தென்கொரியாவில் முதல் கரோனா தொற்று கண்டறியப்பட்டு, ஏப்ரல் 28-ம் தேதியுடன், 100 நாட்கள் ஆகிவிட்டன. அங்கே தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை, தொடர்ந்து 8 நாட்களாக சராசரி 10 ஆக இருக்கிறது. இதனால், கரோனா வைரஸ் பரவலைத் தென்கொரியா கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட கரோனா வைரஸ் தொற்று முடிந்துவிட்டதாக நம்பும் நிலைக்கே தென்கொரிய மக்கள் சென்றுவிட்டார்கள்.
ஆனால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது என்று சுகாதார நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள். குறிப்பாக, பொதுமுடக்கத் தளர்வுகளுக்குப் பின்னர், நீண்ட நாட்களுக்கு விடுமுறை வருவதால் மிகுந்த எச்சரிக்கை அவசியம் என்று அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
தளர்வும் நிபந்தனைகளும்
ஏப்ரல் 18, 19, 20 ஆகிய தேதிகளில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 முதல் பொதுமுடக்கத்தில் சில முக்கியத் தளர்வுகளைத் தென்கொரியா அமல்படுத்தியது. இதன்படி பார்கள், நைட் கிளப்புகள், உள்ளரங்கு விளையாட்டுகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்துப் பள்ளிகளையும் திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் தென்கொரிய அரசு இறங்கியிருக்கிறது. தேவாலயங்கள், பவுத்த மடங்களில் இப்போதே விழாக்கள் களைகட்டத் தொடங்கிவிட்டன. ராணுவ வீரர்கள் வெளியிடங்களுக்குச் சுற்றிப்பார்க்கச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை, பகுதியளவில் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது.
தனியார் துறையில் தனிமனித இடைவெளி தொடர்பான விதிமுறைகளையும் அரசு தளர்த்தியது. மே 6 முதல் மேலும் தளர்வுகள் அமல்படுத்தப்படவிருக்கும் நிலையில், ‘அன்றாடம் இடைவெளியைக் கடைப்பிடித்தல்’ எனும் விதிமுறையைத் தென்கொரிய அரசு கொண்டு வருகிறது. இதற்காக, விரிவான 31 வழிகாட்டுதல்கள் கொண்ட வரைவையும் வெளியிட்டிருக்கிறது. ‘அன்றாடம் இடைவெளியைக் கடைப்பிடித்தல்’ என்பது, கரோனா வைரஸ் பரவலின் வேகத்தை மட்டுப்படுத்தும் வகையில் இடைவெளியைக் கடைப்பிடித்தவாறே பொருளாதார ரீதியிலான, சமூக ரீதியிலான செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு மக்களை அனுமதிப்பது ஆகும்.
அதிகரிக்கும் கூட்டம்
எனினும், இன்னமும் நிச்சயமற்ற சூழலே அங்கு நீடிக்கிறது. பூங்காக்களிலும் உணவகங்களிலும் மக்கள் இடைவெளி இல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிகிறது. பார்கள், நைட் கிளப்புகளில் கூட்டம் நிரம்பிவழிகிறது. பூஸான் நகரில் உள்ள ஒரு பார், நைட் கிளப்புக்குச் சென்றுவந்த டேகு நகரைச் சேர்ந்த 19 வயது இளைஞருக்குக் கடந்த வியாழன் அன்று கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர் சென்ற தடங்களில் கிட்டத்தட்ட 480 பேர் சென்று வந்திருப்பதாகத் தற்போது தெரியவந்திருக்கிறது.
விடுமுறையும் விபரீதங்களும்
தென்கொரியாவில், புத்தர் பிறந்த நாள், குழந்தைகள் தினக் கொண்டாட்டங்கள் என 6 நாட்களுக்குத் தொடர் விடுமுறை வருவதால் அந்நாட்டின் சுகாதார அதிகாரிகள் அவசர அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஏற்கெனவே, ரிசார்ட்டுகள், ஹோட்டல்களில் முன்பதிவு 90 சதவீதத்தை எட்டிவிட்டது. புகழ்பெற்ற ஜேஜு தீவு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதற்கான விமான டிக்கெட்டுகளின் முன்பதிவும் 80 சதவீதம் அதிகரித்திருக்கிறது. சுமார் 1.80 லட்சம் பேர் ஜேஜு தீவுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தென்கொரியாவின் சுகாதாரத் துறை துணை அமைச்சர் கிம் கேங்லிப் கூறியிருக்கிறார். இத்தனைக்கும், “மக்கள் யாரும் இங்கு வர வேண்டாம்” என்று ஜேஜு மாகாண அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது.
2018-ல், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்த கேங்வான் மாகாணத்தின் நகரங்களுக்குச் செல்லவும் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அங்குள்ள தங்கும் விடுதிகளில் பெரும்பாலானவை இப்போதே முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. வெளியூர்களுக்குச் செல்லும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும், உணவுகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டிருக்கும் கிம் கேங்லிப், காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகள் இருப்பவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார். கேங்க்வானின் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் போன்றவற்றில் தெர்மல் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஜேஜு தீவுக்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு வைரஸ் தொற்றுப் பரிசோதனை நடத்த அம்மாகாண அரசு தயாராக இருக்கிறது. ஒருவருக்கு 37.3 டிகிரி செல்சியஸ் காய்ச்சல் இருந்தாலும் அவருக்குப் பரிசோதனை நடத்தப்படும் என்று ஜேஜு மாகாண அரசு அறிவித்திருக்கிறது.
முன்னுதாரணங்கள் உணர்த்தும் எச்சரிக்கைகள்
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் முன்மாதிரியான தேசம் என்று ஆரம்பத்தில் சிங்கப்பூர் புகழப்பட்டது. எனினும், அங்கே புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வசிப்பிடங்களில் நூற்றுக்கணக்கானோர் வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது.
அதேபோல, நகர்ப்புறங்களில் உள்ள மலிவான விடுதிகள், வீடற்றவர்கள் வசிக்கும் வெளிப்புறப் பகுதிகள், சட்டவிரோதக் குடியேறிகளின் இருப்பிடங்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதில் தென் கொரிய அரசு அலட்சியம் காட்டுகிறது. இதுபோன்ற இடங்களில் அதிகமானோருக்குத் தொற்று ஏற்படத் தொடங்கினால், தொற்றுக்குள்ளானோரின் தொடர்புகளைத் தடமறிவது கடினமான விஷயமாக இருக்கும். வைரஸ் மிகத் துரிதமாகப் பரவிவிடும்.
இரண்டாவது அலைக்கு வாய்ப்பு
கரோனா வைரஸ் இரண்டாவது அலையாகப் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது கவலையளிக்கும் விஷயம். குறிப்பாக, இலையுதிர் காலத்திலும் குளிர்காலத்திலும் மீண்டும் கரோனா வைரஸ் அதிக அளவில் பரவும் சூழலைத் தென்கொரியா எதிர்கொள்ள நேரும் என்று அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்திருக்கிறது. தென்கொரிய சுகாதாரத் துறை அதிகாரிகளும் இதை உறுதி செய்திருக்கிறார்கள். இந்தப் பெருந்தொற்று 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் அறிகுறிகள் தென்படாதவர்கள் மூலமும் கரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதும், இதுவரை இதற்குத் தடுப்பூசியோ மருந்துகளோ இல்லை என்பதும் மீண்டும் நினைவுகூரத்தக்க விஷயங்கள். கரோனா வைரஸ், முப்பதுக்கும் மேற்பட்ட மரபணு மாற்றங்களை அடைந்திருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. குளிர்காலத்தில் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களும், கரோனா வைரஸ் பரவலும் அதிகரிக்கும் என்பதும் மிகப் பெரிய சவால்.
நெருக்கடி முடிந்துவிடவில்லை
இப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கும் சூழலில், சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டியது தென்கொரிய அரசின் கடமை என்று தென்கொரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. தென்கொரியாவில் வைரஸ் பரவல் மட்டுப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நெருக்கடி இன்னமும் முடிந்துவிடவில்லை.
இந்தப் பெருந்தொற்று நீடிக்கும்பட்சத்தில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கு அரசு தயாராக வேண்டும். தொற்றுநோய்களை வெற்றிகரமாகத் தடுப்பதன் மூலம்தான், வழக்கமான சமூக, பொருளாதார நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள முடியும்.
கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, அரசு சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால், மக்கள் அந்த வழிகாட்டுதல்களை மீறித் தொடர்ந்து இயங்கிவந்தால் அவை அர்த்தமற்றவையாகிவிடும்.
கரோனா வைரஸுடன் நீண்ட காலம் வாழ வேண்டிய நிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நேரத்தில், தென் கொரியா மேலும் அலட்சியம் காட்டினால், வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை எந்த நேரத்திலும் வந்துவிடலாம்!
- தென்கொரிய நாளிதழான ‘தி கொரியா ஹெரால்டு’ இதழில் வெளியான தலையங்கத்தைத் தழுவி எழுதப்பட்டது.
தொகுப்பு: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
உலகம்
2 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago