நைஜீரியாவுக்கு கரோனா தடுப்பூசி அனுப்பிய அமெரிக்கா

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நைஜீரியாவுக்கு சுமார் 40 லட்சம் கரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இதுகுறித்து நைஜீரிய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறும்போது, “அமெரிக்க அரசு சார்பாக நன்கொடையாக 40 லட்சம் கரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தன. விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும். முதல் கட்டமாக மாடர்னா தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளன. தடுப்பூசி வழங்கிய அமெரிக்காவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளது.

கரோனா பாதிப்பு அதிகம் ஏற்பட்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்று. கடந்த சில வாரங்களாக 400க்கும் அதிகமான நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். நைஜீரியாவில் இதுவரை 1.23% மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE