சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவான கரோனா வைரஸ் சந்தைகளில் விலங்குகளிடம் இருந்து உருவானதா அல்லது சீனாவின் சோதனைக் கூடங்களில் கரோனா வைரஸைத் தவறாகக் கையாண்டதால் மக்களுக்குப் பரவியதா என்பது குறித்து விசாரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
சீனாவின் ஆய்வகங்களில் இருந்து கரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்று வரும் கருத்துகளை, செய்திகளை முற்றிலும் நிராகரித்து விடமுடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் ஹூபே மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பரவியது. சீனாவில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
ஆனால், சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அங்கு 26 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 6.50 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் தெரிவித்தது. மருத்துவர்களும் அவ்வாறே தெரிவித்து வருகிறார்கள்.
ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் நிருபர்கள் கேட்டபோது, “ஆம். நானும் கேள்விப்பட்டேன், பல செய்திகள் வருகின்றன. ஆனால், எதையும் வீண் வதந்தி என்று ஒதுக்கிவிட முடியாது. இதுகுறித்து தீவிரமாக ஆலோசிக்க இருக்கிறோம். முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பால் கடும் ஆத்திரமடைந்துள்ள அதிபர் ட்ரம்ப், கரோனா வைரஸ் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக சீனா வைரஸ் எனத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். இதற்கு சீனாவும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இதற்கிடையே அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, ஃபாக்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “கரோனா வைரஸ் எவ்வாறு உருவானது, அமெரிக்காவுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மனித குலத்துக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது குறித்து விசாரிக்கப் போகிறோம். இந்த வைரஸ் இயற்கையாக உருவானதா அல்லது ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து முழுமையாக விசாரிப்போம். வூஹானில் உள்ள சீன அரசின் ஆய்வகங்களில் மிகவும் ஆபத்தான வைரஸ்கள் சோதனை செய்யப்படுகின்றன என்பதையும் அறிவோம்.
இதுபோன்ற சோதனைகளில் ஈடுபடும் நாடுகள் வெளிப்படைத் தன்மையாகவும், எதையும் கட்டுப்படுத்தும் திறமையுள்ளவர்களாக, பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாகச் செயல்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். வெளியிலிருந்து யாரேனும் ஆய்வு செய்ய வந்தால், அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதைத் தெரிவிப்பதாக இருக்க வேண்டும். இந்த வைரஸ் பரவிய விதம் குறித்து இன்னும் நாங்கள் அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளைக் கையாண்ட விதம், சீனா மீது பழி சுமத்தியது, உலக சுகாதார அமைப்பு மீது குற்றச்சாட்டு போன்றவற்றால் அதிபர் ட்ரம்ப் மீது மக்கள் அதிருப்தியுடன் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் கரோனா வைரஸ் சீனாவின் ஆய்வகங்களில் இருந்து பரவியதாக எழுந்துள்ள செய்தி அதிபர் ட்ரம்ப்பின் வாதத்துக்கு வலுசேர்ப்பதாக அமைந்திருக்கிறதா அல்லது தனது அரசின் தோல்விகளை மறைக்க இதுபோன்ற செய்திகள் பரப்பப்படுகின்றனவா என்பது விரைவில் தெரியவரும்.
மேலும், சமூக ஊடங்களில் மிக அதிகமாக விவாதிக்கும் பொருளாக கோவிட்- 19 மாறியுள்ளது. சீனாவின் பயோ ஆயுதம் கோவிட்-19 வைரஸ் என்று ஒரு தரப்பினரும், அமெரிக்க ராணுவத்தினர் சீனாவுக்குச் செல்லும்போது அங்கு கோவிட்-19 பரப்பிவிட்டார்கள் என்ற கருத்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago