''வியட்நாமில் எந்த மாகாணத்திலும் கரோனா நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தற்போதுவரை தென்படவில்லை. எனினும் அத்தியாவசியத் தேவைகளற்ற கடைகள் மூடப்படும்'' என்று அந்நாட்டின் பிரதமர் நுயென் ஜுவான் கடந்த வாரம் அறிவித்தார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளே செய்வதறியாது தவித்துக் கொண்டிருக்கின்றன.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு சுமார் 70,000 பேர் வரை இறக்கலாம் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கும் நேரத்தில், 9.7 கோடி மக்கள்தொகையைக் கொண்ட தெற்காசிய நாடான வியட்நாம் கரோனா வைரஸால் இதுவரை தனது நாட்டு மக்களில் ஒருவரைக் கூட இழக்காத சாதனையைப் புரிந்துள்ளது.
மேலும் வியட் நாமில் 270 பேர் மட்டுமே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 222 பேர் தொற்றுப் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.
பிற தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து ஆகியவை கரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கை நீட்டித்துக் கொண்டிருக்க வியட்நாம் மட்டும் ஊரடங்கை தளர்த்தியுள்ளது. ( மூன்று மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.)
சீனாவை நன்கு அறிந்திருந்த வியட்நாம்
சீனாவில் டிசம்பர் மாதம் கரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சீனாவின் வூஹான் நகர அரசின் செயல்பாடுகளை வியட்நாம் அரசு தீவிரமாகக் கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. ஏனென்றால் சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்துள்ள வியட்நாம் சார்ஸ் உட்பட பல தொற்றுநோய்களின் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தது. சுமார் 15க்கும் அதிகமான தொற்றுகளை வெற்றிகரமாகக் கையாண்டு கடந்த வரலாறு வியட்நாமுக்கு உண்டு.
இதன் காரணமாக கரோனா வைரஸ் தொற்று வியட்நாமைத் தாக்கினால் அதனை எதிர்க்க மக்களைத் தயார்படுத்தும் பணியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டது.
எல்லைகளை உடனடியாக மூடியது
சீனாவில் கரோனா வைரஸ் தொற்று கணிசமாக அதிகரிக்க எல்லைகளை உடனடியாக மூடியது வியட்நாம். முதல் முறையாக ஜனவரி மாத இறுதியில் வியட்நாமில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாத ஆரம்பம் முதல் வெளிநாட்டிலிருந்து வரும் அனைவரையும் விமான நிலையங்களில் முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
பரிசோதனைகளை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்காக பெரிய ஹோட்டல்களை வியட்நாம் அரசு பயன்படுத்திக் கொண்டது. மேலும், தொற்று குறித்த தகவல்களை மறைப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
தகவல் தொழில்நுட்பத் தொடர்புகள் மூலம் கரோனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அவ்வைரஸ் எவ்வளவு விரைவில் பரவுகிறது என்ற தகவலை மக்களிடம் மிக விரைவாக வியட்நாம் அரசு கொண்டு சென்றது.
நாட்டின் பல்வேறு மையங்களில் பரிசோதனை மையங்களை அரசு அமைத்தது. பிரதமர் அலுவலகம், அமைச்சர்கள் அலுவலகம் மூலம் மக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஒவ்வொரு நாளும் கொண்டு செல்லப்பட்டது. நகரங்கள், கிராமங்கள் என கரோனா குறித்த சுவரொட்டிகள் நாடு முழுவதும் ஒட்டப்பட்டன. இதன் மூலம் கரோனா வைரஸ் குறித்த ஆபத்தின் விளைவுகளை வியட்நாம் மக்கள் முழுமையாக உள்வாங்கினர்.
காப்பாற்றிய உள்நாட்டு மருத்துவ உபகரணங்கள்
கரோனா வைரஸைப் பொறுத்தவரை தொற்று பாதித்தவர் உடனடியாக அடையாளம் காணப்பட்டு அவரைத் தனிமைப்படுத்திவிட்டாலே அவ்வைரஸ் பரவும் சங்கிலித் தொடர்பை உடைத்து விடலாம். இதைத்தான் தென்கொரியா போன்ற நாடுகள் விரைவாகப் பின்பற்றி கரோனா தொற்றுப் பரவலைக் குறைத்தன.
இந்த முறையை வியட்நாமும் செயல்படுத்தியது. இதில் முக்கியப் பங்காற்றியது நோய்த்தொற்றைக் கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைக் கருவிகள். அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் மருத்துவக் கருவிகளுக்காக தென்கொரியா, சீனா போன்ற நாடுகளை நம்பியிருக்க வியட்நாம் நோய்த்தொற்று ஏற்பட்ட உடனேயே உள்நாட்டிலேயே மருத்துவப் பரிசோதனைக் கருவிகளை உற்பத்தி செய்யும் பணியை மார்ச் மாதத்திலேயே தொடங்கியது.
வியட்நாமின் மருத்துவப் பரிசோதனைக் கருவிகள் குறைந்த விலையில் உருவாக்கப்பட்டிருந்தாலும் அதன் முடிவுகள் சிறந்த பலனை அளித்தன. சுமார் 90 நிமிடத்திலேயே ஒரு நபருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை அவை உறுதிப்படுத்தன. மலிவு விலையில் தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவப் பரிசோதனைக் கருவிகள்தான் வியட்நாம் அரசின் கரோனா வைரஸ் எதிர்ப்புப் போராட்டத்தில் பெரிதும் கைகொடுத்தன.
இந்தக் காலகட்டத்தில்தான் வளர்ந்த நாடுகள் மருத்துவக் கருவிகளுக்காக பிற நாடுகளை நம்பியிருந்தன. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா சங்கிலியை உடைக்க முடியாமல் தற்போது தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
அரசுக்கு ஒத்துழைத்த மக்கள்
வியட்நாமில் கரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர தொடக்கத்தில் மக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளையே அரசு விதித்தது. கட்டுப்பாடுகளின் அவசியத்தை உணர்ந்த மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். மேலும் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கும் பணியிலும் மக்கள் ஈடுபட்டனர்.
மார்ச் மாத இறுதி மற்றும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் கரோனா தொற்று குறைந்த வீச்சில் இருந்த சிங்கப்பூர் தற்போது தெற்காசிய நாடுகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள நாடாக மாறியுள்ளது.
ஆனால், வியட்நாம் கடந்த இரு மாதங்களாக ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தியதின் விளைவால் அங்கு கரோனா தொற்றுச் சங்கிலி உடைக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதில் அரசாங்க செயல்பாடுகளுக்கு ஒத்துழைத்த மக்களுக்கு அந்நாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது.
கரோனாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு வழிகாட்டும் வியட்நாம்
அமெரிக்காவுடனான போரில் பெரும் பேரழிவைச் சந்தித்தது வியட்நாம். சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்களை இழந்த அந்நாடு மீண்டு வர முடியாத அளவுக்கு அடுத்தடுத்த வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் பெரும் பொருளாதாரச் சேதத்தைச் சந்தித்தது வியட்நாம்.
வரலாற்றில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காமல் வளர்ச்சிப் பாதைக்கு சென்றது வியட்நாம்.
இதற்கு உதாரணமாக கடந்த ஆண்டு நடந்த கிம் - ட்ரம்ப் வரலாற்றுச் சந்திப்பு, பொருளாதார மாநாடுகளைத் தலைமை ஏற்று நடத்தியது. இந்த நிலையில்தான் இந்த நூற்றாண்டின் பெரும் துயராகப் படர்ந்து வரும் கரோனா வைரஸுக்கு எதிரான போரில் வென்று காட்டியதுடன் தங்கள் மீது போர் தொடுத்த அமெரிக்காவுக்கு கரோனா வைரஸிலிருந்து தற்காத்துக் கொள்ளும் லட்சக்கணக்கான மருத்துவ ஆடைகளை ஏற்றுமதி செய்து தனது மனிதாபிமானத்தைக் காட்டியுள்ளது வியட்நாம்.
முக்கிய செய்திகள்
உலகம்
9 hours ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago