ரஷ்யாவில் நான்காவது நாளாக கரோனா பாதிப்பு 600-ஐ கடந்தது

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் தொடர்ந்து நான்காவது நாளாக கரோனாவினால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் சுகாதாரத் துறை தரப்பில், “ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 672 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 28 ஆம் தேதி முதல் ரஷ்யாவில் தினமும் 600க்கும் மேற்பட்டோர் கரோனாவால் உயிரிழந்து வருகின்றனர். ரஷ்யாவில் கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மந்த நிலை நீடிப்பதே தொற்றுக்கு காரணம்” என்று தெரிவித்துள்ளது.

மாஸ்கோவில் புதிதாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 90% பேர் டெல்டா திரிபுகளால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அந்நகர மேயர் செர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு மக்கள் கரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புதின் வலியுறுத்தி உள்ளார்.

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. கரோனா தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திவருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 3 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன.

ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE