பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் 123 நாட்கள்!

By எஸ். சுஜாதா

உலகம் முழுவதும் காதலர் தினத்தை விதவிதமான வகையில் கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு காதலர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாட முடிவெடுத்தனர் உக்ரைனைச் சேர்ந்த ஒரு தம்பதி. கணவனும் மனைவியும் கைகளை ஒரு சங்கிலியால் பிணைத்து, மூன்று மாதங்கள் ஒன்றாகவே வாழ்ந்து, உக்ரைன் நாட்டு சாதனைப் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதுதான் இவர்களின் நோக்கம்.

33 வயது கார் விற்பனையாளர் அலெக்சாண்டர் கட்லேயும், 29 வயது அழகுக்கலை நிபுணர் விக்டோரியா புஸ்டோவிடோவாவும் மீடியாக்களின் முன்னிலையில் கடந்த பிப்ரவரி 14 அன்று தங்கள் கைகளைச் சங்கிலியால் பிணைத்துக்கொண்டனர். இந்தச் செய்தி உக்ரைன் மட்டுமல்லாமல், உலகின் பல பாகங்களுக்கும் பரவியது. 24 மணி நேரமும் அவர்கள் ஒன்றாகவே இருந்தனர். சங்கிலியால் பிணைத்திருக்கும் கைகளால் தங்களின் ஒவ்வொரு நாளும் எவ்வளவு சவாலாக இருக்கிறது என்பதைச் சமூக வலைதளங்களில் தெரிவித்துக்கொண்டேயிருந்தனர்.

கைகளைப் பிணைத்துக்கொண்டு நாள் முழுவதும் இருப்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. வீட்டில்கூடச் சமாளித்துவிட முடியும். வெளியே செல்லும்போது மிகவும் துன்பமாக மாறிவிடும். அதுவும் உணவகத்தில் கழிவறையைப் பயன்படுத்தும்போது திண்டாடிப்போனார்கள். பலரும் மூன்று மாதங்கள் வரை இவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றே சொல்லிக்கொண்டிருந்தார்கள். அலெக்சாண்டருக்கும் விக்டோரியாவுக்கும்கூட இந்தச் சாதனையைச் செய்ய முடியாது என்றே தோன்றியது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல சாதனையைச் செய்துவிடுவோம் என்கிற நம்பிக்கை உண்டாகிவிட்டது.

மூன்று மாதங்களைக் கடந்தபிறகும் அவர்கள் சங்கிலியைக் கழற்றவில்லை. இன்னும் எவ்வளவு நாட்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்று பார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் வந்துவிட்டது. 123 நாட்களுக்குப் பிறகு மீடியாக்களின் முன்னிலையில் சங்கிலி உடைக்கப்பட்டது. இதன் மூலம் உக்ரைனில் ஒன்றாக இருந்த முதல் ஜோடி என்ற சாதனையை இருவரும் படைத்தனர்.

சங்கிலி அகற்றப்பட்டவுடன், “நாங்கள் இருவரும் 123 நாட்கள் ஒன்றாகவே இருந்திருக்கிறோம். இந்த நெருக்கம் எங்களுக்குள் அன்பையும் காதலையும் இன்னும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், இருவரும் எங்கள் தனிமைக்காக மிகவும் ஏங்கிவிட்டோம். இனி நாங்கள் சேர்ந்து வாழப் போவதில்லை. இந்தச் சாதனையோடு எங்கள் உறவை முறித்துக்கொள்கிறோம்” என்று அறிவித்தார் அலெக்சாண்டர்.

“எங்கள் இருவருக்கும் வித்தியாசமான எண்ணங்கள். ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது அதை இன்னும் நன்றாகவே புரிந்துகொண்டோம். கணவனுக்காக மனைவியும் மனைவிக்காகக் கணவனும் ஏக்கத்துடன் காத்திருப்பது மிகவும் அழகானது. ஆனால், 123 நாட்கள் ஒன்றாகவே இருந்தததால், ஒருவர் மீது இன்னொருவருக்கு ஏக்கமே உண்டாகவில்லை. இனி சேர்ந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை. அதனால், எந்த வருத்தமும் இன்றி இருவரும் பிரிகிறோம்” என்று சிரித்துக்கொண்டே அறிவித்தார் விக்டோரியா.

பிணைத்திருந்த சங்கிலியை ஏலம் விட்டிருக்கிறார்கள். இந்தச் சாதனையால் கிடைத்த புகழையும் பணத்தையும் இருவரும் சமமாக எடுத்துக்கொண்டு, தனித்தனி வழியில் சென்றுவிட்டனர்.

வித்தியாசமாகக் காதலர் தினம் கொண்டாட எண்ணிய தம்பதியை, அந்த வித்தியாசமான முயற்சியே பிரித்துவிட்டதை என்னவென்று சொல்வது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

11 days ago

உலகம்

12 days ago

மேலும்