அமெரிக்க ராணுவ வீரர்களின் சேவையைப் பாராட்டி, ‘பர்ப்பிள் ஹார்ட்’ என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கப் படையில் இடம்பெற்றவர் ஆஸ்கியோலா ஆஸி ஃப்ளெட்சர். இவருக்கான அங்கீகாரம் 77 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆஸி ஃப்ளெட்சரின் 99-வது வயதில் வழங்கப்பட்டிருக்கிறது!
இரண்டாம் உலகப் போரில் நேச நாட்டுப் படைகள் சார்பாக அமெரிக்க வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில் ஃப்ளெட்சரும் ஒருவர். 1944ஆம் ஆண்டு நேசப் படைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்துவிட்டுத் திரும்பும்போது, ஃப்ளெட்சர் இருந்த வாகனம் ஜெர்மன் ஏவுகணையால் தாக்கப்பட்டது. இதில் வாகனத்தின் ஓட்டுநர் கொல்லப்பட்டார். வாகனத்தில் இருந்த மற்ற வீரர்கள் படுகாயம் அடைந்தனர். ஃப்ளெட்சருக்கும் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்து, நாடு திரும்பிய வீரர்களுக்கு அவர்களின் சேவையைப் பாராட்டி ‘பர்ப்பிள் ஹார்ட்’ விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது. ஆனால், இனப் பாகுபாடு காரணமாக ஃப்ளெட்சருக்கு அந்த விருது வழங்கப்படவில்லை.
நாட்டுக்காகப் போரிட்டாலும் அமெரிக்கர்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரம் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு அளிக்கப்படவில்லை. போரில் காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் குறித்த தகவல்களை எல்லாம் ஆவணப்படுத்துவார்கள். அமெரிக்கர்களின் காயங்கள் மட்டுமே பெரும்பாலும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் காயங்களுக்கு சிகிச்சையளித்தாலும் அது ஆவணப்படுத்தப்படவில்லை. அதனால், ஃப்ளெட்சர் காயம் அடைந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எனவே, ‘பர்ப்பிள் ஹார்ட்’ இவருக்கு வழங்கப்படவில்லை.
இனப் பாகுபாட்டால் தன்னுடைய சேவைக்கு அங்கீகாரம் கிடைக்காதது குறித்து வருத்தம் அடைந்தாலும் ஃப்ளெட்சர் அதைப் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று, பள்ளி ஆசிரியராகவும், நியூயார்க் காவல்துறையிலும், ப்ரூக்ளின் மாவட்ட சட்ட அலுவலகத்திலும் பணியாற்றி, ஓய்வுபெற்றார்.
‘பர்ப்பிள் ஹார்ட்’ வழங்கப்படாதது குறித்த வருத்தம் 79 வயதில் ஃப்ளெட்சருக்கு அதிகமானது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்துப் பேச ஆரம்பித்தார். ஆவணம் இல்லாமல், அங்கீகாரம் குறித்து எதுவும் கேட்க முடியவில்லை என்பதால், அவர் குடும்பத்தினராலும் எதுவும் செய்ய முடியவில்லை.
"அமெரிக்கர்களும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் எந்தவிதப் பாகுபாடும் இன்றி தங்கள் நாட்டுக்காகப் போரில் கலந்துகொண்டனர். ஆனால், அமெரிக்கர்களின் காயங்கள் மட்டும் பர்ப்பிள் ஹார்ட்டுக்குத் தகுதியானது என்றும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் காயங்கள் பர்ப்பிள் ஹார்ட்டுக்குத் தகுதியற்றவை என்றும் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
என் அப்பாவுக்கு எப்படியாவது அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஏழு ஆண்டுகள் இதற்காகக் கடினமாகப் போராடினேன். அப்போதுதான் அப்பாவின் கதை ஒரு ஆவணப்படமாக வெளிவந்தது. அது அமெரிக்க ராணுவத் தலைமையின் கவனத்துக்கும் சென்றது. இறுதியில் அப்பாவுக்கு பர்ப்பிள் ஹார்ட் வழங்குவதாக அறிவித்தார்கள். அப்பாவிடம் இந்தச் செய்தியைச் சொன்னேன். ‘நல்லது’ என்பதைத் தவிர, வேறு எதுவும் அவரிடமிருந்து வரவில்லை” என்கிறார் ஃப்ளெட்சரின் மகள் ஸ்ட்ரீட்ஸ்.
ஜூன் 18 அன்று நடத்தப்பட்ட எளிய விழாவில், ப்ரூக்ளின் ராணுவ அதிகாரிகள், ஃப்ளெட்சருக்கு ‘பர்ப்பிள் ஹார்ட்’ வழங்கி கவுரவித்ததோடு, காலம் கடந்து வழங்கப்பட்ட அங்கீகாரத்துக்காக மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர்.
77 ஆண்டுகளுக்குப் பிறகு ஃப்ளெட்சரின் காயத்துக்கு மருந்து போடப்பட்டிருக்கிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
2 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago