உலகம்

பெய்ரூட் வெடி விபத்து: சர்வதேச விசாரணையை நிராகரித்த லெபனான்

செய்திப்பிரிவு

பெய்ரூட் வெடி விபத்து தொடர்பாக சர்வதேச விசாரணை அழைப்புகளை லெபனான் அதிபர் நிராகரித்துள்ளார்.

இதுகுறித்து லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, ''அமைச்சகம் இது தொடர்பான விசாரணையை செவ்வாய்க்கிழமையே அறிவித்துவிட்டது. பெய்ரூட் வெடி விபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு உடன்பாடில்லை'' என்று தெரிவித்துள்ளார்.

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக ஒளிவு மறைவில்லாமல் சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று லெபனான் நாட்டின் அரசியல் பிரமுகர்கள் வலியுறுத்தி வந்தனர். அதுமட்டுமில்லாது, லெபனானுக்குப் பயணம் மேற்கொண்ட பிரான்ஸ் அதிபர் மக்ரோன் சுதந்திரமான விசாரணையை வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையும் இதனை வலியுறுத்தியது.

இந்த நிலையில் லெபனான் அதிபர் சர்வதேச விசாரணையை நிராகரித்துள்ளார்.

லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுகக் கிடங்கில் சுமார் 6 ஆண்டுகளாக வைக்கப்பட்ட 2,750 டன் மதிப்பிலான அமோனியம் நைட்ரேட் மருந்து வெடித்தது. இந்த விபத்தில் 135-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

மேலும், பெய்ரூட் வெடி விபத்தில், 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் ஓட்டல் மற்றும் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

லெபனானில் நடைபெற்ற இந்த வெடி விபத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலர் தங்கள் வருத்தங்களைப் பதிவு செய்துள்ளனர்.

லெபனான் ஏற்கெனவே பெரும் பொருளாதாரச் சரிவைச் சந்தித்துள்ளது. இந்த வெடி விபத்து லெபனான் பொருளாதாரத்தை மேலும் பாதித்துள்ளது

SCROLL FOR NEXT