவினர். ஆனால் இவர்களை தலிபான்கள் கடுமையாக எதிர்த்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE