பெருந்தொற்றுக்குப் பிறகான உலகம் எப்படி இருக்கும்?

By செய்திப்பிரிவு

ஓர் அறிவியல் புனைகதைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது போன்ற ஒரு யுகத்தில் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஒரு பெருந்தொற்று இந்த உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கிறது. கணிசமான மனிதர்கள் வீடுகளில் அடைபட்டுக் கிடக்கிறார்கள். இந்தச் சூழலில், உலகளாவிய அமைப்பின் பொருளாதாரம் நிலைகுலைந்திருக்கிறது. இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான இந்நிகழ்விலிருந்து எப்படி வெளிவரப்போகிறோம் என்று யாருக்கும் தெரியாது.

நாம் இதுவரை அறிந்திருக்கும் உலகத்துக்கும், நாம் வீட்டைவிட்டு வெளியில் வந்து காணப்போகும் புதிய உலகத்துக்கும் இடையிலான ஒரு புதிர் தருணம் இது. புதிய உலகம் எப்படி இருக்கப்போகிறது என்று யாருக்கும் தெரியாது. எனினும், நாம் இப்போது என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே அந்த உலகம் அமையும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

மும்முனை நெருக்கடி
நாம் இன்றைக்கு ஒரு மும்முனை நெருக்கடியை எதிர்கொள்கிறோம். சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவை நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றன. முதல் நெருக்கடி வைரஸால் உருவானது. இரண்டாவது நெருக்கடி அதை எதிர்த்துப் போரிடுவதற்கான நடவடிக்கைகளைப் பொறுத்தது. மூன்றாவது - ஜனநாயகத்தன்மை இல்லாத அரசின் மூலம் உருவானது. நாம் இந்த மூன்றையும் எதிர்த்துத்தான் பிழைத்திருக்க வேண்டியிருக்கிறது.

உலகை ஊடுருவியிருக்கும் இந்தப் பெருந்தொற்றைக் கண்டு நாம் அஞ்சுவதற்கான காரணங்கள் நம் முன்னே மிகத் தெளிவாக இருக்கின்றன. முன்னுதாரணமற்ற வேகத்தில் பரவும் இந்த வைரஸ், வளர்ந்த நாடுகளின் சுகாதார அமைப்பையே திணறடித்துக் கொண்டிருக்கிறது. அடர்த்தியான மக்கள்தொகையைக் கொண்ட நமது ஏழை தேசத்தில் அது எந்த அளவுக்கு ஆபத்தை உருவாக்கும் என்பதில், சுயசிந்தனை கொண்ட யாருக்குமே சந்தேகம் எழாது.

அச்சமும் வலியும்தான் விலங்குகளின் உலகில் ஒரு தற்காப்பு வழிமுறைகளாக இருந்துவருகின்றன. அவைதான் ஆபத்து வருவதை எச்சரிக்கும் குறியீடுகள். இந்தப் பெருந்தொற்றின் காலத்தில்தான், தனிமைப்படுத்துதல் தோன்றியது என்பதல்ல. மனித நாகரிகத்தின் ஆரம்பகாலம் முதலே, பழங்குடியினர் கடைப்பிடித்த வழிமுறைதான் அது. அந்நியர்களை வரவேற்கும் முன்னர், முதலில் நோய்கள் அல்லது தீய சக்திகளிடமிருந்து விலகிநிற்கச் செய்யும் சடங்குகளை அந்நியர்கள் கடந்துவருமாறு செய்வார்கள். அல்லது குறிப்பிட்ட காலம் வரை அவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துவிட்டு, அதன் பின்னர்தான் அவர்களைத் தங்கள் பகுதிகளுக்குள் அனுமதிப்பார்கள்.

அறியாமையால் வளரும் அச்சம்
இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் அச்சத்தை, இந்தப் பெருந்தொற்றின் தீவிரத் தன்மையே நியாயப்படுத்திவிடும். எல்லாவிதமான அச்சங்களைப் போலவே, இந்த அச்சமும் அறியாமையின் காரணமாகவே மென்மேலும் தூண்டப்படுகிறது. இந்தப் புதிய வைரஸை நாம் இன்னமும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. இதற்கான தடுப்பூசிகள் இன்னமும் கண்டிபிடிக்கப்படவில்லை. எனினும், குறைந்தபட்சம் நாம் எதிர்கொண்டிருக்கும் நிஜமான ஆபத்து என்ன என்பதையாவது தெரிவிக்குமாறு விஞ்ஞானிகளையும் அரசியல் தலைவர்களையும் நாம் வலியுறுத்த வேண்டும். தெளிவான தகவல்கள், நிபுணர்களின் விளக்கங்கள் ஆகியவற்றுடன், இந்த நெருக்கடியிலிருந்து வெளிவர ஒரு தேசத்தையே ஒருங்கிணைக்கக்கூடிய அரசியல் தலைமையும் சேரும்போதுதான் அச்சத்தை நம்மால் வென்றெடுக்க முடியும். துரதிர்ஷ்டவசமாக, இவற்றில் எதுவுமே நம்மிடம் இல்லை. மாறாக, அச்சத்தின் அரசியலே அரசு வியூகத்தின் அடிப்படை அம்சமாக முன்னிறுத்தப்படுகிறது.

தவறான வழிநடத்தல்
நாம் இன்றைக்கு மூன்றாம் உலகப் போரை நோக்கிய விளிம்பில் நிற்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு எல் சால்வடோர் அதிபர் நயீப் புகேலே சென்றிருக்கிறார். அது மட்டுமல்ல, தனது கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களை, இந்த நெருக்கடியைக் கையாளும் விதத்தை விமர்சிப்பவர்களை, ஏன் மேலதிக விவரங்களைக் கேட்பவர்களைக்கூட துரோகிகள் என்று பகிரங்கமாக விமர்சிக்கிறார்.

அவர் வாயிலிருந்தோ, அவரது ட்விட்டர் பக்கம் மூலமோ வெளிவரும் கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் வேலையை அவரது ஆதரவாளர்கள் உடனடியாகச் செய்கிறார்கள். இதன் விளைவாக, ஏராளமான மக்கள் பீதியில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த பீதியானது, சமூக வலைதளங்களிலிருந்து சமூகத்துக்கும் கடத்தப்படுகிறது. அது, கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான தொடக்கமாக இருக்கிறது.

விமான நிலையங்களையும் எல்லைகளையும் அரசு மூடிவிட்ட நிலையில், தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் திறந்தவெளியில் சிக்கித் தவிக்கும் மக்கள் அவமதிக்கப்படுகிறார்கள். கரோனா வைரஸைப் பரப்புபவர்களாகவும், மற்றவர்களைக் காக்க தங்களைத் தியாகம் செய்ய முன்வராத சுயநலமிகளாகவும் அவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் பழிசுமக்கும் அவலம்
எல் சால்வடோரில் கரோனா தொற்றுக்குள்ளான முதல் நபர், சட்டவிரோதமாக எல்லை தாண்டி நாட்டுக்குள் நுழைந்தவர் என்பது நயீப் புகேலேயின் குற்றச்சாட்டு. “அந்த நபர் பொறுப்பில்லாதவர்; அவரால் நம் அனைவருக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது” என்றெல்லாம் குற்றம் சாட்டினார் அதிபர். அவர் சொல்வது சரியாகக்கூட இருக்கலாம். ஆனால், குற்றம் சாட்டும் வகையிலான அவரது தொனியானது, அந்த நபர் வேண்டுமென்றே நமக்குத் தொற்றை ஏற்படுத்த முயற்சி செய்தார் என்று அர்த்தம் கற்பித்துவிட்டது. அந்த நோயாளியை அடித்துக் கொல்ல வேண்டும்; சாகும்படி விட்டுவிட வேண்டும் என்றெல்லாம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுதினர்.

தனது வார்த்தைகள் ஏற்படுத்தும் கடும் விளைவுகளை புகேலே அறியவில்லை. இதன் காரணமாக, வைரஸால் பாதிக்கப்பட்டவர்களே, பிறருக்குப் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் போல நடத்தப்படுகிறார்கள்.

கரோனா கட்டுப்பாட்டு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் ஏராளமானோர், தங்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், பரிசோதனை முடிவை எழுத்து வடிவில் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்கள். வீடு திரும்பிய பின்னர், அண்டை வீட்டினர் தங்களைப் புறக்கணித்துவிடக் கூடாது எனும் கவலைதான் இதற்குக் காரணம்.

கிராமப்புறங்களில், பயிர்கள் நாசமாகி வருவதற்குக் காரணம், கரோனா வைரஸ் மீதான விவசாயிகளின் பயம் அல்ல. அது போலீஸார் மீதான பயம். விவசாயிகள் வெளியிலோ அல்லது விளைநிலங்களிலோ பிடிபட்டால் அவர்கள் கட்டுப்பாட்டு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு ஒரு மாத காலம் அடைக்கப்பட்டிருப்பதுடன், தொற்றுக்குள்ளாகும் அபாயத்தையும் எதிர்கொள்கிறார்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் அல்லது மருத்துவமனைகளில் இருக்கும் நபர்களின் குடும்பத்தினரை வெளியேற்ற வேண்டும் என்று சில குடியிருப்புப் பகுதிகளில் குரல்கள் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவர்களுக்குக் கரோனா பரிசோதனை நடத்தப்படாத நிலையிலும், பரிசோதனையில் தொற்று இல்லை என்று தெரியவந்த நிலையிலும்கூட இப்படியான அழுத்தங்கள் தரப்படுகின்றன.

அரசியல் ரீதியாக அச்ச உணர்வு உருவாக்கப்படும்போது, அந்த அச்சம் சமூகங்களில் நிலைபெறும்போது, என்ன நடக்கும் என்பது நமக்கு ஏற்கெனவே தெரியும். சில தனிநபர்கள் சார்ந்த குழுக்களாகச் சமூகம் பிரிந்துகிடக்கும்போது, ஒவ்வொருவரும் தாங்கள் பிழைத்திருப்பதைப் பற்றித்தான் கவலைப்படுவார்கள்.

பட்டினி கிடக்கும் உயிர்கள்
இன்றைக்கு எல் சால்வடோரில் ஏராளமான மக்கள் பட்டினி கிடக்கிறார்கள். இதைப் புரிந்துகொள்வது கடினமானதும் அல்ல. எல் சால்வடோர் மக்களில் நால்வரில் மூவர், முறைசாராத் தொழில்களில் ஈடுப்பட்டிருப்பவர்கள்தான். அதாவது, வேலைக்குச் செல்லவில்லை என்றால், அவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பும் கிடையாது.

தெருவோரக் கடைக்காரர்கள், தோட்டக்காரர்கள், கார் கழுவும் தொழிலாளர்கள், மெக்கானிக்குகள், அலுவலக உதவியாளர்கள், பெயின்டர்கள், பிளம்பர்களின் கதியை நினைத்துப்பாருங்கள். இசைக் கலைஞர்கள், செருப்பு தைக்கும் தொழிலாளர்கள், பாலியல் தொழிலாளிகள், வீட்டு வேலைக்கார்கள்… என்று நீண்டுகொண்டே செல்லும் இந்தப் பட்டியலில் ஆயிரக்கணக்கான விவசாயிகளும் அடக்கம்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினருக்குத் தலா 300 டாலர்களை வழங்குவதாக அரசு அறிவித்திருந்த நிலையில், (கிட்டத்தட்ட 15 லட்சம் தொழிலாளர் குடும்பத்தினர் இந்த நிதி உதவி இல்லாமல் சமாளிக்க முடியாது என்று அரசே கணித்திருக்கிறது) அதை வழங்குவதில் காட்டும் அலட்சியத்தால் பல குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. எனினும், சுமார் 5 லட்சம் குடும்பத்தினர் இந்த நிதியுதவியின் மூலம் பசியைத் தணித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 10 லட்சம் பேருக்கு அந்தத் தொகை சென்றடைய வேண்டும்.

இனி என்ன ஆகும்?
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஏழை தேசமான எல் சால்வடோரின் அரசு, மிகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சுமார் 450 மில்லியன் டாலர்களை ஒதுக்கியிருக்கிறது. இது மிகவும் அவசியமான நடவடிக்கைதான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது ஒரு மாதத்துக்கான தீர்வு மட்டும்தான்.

மே மாதம் என்ன ஆகும்? நான்கில் மூன்று பங்கு குடும்பத்தினர் கையில் பணமில்லாமல், உணவில்லாமல், போதிய வருமானமும் இல்லாமல் என்ன செய்வார்கள்? என்று தெரியவில்லை. சிறிய அளவிலான இன்னொரு நிதியுதவிக்கு வாய்ப்பிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி மக்களுக்குக் கிடைக்கலாம். இது மே மாதம் கைகொடுக்கலாம். ஜூன் மாதத்தில்? நாட்டின் பெரும்பாலான மக்களுக்குப் பொருளாதார ரீதியாக உதவும் நிலையில் எல் சால்வடோர் அரசு இல்லை. நமக்குத் தெரிந்ததெல்லாம், இந்தப் பெருந்தொற்று ஜூன் மாதத்தில் மறைந்துசென்றுவிடப் போவதில்லை. ஜூலை, ஆகஸ்ட்டிலும் இதுதான் நிலை.

இப்படியான சூழலுடன் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் திவாலாகும் நிலையும் சேர்ந்துகொள்ளவிருக்கிறது. தனியார் நிறுவனங்களின் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிப்பனவற்றில் 90 சதவீத நிறுவனங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள்தான். நீண்டகாலமாக மூடிக்கிடக்கும் நிலையை அவற்றால் எதிர்கொள்ள முடியாது. அவை திவாலானால், லட்சக்கணக்கானோர் வேலையிழப்பார்கள். வருமானமே இன்றி ஏராளமானோர் வீடுகளில் அடைந்துகிடப்பார்கள். சமூகப் பாதுகாப்பு இல்லாமல், பட்டினியும் பயமுமாகக் கழியப்போகும் இந்தச் சூழல், நம் அனைவரையும் மூழ்கடிக்கும் நிலையைத்தான் சென்றடையும்.

அசாதாரணர்கள் வேண்டும்
இப்படியான நேரத்தில் என்ன தேவை? அரவணைப்பும் பெருந்தன்மையும்தான். நோயாளிகளை அரவணைத்தல், முதியோரை அரவணைத்தல், ஏழைகளை அரவணைத்தல் அவசியம். நம் அண்டை வீட்டார் பசியால் ஓலமிடும்போது, நாம் மட்டும் பத்திரமாக வீட்டில் இருப்பது பயனற்றது. பசியை விடவும் விரக்தியை ஏற்படுத்தும் விஷயம் எதுவுமில்லை என்று எல் சால்வடோர் மக்களுக்கு நன்றாகவே தெரியும். பயத்தைவிடவும் மிகக் கொடூரமானது பசி. இன்று ஏராளமானோர் பட்டினியால் வாடுகிறார்கள்.

இன்று உலகமெங்கும் பரவலாக வாசிக்கப்படும் ‘தி ப்ளேக்’ (The Plague) எனும் புத்தகத்தை எழுதிய அல்ஜீரிய / பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ இப்படி எழுதியிருக்கிறார்: “நாயகர்கள் என்பவர்கள், அசாதாரண விஷயங்களைக் கண்ணியத்துடன் செய்யும் சாதாரணர்கள்தான்.”

மும்முனை நெருக்கடி நம் மீது திணிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில், நமக்குத் தேவை அப்படியான நாயகர்கள்தான். மனிதநேயத்தால் பெருந்தொற்றை வெல்வோம்.

நாம் ஒற்றுமையாக இருந்துதான் இதைக் கடந்துவர முடியும். பலவீனமான நிலையில் இருப்பவர்களை நாம் காக்க வேண்டும். இல்லையெனில், நாம் அனைவருமே வலுவிழந்துவிடுவோம். நம்மால் முடிந்தவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வோம். இன்று நாம் அதைச் செய்யாவிட்டால், நாளை இருப்பவரிடமிருந்து இல்லாதவர்கள் அவற்றைப் பறித்துக்கொள்ளும் நிலை வரும்.

மனிதநேயக் கொள்கைகளை நாம் பயன்படுத்த வேண்டும். அடுத்தவரின் இடத்தில் நம்மைப் பொருத்திப் பார்க்க வேண்டும். அவர்களுக்குச் செவிமடுக்க வேண்டும்; மதிக்க வேண்டும். அவர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும்.

கண்ணியம், அரவணைப்பு, ஒற்றுமை ஆகியவற்றுக்கு மாற்றுகள் என்னென்ன? விரக்தியின் கொடுங்கனவு, கொள்ளைச் சம்பவங்கள், சர்வாதிகாரம், அடக்குமுறை மற்றும் வன்முறை ஆகியவைதான். இந்த மாற்றுகள் நிச்சயமாக அச்சத்தைத்தான் ஏற்படுத்தும். மிக அதிகமான அச்சத்தை!

எனினும், இந்த நெருக்கடியான நேரத்தில் நம்பிக்கையை ஊற்றெடுக்கச் செய்யும் நாயகத்தன்மைக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. நோயாளிகளுக்கு அர்ப்பணிப்புடன் சிகிச்சையளிக்கும் செவிலியர்கள், மருத்துவர்கள்; வென்டிலேட்டர்களை உருவாக்கித்தரும் பல்கலைக்கழக மாணவர்கள்; மருத்துவ சாதனங்களை இறக்குமதி செய்து இலவசமாக வழங்கும் தொழிலதிபர்கள்; உணவு விநியோகம் செய்யும் தொண்டு நிறுவனங்கள் என நீளும் பட்டியல் அது.

நம் கவனத்துக்கு வராமலேயே ஏராளமானோர் தங்கள் சேவைப் பணிகளைச் செய்கிறார்கள் – மிக அமைதியாக. இந்த நெருக்கடியிலிருந்து நல்லவிதமாக வெளிவருவதற்கான நம்பிக்கையை அவர்களின் இன்றைய செயல்கள் அளிக்கின்றன.

மனிதநேயத்தால் இந்தப் பெருந்தொற்றை மரணிக்கச் செய்வோம். பரஸ்பர சேவையின் மூலம். ஒற்றுமையின் மூலம். கண்ணியத்தின் மூலம்!
- கார்லோஸ் டாடா, நன்றி: ஹவானா டைம்ஸ் (கியூபாவிலிருந்து வெளிவரும் இணைய இதழ்)

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்