"பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்று மகாகவி பாரதியார் தனது பாஞ்சாலி சபதம் காவியக் கவிதையில் தெரிவித்திருப்பார்.
அதுபோல், தலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் இருந்தபோதும் சரி இனிமேல், ஆட்சியில் கீழ் வந்தாலும் மோசமாக பாதிக்கப்படுவது பெண்களும், சிறுமிகளும் மட்டும்தான்.
பெண்களையும், சிறுமிகளையும் தலிபான்கள் தங்களுக்கு இணையாக ஒருபோதும் பார்த்தது இல்லை. இருவரையும் பாலியல் சுகங்களைத் தீர்த்துக் கொள்ளும் பொருளாகவும், குழந்தை பெற்றுத் தரும் எந்திரமாகவும் மட்டுமே கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறார்கள். இது எதிர்காலத்தில் நடக்காது, பெண்களுக்கான ஜனநாயக உரிமை கிடைக்கும் என எதிர்பார்ப்பது கடினம். மதரீதியான கோட்பாடுகளை முன்வைத்து, ஆட்சி செய்யப்போகிறோம் என்று கூறிக்கொண்டு காட்டாட்சி நடத்தும் தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் கிடைக்காது.
» பெண் கல்வி அனுமதிக்கப்படுமா?- தலிபான் செய்தித் தொடர்பாளர் பதில்
» தலிபான்களின் முக்கியத் தலைவர்கள் யார்?- அடுத்த நகர்வு என்ன? அச்சத்தில் மக்கள்
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகளும் அமெரிக்கப் படைகளும் ஜூலை மாதம் வெளியேறத் தொடங்கிய காலத்திலிருந்தே தலிபான்கள் சுதாரித்துக்கொண்டு தங்களின் ஆக்கிரமிப்பைத் தொடங்கி, பல பகுதிகளைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவரத் தொடங்கினர்.
மக்களோடு மக்களாக நிற்க வேண்டியவர், மக்களைக் காக்க வேண்டிய அதிபர் அஷ்ரப் கானி, காபூலில் தலிபான்கள் நுழைந்தது தெரிந்தது புகலிடம் தேடி தஜிகிஸ்தான் சென்றுவிட்டார். அப்போதே ஆப்கானிஸ்தான் ஜனநாயகம் வீழ்ந்து, தலிபான்கள் கைகளுக்குள் வந்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் அதிபர் மாளிகையில் ஒய்யாரமாக அமர்ந்து தலிபான்கள் பேட்டி அளித்தார்கள்.
உலக அளவில் தலிபான்கள் மீதான அழுத்தம் குறைவு, போராட்ட குணம் குறைந்த ஆப்கன் படையினர், அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேற்றம் ஆகியவைதான் தலிபான்கள் கரங்களை வலுவடையச் செய்துள்ளது.
ஜூலை மாதத்தில் ஆப்கானிஸ்தானின் பதக்ஸான், தக்கார் மாகாணங்களைத் தலிபான்கள் தங்கள் ஆளுகைக்குள் கொண்டுவந்தபோதே பெண்கள் மீதான அடக்குமுறையைத் தொடங்கிவிட்டனர்.
உள்ளூர் தலைவர்களை அழைத்த தலிபான் தலைவர்கள், 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், 45 வயதுக்குக் கீழுள்ள கைம்பெண்கள் ஆகியோரின் பட்டியலைத் தயாரிக்கக் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பெண்களையும் சிறுமிகளையும் தலிபான் தீவிரவாதிகள் கட்டாயத் திருமணம் செய்யும் பட்சத்தில் அவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் உள்ள வஜிரிஸ்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு உண்மையான முஸ்லிம்களாக மாற்றப்பட்டு அவர்களுக்கு ஒழுக்க நெறி போதிக்கப்படும்.
தலிபான்கள் கடந்த காலத்தில் செய்த இந்த அட்டூழியங்களை நினைத்து அஞ்சித்தான், தலிபான் கைப்பற்றிய மாகாணங்களில் இருந்து ஏராளமான மக்கள் தங்கள் மனைவி, மகள்களுடன் பல்வேறு இடங்களுக்குப் புகலிடமாகச் சென்று வருகின்றனர். கடந்த 3 மாதங்களில் மட்டும் 9 லட்சம் மக்கள் இடம் விட்டு புலம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
1996-2001ஆம் ஆண்டுவரை இருந்த தலிபான்களின் கொடூரமான முகம் மீண்டும் நினைவுக்கு வந்துதான் பெண்கள் தங்கள் குடும்பத்தாருடன் இடம் விட்டு புலம் பெயர்ந்து வருகிறார்கள். தலிபான்களின் காட்டுமிராண்டித்தனமான அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கான அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டன, கல்வி உரிமை மறுக்கப்பட்டது, வேலைக்குச் செல்ல முடியாது, கண்டிப்பாக அனைவரும் புர்கா அணிந்திருக்க வேண்டும், வீட்டை விட்டு வெளியே சென்றால், ஆண் பாதுகாவலர் இன்றி செல்லக்கூடாது, அரசியலில் ஈடுபடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்திருந்தனர்.
கடந்த 20 ஆண்டுகளாகப் பெண்களை கொத்தடிமைகளைவிட மோசமாகவே நடத்தியதை இந்த உலகம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
பெண்களின் உரிமைகள் குறித்த தங்கள் நிலைப்பாட்டை மாற்றியதாக தலிபான்கள் தற்போது கூறினாலும், அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பெண்களைப் பாலியல் அடிமைத்தனத்திற்கு உட்படுத்துவதற்கான சமீபத்திய முயற்சிகள் அவர்களின் பேச்சுக்கும், செயல்பாட்டுக்கும் முரணாகவே இருக்கின்றன.
தலிபான்களைப் பொறுத்தவரை போரில் சிறைப்பிடிக்கப்படும் பெண்களைத் திருமணம் செய்யாமல், பாலியல் இச்சைகளைத் தீர்க்கும் அடிமைகளாகவே கடந்த காலங்களில் மாற்றி இருக்கிறார்கள்.
ஜெனிவா உடன்படிக்கை பிரிவு 27ன்படி “எந்தவிதமான போர்க் காலங்களிலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியவர்கள். குறிப்பாக அவர்களுக்கு எதிராக பலாத்காரம், கட்டாயப் பாலியல் தொழில், அவமதிப்புக்குரிய செயல் ஏதும் கூடாது” எனத் தெரிவிக்கிறது.
2008-ம் ஆண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், கொண்டுவந்த தீர்மானம் 1820ன்படி, போர்க் காலங்களில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பலாத்காரம், பாலியல் வன்முறை ஆகியவை போர்க்குற்றமாகவும், மனித உரிமைகளுக்கு எதிரான குற்றமாகவே கருதப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், இவை அனைத்தையுமே தலிபான்கள் ஆட்சியில் காற்றில் பறக்கவிடப்படும். இனிவரும் காலங்களில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான, சிறுமிகளுக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது, அவர்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படும்போது, உலகம் வேடிக்கை பார்க்கக்கூடாது.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு அராஜகத்தின் உச்சமாக, ஆயுதமேந்தி நாட்டை அபகரிக்கும் தலிபான்களிடம் இருந்து பெண்களின், குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைக் காக்க சர்வதேச சமூகம் குரல் கொடுக்க வேண்டும்.
ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தில், தலிபான்களுடன் அமைதிப் பேச்சு நடத்த ஆப்கன் அரசு அமைத்த அமைதிக் குழுவில் 4 பெண் உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆனால், அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் அமைத்துள்ள குழுவில் ஒரு பெண்கூட கிடையாது. இதன் மூலமே தலிபான்களின் பெண்களுக்கு அளிக்கும் மரியாதையும், அவர்களின் பகட்டான வார்த்தை எந்த அளவுக்கு உண்மையானது என்பதையும் அறியலாம்.
பெண்கள், குழந்தைகள் உரிமைகள் காக்கப்பட வேண்டும், பாலியல் ரீதியாகப் பெண்கள் சுரண்டப்படும்போது சர்வதேச சமூகம் அமைதியாக வேடிக்கை பார்க்காமல், ஜனநாயகத்தின் மீதும், பெண்களின் மீது மரியாதையுள்ள அனைத்து நாடுகளும் தலிபான்களுக்கு எதிராக ஒன்று திரள வேண்டும்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago