ஆதாரம் இருக்கு; சீன ஆய்வகத்திலிருந்து வந்ததுதான் கரோனா வைரஸ்: மைக் பாம்பியோ குற்றச்சாட்டு

By ஐஏஎன்எஸ்

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்பதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்று பல வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இதுவரை கரோனா வைரஸால் அந்நாட்டில் 11.88 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் கரோனா வைரஸ் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை.

அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டன. இந்தச் செய்தி வெளியானதிலிருந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ அதிருப்தியான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்கா மட்டுமல்லாமல் ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கரோனா விவகாரத்தில் சீன அரசு வெளிப்படைத்தன்மையுடன் நடந்திருந்தால் உலக அளவில் இதுபோன்ற உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. பொருளாதாரப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது என்று குற்றம் சாட்டி வருகின்றன. சீனாவிடம் இருந்து இழப்பீடு கோருவதற்குப் பல நாடுகள் தயாராகி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

''சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகங்களில் இருந்துதான் கரோனா வைரஸ் பரவியதற்கு ஏராளமான முக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன.

கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறை கூறும் கருத்தில் நான் முரண்படவில்லை. ஆனால், பல சிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் கரோனா வைரஸ் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் எனத் தெரிவிக்கிறார்கள். ஆதலால், இதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

வூஹானில் இருக்கும் ஆய்வகங்கள் அனைத்தும் சர்வதேசத் தரத்துக்கு இணையாக இல்லாதவை, தரம் குறைந்தவை, போதுமானஅளவு சுத்தம் இருக்காது. இந்தக் காரணங்களால் வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம்''.

இவ்வாறு மைக் பாம்பியோ தெரிவித்தார்.

இதற்கிடையே அமெரிக்க உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறை 4 பக்க அறிக்கையை கரோனா வைரஸ் தொடர்பாக அரசுக்கு அளித்துள்ளது. அதில், “ சீனா கரோனா வைரஸின் தன்மை தெரிந்து திட்டமிட்டே உலகிற்கு மறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அதற்குரிய மருந்துகள், மருந்துப் பொருட்களை இருப்பு வைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் உலக சுகாதார அமைப்புக்கும் கரோனா வைரஸின் தாக்கம் குறித்த உண்மைத் தகவல்களையும் சீனா தெரிவிக்கவில்லை. ஜனவரி மாதம்தான் இந்தத் தகவலை சீனா வெளியுலகிற்குத் தெரிவித்தது. கரோனா வைரஸ் ஆபத்து குறித்து பேசிய மருத்துவர்களைக் கட்டுப்படுத்திய சீனா அதை உலகிற்குத் தெரிவிக்கத் தாமதப்படுத்தியது” எனத் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

மேலும்