ஆப்கானில் ராணுவ தளத்தில் தலிபான்கள் பயங்கர தாக்குதல்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ராணுவ தளத்தில் இன்று தலிபான்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில், “ ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியான பக்தியா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) தலிபான்கள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

காரில் வைக்கபட்ட குண்டை வெடிக்க செய்ததுடன், துப்பாக்கி ஏந்திய நபர்கள் இருவர் கண் மூடித்தனமாக சுட்டனர். இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் தாக்குதல் நடத்தப்பட்டது. இரு தரப்புக்கு இடையேயான சண்டை பத்து நிமிடங்களுக்கு நீடித்தது. தற்போது அந்தப் பகுதி கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் ராணுவம் தரப்பில் பலர் காயமடைந்ததாகவும். இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு தலிபான்கள் அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.

மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு மூன்று நாட்கள் அங்கு போர் நிறுத்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டனர். முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர தலிபான்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதற்கிடையிலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுப் படைகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஐஎஸ் தீவிரவாதிகளும் தாக்குதலை அவ்வப்போது நடத்தி வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE