கரோனா மீண்டெழக் காரணமாகவிடும்; லாக் டவுனைத் தளர்த்தும்போது கவனத்துடன் செயல்படுங்கள்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

By பிடிஐ

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தும்போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். பொருளாதாரத்தை இயல்புப் பாதைக்குக் கொண்டுவரும் நோக்கில் அவசரப்பட்டு செயல்பட்டால், கரோனா வைரஸ் மீண்டெழுந்து மக்கள் மீண்டும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸால் அங்கு 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஏறக்குறைய 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் லாக் டவுன் காரணமாக மூடப்பட்டுள்ளன.

இன்னும் அங்கு கரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், விரைவில் அனைத்து மாநிலங்களிலும் லாக் டவுன் நீக்கப்பட்டு இயல்புநிலைக்குப் பொருளாதாரத்தைக் கொண்டுவர அரசு மும்முரமாக இருக்கிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனமான போயிங் தனது உற்பத்தியை விரைவில் தொடங்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி நாடுகளிலும் படிப்படியாக லாக் டவுன் தளர்த்தப்பட உள்ளது.

அதிகரித்து வரும் வேலையின்மை, பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியால் வேறு வழியின்றி நாடுகள் பொருளாதாரச் சக்கரத்தைச் சுழலவைக்கத் தயாராகிவிட்டன. கடந்த ஒரு மாதமாக அமெரிக்கப் பொருளாதாரம் கரோனாவால் முடங்கியதால் இன்று பெட்ரோலியக் கச்சா எண்ணெய் மைனல் 37 டாலர்களாக வரலாற்றில் இல்லாத சரிவைச் சந்தித்தது.

அமெரிக்காவில் மீண்டும் பொருளாதாரத்தை இயல்புப்பாதைக்குக் கொண்டுவர அதிபர் ட்ரம்ப் பல்வேறு நடவடிக்கைகளையும், நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியுதவியும் அளித்து வருகிறார்.

குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஆளுநர்கள் தங்கள் மாநிலத்தில் கரோனா தாக்கம் குறைந்துவருவதால், விரைவில் பொருளாதாரச் செயல்பாடுகளைத் தொடங்கிவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். ஜார்ஜியா, டெக்சாஸ், டென்னெஸி, வெஸட் விர்ஜினியா ஆகிய மாநிலங்கள் லாக் டவுனைத் தளர்த்தி பொருளாதார நடவடிக்கைகளை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளன.

இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பின் மேற்கத்திய பசிபிக் பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் தக்கேஷி கசாய் நிருபர்களிடம் இன்று கூறுகையில், “பல நாடுகள் தங்கள் நாட்டில் கரோனா பாதிப்பு முழுமையாக அடங்குவதற்குள் பொருளாதாரச் செயல்பாடுகளைத் தொடங்க லாக் டவுனை நீக்க முடிவு செய்துள்ளன.

ஆனால், அவசரப்பட்டு லாக் டவுனை நீக்கி கவனக்குறைவாகச் செயல்பட்டால் கரோனா வைரஸ் மீண்டெழுந்து மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். லாக் டவுனைத் தளர்த்த இதுநேரமல்ல.

எதிர்காலத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையை வாழப் போகிறோம் என்பதற்குத் தயாராகும் காலமாகும். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதில் அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

லாக் டவுனைத் தளர்த்திய பின் மக்களிடையே சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். இவை இரண்டுக்கும் சம அளவு முக்கியத்துவம் அளித்து மக்கள் உச்சபட்ச சுகாதாரத்தைப் பின்பற்றி பொருளாதாரத்தை நடத்த அனுமதிக்கலாம்” எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE