உலக சுகாதார நிறுவனத்துக்கு அளித்துவந்த நிதியைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் பெரும் பொறுப்பைச் சுமந்துகொண்டிருக்கும் ஓர் அமைப்புக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் முடிவு இது என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.
ட்ரம்ப்புக்கு முந்தைய அமெரிக்க அதிபர்கள், இதுபோன்ற நெருக்கடிக் காலங்களில் தலைமையேற்று வழிநடத்தியதுடன், சர்வதேச அமைப்புகளுக்கு ஆதரவாகவும் நின்றார்கள். குறைந்தபட்சம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைப் பறைசாற்றும் வகையில் பெயரளவிலான முயற்சிகளையாவது எடுப்பார்கள். ட்ரம்ப், அந்த வரலாற்றை அடியோடு மாற்ற முயற்சிக்கிறார்.
என்ன செய்கிறது உலக சுகாதார நிறுவனம்?
சுவிட்சர்லாந்தின் தலைநகர் ஜெனிவாவைத் தலைமையிடமாகக் கொண்ட உலக சுகாதார நிறுவனம், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐ.நா.வின் ஒரு பகுதியாகவே தொடங்கப்பட்டது.
இன்றைக்கு உலகமெங்கும் 150-க்கும் மேற்பட்ட அலுவலகங்களைக் கொண்டிருக்கும் இந்த அமைப்பில் 7,000-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகிறார்கள். தனது உறுப்பு நாடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்தும் அதிகாரம் இந்த அமைப்புக்கு இல்லை. எனினும், உலகளாவிய நோய்த் தொற்று, சுகாதாரப் பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்கொள்வதற்கான எச்சரிக்கைகளை விடுப்பது, கொள்கைகளை வகுப்பது போன்ற பணிகளை இந்த அமைப்பு செய்துவருகிறது.
1960-கள், 70-களில் பெரியம்மையைக் கட்டுப்படுத்தும் பணியில், உலக சுகாதார நிறுவனத்துக்குத் தேவையான நிதியைத் திரட்டிக் கொடுக்க அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட்டாகச் சேர்ந்து பங்காற்றின. 1950-களின் தொடக்கத்தில் உலகெங்கும் கோடிக்கணக்கானோருக்குப் பாதிப்பை ஏற்படுத்திய பெரியம்மை, 1977-ம் ஆண்டுவாக்கில் கட்டுக்குள் வந்ததன் பின்னணியில் உலக சுகாதார நிறுவனம் ஆற்றிய பங்கே பிரதானமாக இருந்தது.
பழியை மடைமாற்றுகிறாரா ட்ரம்ப்?
கரோனா வைரஸுக்கு ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் பலியாக ட்ரம்ப்பின் தவறான, யதேச்சதிகாரமான நடவடிக்கைகளே காரணம் என்று கடுமையாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தனது பிம்பம் இப்படிச் சிதைவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ட்ரம்ப், அதைச் சரிக்கட்டும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். சீனா, ஒபாமா, மாநில ஆளுநர்கள் என்று பல தரப்புகள் மீது பழியைப் போடுகிறார்.
கரோனா வைரஸ் பரவலுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் மீது பழியைப் போட்டுத் தப்பித்துக்கொள்வது அவரது வியூகங்களில் ஒன்று. சீனாவின் வூஹான் நகரில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே அதுகுறித்து சீனாவிடம் முழுமையான தகவல்களைக் கேட்டுப்பெறவோ, உரிய விசாரணை நடத்தவோ உலக சுகாதார நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் ட்ரம்ப்பின் பிரதான குற்றச்சாட்டு. அவர் மட்டுமல்ல பல நாடுகளும், மருத்துவ நிபுணர்களும்கூட உலக சுகாதார நிறுவனத்தைக் குறை சொல்கிறார்கள்.
“இது சீனாவுக்கான நெருக்கடி நிலை. உலக அளவிலான சுகாதார நெருக்கடியாக இது இன்னும் உருவெடுக்கவில்லை” என்று ஜனவரி 23-ல் உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ராஸ் அதானம் கூறியதை இப்போது பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். கரோனா வைரஸ் உலக அளவிலான பெருந்தொற்று என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது மார்ச் 11-ல்தான். முன்கூட்டியே இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தால் உலக நாடுகள் சுதாரித்துக் கொண்டிருக்கும் என்பது இந்த அமைப்பு மீதான முக்கிய விமர்சனம். எனினும், இது தொடர்பான திட்டங்களை உலக சுகாதார நிறுவனம் முன்வைத்தபோது சில நாடுகள் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே சொன்னதுபோல், உலக நாடுகளைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு இந்த அமைப்புக்கு அதிகாரங்கள் இல்லை என்பது கவனிக்கத்தக்க விஷயம்.
முரண்கள்
அதேசமயம், கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக சுகாதார நிறுவனத்துக்கு உரிய ஒத்துழைப்பை சீனா வழங்கியதாக ட்ரம்ப்பே ஆரம்பத்தில் பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார். இவ்விஷயத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கைத் தனிப்பட்ட முறையில் பாராட்டவும் செய்தார். அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டார் ட்ரம்ப்.
சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கும் முடிவை உலக சுகாதார நிறுவனம் ஆரம்பத்தில் ஆதரிக்கவில்லை எனும் வலுவான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் ட்ரம்ப். இவ்விஷயத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் நிலைப்பாட்டைப் பொருட்படுத்தாமல், ஜனவரி இறுதியிலேயே சீன விமானங்களுக்குத் தடைவிதித்தைத் தன் தரப்பு நியாயமாக அவர் சொல்கிறார். ஆனால், இதுபோன்ற பயணக் கட்டுப்பாடுகளால் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பிற நாடுகளிலிருந்து வருவது தடைபடும் எனும் எண்ணத்திலேயே அவ்வாறு சொன்னதாக உலக சுகாதார நிறுவனம் சமாதானம் சொல்கிறது. “இந்த வைரஸ் தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதலைவிட அதிகமான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது” என்று டெட்ராஸ் அதானம் சுட்டிக்காட்டியதும் கவனிக்கத்தக்கது.
எது எப்படி இருந்தாலும், மிக முக்கியமான நெருக்கடிக்கு நடுவில், இப்படி நிதியை நிறுத்துவது ஆக்கபூர்வமான முடிவல்ல என்று மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அமெரிக்காவின் பங்களிப்பு என்ன?
உலக சுகாதார நிறுவனத்துக்குக் கிடைக்கும் நிதியில், 14.67 சதவீதம் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கிறது. அதிக நிதியளிக்கும் நாடுகளில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரிட்டன், 7.79 சதவீதப் பங்களிப்பை வழங்குகிறது. ஒப்பீட்டளவில் இதைவிட இரண்டு பங்கு நிதியை அமெரிக்கா வழங்குகிறது. இதைத் தவிர, ‘பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ அமைப்பின் சார்பில், இந்த அமைப்புக்கு 9.76 சதவீத நிதி கிடைக்கிறது. இந்நிலையில், இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு நிதி உதவியை அமெரிக்கா நிறுத்திவைப்பதால், நிச்சயம் பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக, வளரும் நாடுகளில் கரோனா எதிர்ப்புப் பணிகளில் சுணக்கம் ஏற்படும்.
கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளில், எல்லா நாடுகளும் கூட்டுணர்வுடன் உழைத்தாலன்றி, உரிய பலன் கிடைக்காது என்பதைப் பல நிபுணர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள். இம்முயற்சியில் சர்வதேச நாடுகளுக்கு இடையே கூட்டுணர்வு இல்லையென்றால் பொருளாதாரப் பெருமந்தம் (Great Depression) காலத்தில், அமெரிக்கா மட்டுமல்லாமல் பல நாடுகளும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டது போல், இப்போதும் பெரிய அளவில் பாதிப்பு நிகழும்.
கரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று, உலகின் எல்லா மூலைகளிலும் தனது கொடுங்கரத்தைப் பதித்திருக்கும் நிலையில், தன் நாட்டு மக்களை மட்டும் காப்பாற்றினால் போதும் என்று எந்த நாட்டின் அரசும் நினைத்துவிட முடியாது. உலக நாடுகள் ஒவ்வொன்றும் பல்வேறு விஷயங்களுக்காக ஒன்றையொன்று சார்ந்துதான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்தியாவிலிருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினை வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்ட அமெரிக்கா உட்பட.
எனவே, தனது நாட்டை மட்டும் காப்பதாக நினைத்துக்கொண்டு எவ்வளவு நடவடிக்கைகளை எடுத்தாலும், பெருந்தொற்று போன்ற பாதிப்புகளை எந்த வல்லரசாலும் தவிர்த்துவிட முடியாது. இதன் விளைவுகள் மிக மோசமாகவே இருக்கும். ஆனால், ட்ரம்ப்புக்கு இதெல்லாம் புரிந்துவிடுமா என்ன?
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 hour ago
உலகம்
12 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago