அமெரிக்கா நாடாளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிட்டு, அதற்குள் நுழைய முயன்ற அதிபர் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட மோதலில் ஒரு பெண் உள்பட்ட 4 பேர் துப்பாக்கிசூட்டில் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20-ம் தேதி முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று நடந்தது. இதனால் நாடாளுமன்றத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அப்போது அமெரிக்க நாடாளுமன்றம் நோக்கி அதிபர் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்தனர். அவர்களை நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் போலீஸார் தடுத்தபோது, போலீஸாருக்கும், ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தைக் கலைக்கும் வகையில் போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரைக் கலைத்தனர். இதனால், போலீஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஏராளமான போலீஸார் காயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அதிபர் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கையில் ஆயுதங்களுடனும், சிலர் துப்பாக்கிகளுடன் இருந்துபோலீஸாரைத் தாக்கினர். இதனால், கூட்டத்தைக் கலைக்கவும், தற்காப்புக்காகவும் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உயிரிழந்தார், 3 பேர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 3 பேரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இதுகுறித்து வாஷிங்டன் டிசி போலஸ் தலைவர் ராபர்ட் கான்டி கூறுகையில் “ நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது தாக்குதல் நடத்த ரசாயன ஆயுதங்களையும், பைப் வெடிகுண்டு, துப்பாக்கி ஆகியவற்றை வைத்திருந்தார்கள். தற்காப்பு நடவடிக்கையாக போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு ஒருமணிநேரத்துக்கும் மேலாக ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துவதைப் பார்த்த அதிபர் ட்ரம்ப் அமைதியாகக் கலைந்து செல்லுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டுள்ள அனைவரும் அமைதியாக கலைந்து செல்லுங்கள். வன்முறை வேண்டாம். நினைவில்கொள்ளுங்கள், சட்டம் ஒழுங்கிற்கு நமது கட்சிதான் பொறுப்பு. சட்டத்தை மதித்து கலைந்து செல்லுங்கள். போலீஸாருக்கும், சட்டத்துக்கும் மதிப்பு கொடுங்கள். அமைதியாக இருங்கள்” எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தை முற்றுகையிட்ட ட்ரம்ப் ஆதரவாளர்கள் செயலைப் பார்த்து அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் அதிர்ச்சி அடைந்தார். அமெரிக்க மக்களுக்கு ஜோ பைடன் ஆற்றிய உரையில் “ இந்த நேரத்தில் அமெரிக்க ஜனநாயகம் எப்போதுமில்லாத தாக்குதலைச் சந்தித்துள்ளது. இந்த நவீன காலத்தில் இதுபோன்ற சம்பவத்தை பார்த்தது இல்லை. நாடாளுமன்றத்தின் மீதும், சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். மக்கள் பிரதிநிதிகள் மீதான தாக்குதல், அவர்களைப் பாதுக்காக்க வேண்டும்.
இந்த குழப்பமும், போராட்டமும் அமெரிக்காவை ஒருபோதும் பிரதிபலிப்பதில்லை என்பதை தெளிவாகக் கூறுகிறேன். நாம் யார் என்பதை இது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. சிறிய அளவிலான குழுவினர் மட்டுமே சட்டத்தை மீறுகிறார்கள். இது எதிர்ப்பு அல்ல. ஒழுங்கின்மை, குழப்பம். இது முடிவுக்கு வர வேண்டும்.
அதிபர் ட்ரம்ப் உடனடியாக தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றி, தான் ஏற்றுள்ள உறுதிமொழிக்கு ஏற்ப அரசியலமைப்புச் சட்டத்தை காக்கும் வகையில் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago