ட்ரம்ப்பின் போர்க்காலச் செய்தி விளக்கங்கள் நடக்கும் இடத்திலிருந்து ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில், ஆஸ்திரேலியாவின் பழமைவாதத் தலைவரும், நியூசிலாந்தின் முற்போக்குப் பிரதமரும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தத்தமது நாடுகளைத் தீர்க்கமாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
மார்ச் மாதத்தில் இந்த இரண்டு நாடுகளிலும் தினமும் நூற்றுக்கணக்கானோர் தொற்றுக்குள்ளாகிவந்த நிலையில், தற்போது ஒவ்வொரு நாளும் விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையில்தான் புதிய தொற்றுகள் கண்டறியப்படுகின்றன. இரண்டு நாடுகளும் ஓர் அசாதாரண இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. தங்கள் தீவு தேசங்களிலிருந்து கரோனா வைரஸை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதுதான் அந்த இலக்கு!
பூஜ்ஜிய இலக்கு
பூஜ்ஜிய இலக்கை அடைவது சாத்தியமோ இல்லையோ, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய இரண்டு நாடுகளும் அதை நிறைவேற்றுவதற்கான நம்பிக்கையை விதைத்திருக்கின்றன. ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மாரிஸன், ஒரு பழமைவாதக் கிறிஸ்தவர். நியூசிலாந்தின் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன், இடதுசாரிகளின் அபிமானம் பெற்றவர். பாரபட்சமின்மை, நிபுணர்களின் வழிகாட்டுதல், பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கொண்ட ஜனநாயகத்தின் துணையுடன் இருவருமே வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள்.
இந்த அணுகுமுறை நிச்சயம் அமெரிக்காவிலிருந்து வேறுபட்டது என்கிறார் உலக சுகாதார நிறுவனத்தில் பணியாற்றியவரும் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் பேராசிரியருமான டாக்டர் பீட்டர் காலிக்னான். “இந்நாடுகளைப் பொறுத்தவரை இது அரசியலுக்கான நேரமல்ல. தரவுகளின் அடிப்படையில் அறிவுபூர்வமாகச் செயலாற்ற வேண்டிய நேரம்” என்கிறார் காலிக்னான்.
ஆரம்பத்திலிருந்தே விழிப்புணர்வு
ஜனவரி 25-ல் ஆஸ்திரேலியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டது. நியூசிலாந்தில் பிப்ரவரி 28-ல் முதல் தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பையும், ஐரோப்பியத் தலைவர்களையும் ஒப்பிட, மாரிஸனும் ஆர்டெர்னும் கூடுதலான ஆயத்த நிலையில் அதை எதிர்கொண்டனர். கண்டிப்பான எச்சரிக்கையையும் விடுத்தார்கள்.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு பிப்ரவரி 1-ல் (அமெரிக்காவுக்கு ஒரு நாள் முன்னதாக) தடை விதித்தார் மாரிஸன். கரோனா வைரஸ் ஒரு பெருந்தொற்று என்று பிப்ரவரி 27-ல் (உலக சுகாதார நிறுவனத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக) அவர் அறிவித்தார். அத்துடன், மருத்துவமனை வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய, மாநில அமைச்சர்களைக் கொண்ட ஒரு தேசிய அமைச்சரவையையும் அமைத்தார்.
அரசு மிக அதிக அளவில் மையப்படுத்தப்பட்ட நாடான நியூசிலாந்தில், அந்நாட்டின் பிரதமர் ஜெஸிந்தா ஆர்டெர்ன் முக்கியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்தார். அதன்படி, அந்நாட்டின் முதல் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ஒரு மாதத்துக்குள் அங்கு முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டது.
இரு நாடுகளிலும் ஆரம்பத்தில் பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புகள் வந்தன. பின்னர் அதை ஏற்றுக்கொண்டனர். ஏனெனில், வைரஸ் பரவல் குறித்த தகவல்களை ஒவ்வொரு மட்டத்திலிருந்தும் அதிகாரிகள் சீராக வழங்கிவந்தனர். பழைய பாணியில் வானொலி மூலம் தொடர்ந்து பேசினார் மாரிஸன். ஆர்டென், ஃபேஸ்புக் லைவ் மூலம் மக்களிடம் உரையாற்றினார். எனினும், இருவரும் சான்றுகளின் அடிப்படையில் பிரச்சினையைப் புரிந்துகொண்டு செயலாற்றுவதாக விஞ்ஞானிகளிடமிருந்து பாராட்டுகள் குவிந்தன.
கட்டுக்குள் வரும் கரோனா
இவற்றின் விளைவுகள் மறுக்க முடியாதவை. இரு நாடுகளும் கரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கின்றன. 2.5 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஆஸ்திரேலியாவில், ஈஸ்டர் பண்டிகை வரை 1.53 லட்சம் பேருக்குத் தொற்று ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய தேதிக்கு 6,670 பேருக்குத்தான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 78 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். அந்நாட்டில் வைரஸ் தொற்றின் தினசரி வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைவு. தனிநபர் பரிசோதனை விகிதமும் உலகிலேயே இங்குதான் அதிகம்.
அதேபோல நியூசிலாந்தில் மார்ச் மாதம் வரை, தினசரி தொற்று விகிதம் அதிகரித்துவந்த நிலையில் தற்போது அது 1 சதவீதத்துக்கும் குறைவாகியிருக்கிறது. அந்நாட்டில், 1,456 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. 17 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 50 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட அந்நாட்டில், தீவிர நிலையில் இருக்கும் ‘கோவிட்-19’ நோயாளிகளின் எண்ணிக்கை 361 தான். இந்தத் தரவுகள், இந்த இரு நாடுகளும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தைவான், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு இணையாக வந்துகொண்டிருப்பதைக் காட்டுகின்றன.
களமிறங்கிய விஞ்ஞானிகள்
இவை அனைத்துமே விஞ்ஞானிகளிடமிருந்துதான் தொடங்கின. கரோனா வைரஸின் மரபணு வரிசை தொடர்பான தகவல்களை ஜனவரி மாதம் சீனா வழங்கிய உடனேயே, ஆஸ்திரேலியாவின் பொது சுகாதாரத் துறையைச் சேர்ந்த நோயியல் நிபுணர்கள், பரிசோதனை தொடர்பான திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர். ஆஸ்திரேலியாவின் எல்லா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் அரசியல்வாதிகளை முந்திக்கொண்டு விஞ்ஞானிகளே செயல்படத் தொடங்கினர்.
சுகாதாரத் துறைப் பணியாளர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைச் சமாளிக்கவும், சுகாதாரத் துறை வசதிகளை மேம்படுத்தவும் தேவையான நிதி நடவடிக்கைகளை ஆஸ்திரேலிய அரசு எடுத்தது. தொற்று அதிகரிக்கத் தொடங்கியபோது, பல பரிசோதனை மையங்களும், மருத்துவமனைகளும் விஞ்ஞானிகளின் உதவியைப் பெறுவதில் முனைப்பு காட்டின.
அந்தக் கூட்டு முயற்சிதான் அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களை வரையறுத்தது. மாரிஸன் எடுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளால் தூண்டப்பட்ட பல்வேறு மாநில மற்றும் உள்ளூர்ப் பணிக் குழுக்கள், ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு பணிபுரியத் தொடங்கின. கரோனா வைரஸ் தொடர்பாக சுயாதீனமாக ஆய்வு நடத்திவந்த ஆராய்ச்சியாளர்கள் இப்பணியில் இணைந்தனர். அவர்களது ஆய்வு முடிவுகள், மின்னஞ்சல்கள், குழு உரையாடல்கள் மூலம் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அவை தேசியக் கொள்கை வகுப்பாளர்களிடம் கொண்டுசெல்லப்பட்டன.
கூட்டு முயற்சி
இதையடுத்து, புதிதாக அமைக்கப்பட்ட தேசிய அமைச்சரவை ஆச்சரியப்படும் விதத்தில் ஒருமித்த கருத்துடன் செயலாற்றத் தொடங்கியது. முழுவீச்சிலான கூட்டாட்சி அமைப்பைக் கொண்டிராத ஆஸ்திரேலியாவில், மாநிலத் தலைவர்களுக்கிடையே பெரிய அளவில் கருத்து வேறுபாடுகள் உண்டு. ஒருவகையில், அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்களை நினைவுபடுத்தும் அளவுக்கு அவர்களின் பங்களிப்பும் அதிகாரமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்தில், பொதுச் சுகாதார நிபுணர்கள் இன்னும் துணிச்சலான நடவடிக்கையில் இறங்கினர். அரசுக்கு வெளியே ஒலித்த முக்கியக் குரல், வெலிங்டனில் உள்ள ஓடாகோ பல்கலைக்கழகப் பேராசிரியரான டாக்டர் மைக்கேல் பேக்கருடையது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், முற்றிலும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று அவர் அழுத்தம் தர ஆரம்பித்தார்.
தைவான் உதாரணம்
நியூசிலாந்திலிருந்து கரோனா வைரஸை ஒழிப்பது எனும் இலக்கு குறித்த அறிவிப்பை மார்ச் 23-ல் பிரதமர் ஆர்டெர்ன் வெளியிட்டார். எனினும், அறிகுறி தென்படாத ஏராளமான நோயாளிகள் இருக்கும் நிலையில், கரோனா வைரஸை ஒழிப்பதற்கான உத்தரவாதத்தை அளிப்பது சாத்தியம்தானா எனும் கேள்வியை விமர்சகர்கள் எழுப்பினர்.
இதற்கு விளக்கமளித்த டாக்டர் மைக்கேல் பேக்கர், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய தைவானை உதாரணம் காட்டினார். 2.3 கோடி மக்கள் தொகையையும், நெருக்கமான தீவுக் கூட்டங்களையும் கொண்ட தைவான், தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்ட விதத்தை அவர் குறிப்பிட்டார்.
“எல்லைகளைக் கண்காணிப்பது, தொடர்புகளின் தடம் அறிவது, பரிசோதனைகள் ஆகியவற்றைச் செய்யும் வகையில் எல்லா அமைப்புகளையும் இயங்கச் செய்வதில்தான் இருக்கிறது விஷயம்” என்றார் அவர்.
கொண்டாடப்படும் விஞ்ஞானிகள்
ஆஸ்திரேலியாவின் தலைமை மருத்துவ அதிகாரியான டாக்டர் ப்ரெண்டன் மர்ஃபி, சமீபத்தில் நியூசிலாந்து நாடாளுமன்றக் குழுவிடம் பேசியபோது, “கரோனா வைரஸை ஒழிப்பது என்பது ஒருவகையில், ‘நிர்வாணா’ சூழலை உருவாக்குவது போன்றது. சர்வதேசப் பயணங்களைக் காலவரையின்றி தடை செய்வது, தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத வரை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவது ஆகிய நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காதவரை, அந்த நிலையை எட்டுவது கடினம்” என்று குறிப்பிட்டார்.
ஒருவேளை அது நடந்துவிட்டால், டாக்டர் ப்ரெண்டன் மர்ஃபி, நியூசிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஆஷ்லே ப்ளூம்ஃபீல்டு ஆகிய இருவருக்கும் பாராட்டுகள் குவியும். அமெரிக்காவில் அறிவியல் ரீதியான விளக்கங்களுக்கான முகமாக இருக்கும் டாக்டர் ஆன்டனி பவுசியைப் போல, இவர்கள் இருவரும் பொது சுகாதார விஷயங்களில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றவர்கள், பதற்றமில்லாதவர்கள், உண்மைகளின் அடிப்படையில் பேசுபவர்கள்.
டை அணியாமல், கலைந்த தலைமுடியுடன் ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சிகளைத் தினமும் நடத்திவரும் டாக்டர் ப்ளூம்ஃபீல்டு மிகவும் பிரபலமடைந்து விட்டார். வெலிங்டனைச் சேர்ந்த ஒரு ஓவியர், ப்ளூம்ஃபீல்டின் முகத்தைச் சுற்றி இதயங்கள் வரையப்பட்ட துண்டுகளை உருவாக்கி விற்கவே ஆரம்பித்துவிட்டார்.
இரு நாடுகளின் பொருளாதாரமும் சிதைவுற்றிருக்கும் நிலையிலும், செலவுகளைக் குறைத்துக்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கும் நிலையிலும் ப்ளூம்ஃபீல்டு போன்றவர்கள், அரசின் மீது மக்களிடம் நம்பிக்கையை விதைக்கும் முக்கியக் காரணிகளாக இருக்கிறார்கள்.
மாரிஸனும், ஆர்டெர்னும் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை மீண்டும் தொடங்கலாம் என்று ஏற்கெனவே ஆலோசித்து வருகிறார்கள். ஒருவேளை, சிறந்த நிர்வாகத்தின் மூலம் கரோனா வைரஸை ஒழிக்க முடிந்தால், அது ஜனநாயக ரீதியில் மட்டுமல்ல, நிபுணத்துவம் எனும் விழுமியத்தின் அடிப்படையிலும் நம்பிக்கையை மறுகட்டமைக்கும் என்று சில விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
- டேமியன் கேவ், நன்றி: தி நியூயார்க் டைம்ஸ்
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்
முக்கிய செய்திகள்
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago