2070-ம் ஆண்டுக்குள் இந்தியா, கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாகக் குறைக்க இலக்கு வைத்துள்ளது. இந்தியா மட்டும் தான் அளித்த வாக்குறுதியைச் சரியாக நிறைவேற்றிவரும் நாடாக இருக்கிறது என்று பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
ஜி20- நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்ற பிரதமர் மோடி, அந்த மாநாட்டை முடித்துக்கொண்டு பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பங்கேற்க ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகருக்கு நேற்று சென்றார். பிரதமர் மோடிக்கு கிளாஸ்கோ நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
1995-ம் ஆண்டிலிருந்து காலநிலை மாற்றம் தொடர்பான முதல் உச்சி மாநாடு நடந்து வருகிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாகக் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற வேண்டிய மாநாடு ஒத்திவைக்கப்பட்டதால் இந்த ஆண்டு நடக்கிறது. உலக அளவில் கார்பன் உமிழ்வு எவ்வாறு இருக்கிறது என்பது குறித்து இந்த மாநாட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். இதுவரை 5 அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 6-வது அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
உலக அளவில் கார்பன் உமிழ்வில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. அமெரிக்கா முதலிடத்திலும், சீனா 2-வது இடத்திலும் உள்ளன. அமெரிக்கா ஆண்டுக்கு 18.6 டன் கார்பன் உமிழ்வும், சீனா 8.4 டன் உமிழ்வும் செய்கின்றன. இந்தியா 1.96 டன் கார்பன் உமிழ்வைத் தள்ளுகிறது.
» ஜப்பான் தேர்தலில் ஆளும் கூட்டணி பெரும் வெற்றி
» தொடங்கியது கிளாஸ்கோ பருவநிலை மாற்ற மாநாடு: உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
பருவநிலை மாறுபாடு மாநாட்டில் பிரதமர் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
''பாரீஸ் பருவநிலை மாறுபாட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அம்சங்களைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு, உறுதிமொழியைக் கடைப்பிடிக்கும் ஒரே நாடு இந்தியா என்பதை உலக நாடுகள் உணர்ந்துவிட்டன. பாரீஸ் மாநாட்டில் கூறப்பட்டுள்ள பல அம்சங்களைக் கடைப்பிடிக்க நாங்கள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இதற்காகக் கடுமையாக உழைத்து அதற்கான பலனையும் வெளிப்படுத்துவோம். நிலக்கரி பயன்பாடு உள்ளிட்டவற்றைக் குறைத்து புதைபடிவமற்ற ஆற்றல் உற்பத்தியை 500 ஜிகாவாட்டாக 2030-ம் ஆண்டுக்குள் உயர்த்துவோம். இந்தியாவின் 50 சதவீத மின் தேவையை 2030-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்து பெறுவதற்கு முயலும். இப்போதிருந்து 2030-ம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வை 100 கோடி டன்னுக்குள் குறைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரத்தில் கார்பனின் தீவிரத்தன்மையை 45 சதவீதத்துக்குள் குறைத்து, 2070-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் கார்பன் இல்லாத பூஜ்ஜிய நிலைக்கு வர இலக்கு வைத்துள்ளோம்.
பருவநிலை மாறுபாட்டிலிருந்து தப்பிக்கவும், சுற்றுச்சூழலைக் காக்கவும் வாழ்வியல் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். வாழ்வியல் மாற்றம் பருவநிலை மாறுபாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்வியல் முறையை வாழ வேண்டும். அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் பருவநிலை மாறுபாட்டுச் சிக்கல்களைத் தீர்க்க முடியும். சுற்றுச்சூழலைக் காப்பதற்கான வாழ்வியல் முறை என்பது மிகப்பெரிய இயக்கமாக உலக அளவில் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
வளர்ச்சி அடைந்த நாடுகள் பருவநிலை மாறுபாட்டைக் குறைக்க அளிக்க உதவும் நிதியுதவியான ஒரு லட்சம் கோடி டாலர்களை வழங்கும் வாக்குறுதியைப் பின்பற்ற வேண்டும். பருவநிலை மாறுபாடு தொடர்பான இலக்குகளை அடைய இந்தியா முன்னோக்கிச் செல்கிறது, வளரும் நாடுகள் இந்த இலக்கை அடையச் சந்திக்கும் பிரச்சினைகளையும் அறியும்.
2015-ம் ஆண்டு பாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாட்டுக்கு நான் முதன்முதலில் வந்திருந்தபோது, அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்ற செய்தியைத் தாங்கி இந்தியக் கலாச்சாரத்தின் பிரதிநிதியாக வந்திருந்தேன். 1.25 கோடி மக்களின் சார்பில் வாக்குறுதி அளித்தேன்.
இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடு இரவு, பகலாக உழைத்து லட்சக்கணக்கான மக்களை ஏழ்மையிலிருந்து மீட்டுள்ளது. வாழ்க்கையை வாழ்வதை எளிமையாக்கியுள்ளது. உலக அளவில் உள்ள மக்கள் தொகையில் 17 சதவீதத்தை இந்தியா வைத்திருந்தாலும், கார்பன் உமிழ்வில் வெறும் 5 சதவீதம்தான் நாங்கள் இருக்கிறோம். கார்பன் உமிழ்வைக் குறைக்கும் எங்கள் கடமையில் உறுதியாக இருக்கிறோம்''.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
3 days ago