அமெரிக்கப் பொருளாதார நலனே முக்கியம்; கரோனா வைரஸின் ஆபத்தை அலட்சியப்படுத்தி மக்களைக் கண்டுகொள்ளாத ட்ரம்ப்: ஆய்வு நடத்தி அம்பலமாக்கிய நியூயார்க் டைம்ஸ்

By பிடிஐ

அமெரிக்காவை நடுநடுங்கச் செய்து வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் குறித்த ஆபத்தையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அந்நாட்டு உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் பலமுறை எச்சரித்தும், அதைப் பொருட்டாக மதிக்காமல் பொருளாதார நலன்களை மட்டுமே முக்கியமாகக் கருதி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டுள்ளார் என்று அமெரிக்கப் பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.

கரோனா வைரஸ் அமெரிக்காவில் மையம் கொண்டு சூறாவளியாகச் சுழன்று அடித்து வருகிறது. கரோனா வந்தால் பார்த்துக்கொள்ளலாம், நாங்கள் வல்லரசு, எதற்கும் தயாராக இருக்கிறோம் என்றெல்லாம் ட்ரம்ப் வீர வசனம் பேசினார். ஆனால், கரோனாவில் தற்போது மக்கள் கொத்துக்கொத்தாக மடிவதைப் பார்க்கும்போது, அதற்கு சீனாதான் காரணம் என்று ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

தங்களின் இயலாமையால் சீனாவின் மீது கோபத்தை திருப்பிய ட்ரம்ப், கரோனாவை சீனா வைரஸ் என்று கூறி தனது ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார். அமெரிக்காவில் உயிரிழப்பு அதிகமாகி கட்டுக்கடங்காமல் போகவே, உலக சுகாதார அமைப்பு மீது குற்றம் சாட்டினார். சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படும் உலக சுகாதார அமைப்புக்கு நிதியை நிறுத்தப்போவதாக ட்ரம்ப் மிரட்டினார்.

கரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மாத்திரையாக இருக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா ஏற்றுமதி செய்ய அனுமதி மறுத்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அதிபர் ட்ரம்ப்பின் இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் அவரின் இயலாமையால் வெளிவந்தவை எனத் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் வெளியாகும் புகழ்பெற்ற தி நியூயார்க் டைம்ஸ் நாளேடு அமெரிக்காவின் இந்த மோசமான நிலைக்கான காரணத்தைப் புலனாய்வு செய்து ட்ரம்ப்பின் அலட்சியப் போக்கை மிகப்பெரிய செய்தியாக வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் நாளேட்டில் கூறப்பட்டு இருப்பதாவது:

''கடந்த ஜனவரி மாதமே சீனாவின் வூஹானில் பேரழிவை ஏற்படுத்தி வந்த கரோனா வைரஸ் குறித்து அமெரிக்க உளவுத்துறையும், தேசிய பாதுகாப்பு அதிகாரிகளும், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்தனர். இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயாக மாறக்கூடும். அதற்கு அமெரிக்கா முன்கூட்டிேய தயாராக வேண்டும் என எச்சரிக்கை விட்டு, விளைவுகளையும் தெரிவித்ததை ட்ரம்ப் அலட்சியப்படுத்தியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப்பின் அலட்சியத்தில் உலகிலேயே மிக அதிகமான உயிரிழப்புகளை கரோனவால் சந்திக்கும் நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க மக்களின் உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு மோசமான சூழலை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறையும், சுகாதாரத்துறையும் விடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் இருந்ததாலும், சரியான தி்ட்டமிடல் இல்லாமல் இருந்ததாலும், அதிபர் ட்ரம்ப் அவரின் சொந்த உள்ளுணர்வு மீது இருந்த நம்பிக்கை போன்றவை அமெரிக்காவை அழிவில் தள்ளியுள்ளது என நாளேடு தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர்கள், அமைச்சரவையின் ஆலோசகர்கள், உளவுத்துறை மூத்த அதிகாரிகள் ஏராளமான முறை ஆலோசனைக் கூட்டங்களில் கரோனா வைரஸ் குறித்த எச்சரிக்கையை அதிபர் ட்ரம்ப்பிடம் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறையும் அதிபர் ட்ரம்ப் மிகவும் அலட்சியமாகவும், மெதுவாகவும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

வர்த்தக ரீதியாக சீனாவை எவ்வாறு கையாள்வது, அதிகாரிகளின் உள்நோக்கம் இவற்றைப் பற்றி மட்டுமே அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சிந்தித்துள்ளார். ஆனால், கரோனா வைரஸின் ஆபத்து பற்றி அதிக அக்கறை கொள்ளாமல் நாட்டை பெரும் துயரில் விட்டுவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் சீனாவின் வூஹான் நகரில் இருந்து கரோனா வைரஸ் குறித்து முறைப்படியான எச்சரிக்கைகள் அமெரிக்க தேசிய உள்துறை அமைச்சகத்துக்கு வந்துள்ளன. தேசிய தொற்றுநோய்த் தடுப்பு வல்லுநர்களும் கரோனா வைரஸின் தீவிரத்தையும் ஆபத்தையும் எச்சரித்துள்ளனர், தேசிய மருத்துவப் புலனாய்வுப் பிரிவு, ராணுவ உளவுத்துறை அனைத்தும் கரோனா வைரஸின் ஆபத்து குறித்து ஒரே மாதிரியான எச்சரிக்கையை வெளிப்படுத்தியுள்ளன.

ஜனவரி மாதத்துக்குப் பின் கரோனா வைரஸ் தீவிரமடைந்தவுடன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் இருக்கும் பயோ-டிபென்ஸ் பிரிவினர் துரிதமாகச் செயல்பட்டு அமெரிக்காவின் எல்லைகள் முழுவதையும் சீல் வைக்க அறிவுறுத்தினர். மக்களை வீட்டில் இருந்தே பணிபுரியவும் அறிவுறுத்தலாம் என்று ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் எதற்குமே அதிபர் ட்ரம்ப் செவி கொடுக்கவில்லை என அந்த நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் அதிபர் ட்ரம்ப்பின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவரான பீட்டர் நவாரோ ட்ரம்ப்புக்கு எழுதிய கடிதத்தில், “கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயால் மிகப்பெரிய பேரழிவு அமெரிக்காவுக்கு ஏற்படலாம். 5 லட்சம் மக்கள் மடிவார்கள். லட்சக்கணக்கான கோடி டாலர்கள் பொருளாதார இழப்பு நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். அமெரிக்காவில் வாழும் 30 சதவீத மக்கள் வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரித்தை விடுத்திருந்தார்.

ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி அளித்த அதிபர் ட்ரம்ப் அப்படி ஒரு எச்சரிக்கைக் கடிதம் பீட்டரிடம் இருந்து வரவில்லை என்று தெரிவித்தார். ஆனால், பீட்டர் நவோரோ எழுதிய கடிதம் குறித்து அவரின் உதவியாளர்கள் ட்ரம்ப்பிடம் கூறியபோது, அவர் அதிருப்தி அடைந்து எதற்காக நவோரா தனது கருத்துகளைக் கடிதத்தில் எழுதினார் எனக் கடிந்துள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் நாளேடு நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 3 வாரங்களையும் அமெரிக்கா பயன்படுத்திக்கொள்ளவி்ல்லை என்று அந்த நாளேடு குற்றம் சாட்டியுள்ளது.

அதிபர் ட்ரம்ப்பிடம், சுகாதாரத்துறையின் மூத்த அதிகாரிகள் , மிகவும் தீவிரமாகவும், வேகமாகவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் என பிப்ரவரி மாதத்தின் 3-வது வாரத்தில் எச்சரிக்கை செய்தனர்.

குறிப்பாக சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வலியுறுத்தி, வீட்டில் இருந்தபடியே பணியாற்ற வைக்கலாம், பள்ளிகள், கல்லூரிகளை மூடிவிடலாம் என்று உச்சகட்ட எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனால், அப்போதும் ட்ரம்ப் மிகவும் அலட்சியப்போக்கோடு இருந்துள்ளார்.

ஆனால், இந்த எச்சரிக்கை அளிக்கப்பட்டு 3 வாரங்களுக்குப் பின் அதிபர் ட்ரம்ப் அதிதீவிரமாக அமெரிக்காவில் சமூக விலகல் விதிமுறைகளைப் பின்பற்ற மக்களிடம் கேட்டுக்கொண்டார். அந்த நேரத்தில் அமெரிக்காவின் பெரும்பகுதியில் கரோனா காலான்றிப் பரவிவிட்டது.

இப்போது அமெரிக்காவில் நிலவும் சூழல்களால் எவ்வாறு மக்களுக்கு பதில் அளிப்பது என்பதில் வெள்ளை மாளிகை பிளவுபட்டுள்ளது. மார்க் மாதத்தில் பிளவுபட்ட கருத்துகளால் அதிபர் ட்ரம்ப் சூழப்பட்டிருந்தார். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக தீவிரமான நடவடிக்கைகளை தவிர்த்தது நியாயமானது அல்ல என்பது புரியத்தொடங்கியுள்ளது''.

இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளேட்டு கடுமையாக விமர்சித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்