கரோனா வைரஸினால் உலகம் முழுதும் பலியானோர் எண்ணிக்கை 95,000த்தைக் கடந்து விட்ட நிலையில் நாடுகள் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளன, மக்கள் அரசாங்கங்கள், மருத்துவ நிறுவனங்கள், அரசியல் நிறுவனங்கள் உள்ளிட்ட பலவற்றின் மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர், இதனையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அமைதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று ஐநா தலைமைச் செயலாளர் அந்தோனியோ கட்டெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
“ஒற்றுமை மற்றும் உறுதி மட்டுமே இந்த கவலையான நாட்களில் முக்கியமானது” என்று வலியுறுத்தும் கட்டெரெஸ், ஐநாவின் நிதிநிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும், அமைதிகாப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே போதிய ரொக்கம் கைவசம் தங்களிடம் இருப்பதாகவும் பங்களிப்பு செய்யும் நாட்டின் ராணுவம் மற்றும் போலீஸுக்கு அளிக்க தங்களிடம் திறன் இல்லை எனவும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் பேசாமல் உலகநாடுகள் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும் என்றும் அதாவது இன்னமும் மேம்பட்ட ஒற்றுமை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கரோனா வைரஸ் ஒரு மருத்துவ, சுகாதார, ஆரோக்கிய நெருக்கடி என்றாலும் அதன் தாக்கங்கள் இதைக் கடந்தும் சிலபல அபாயகரமான விளைவுக்ளை ஏற்படுத்தலாம் என்று கட்டெரெஸ் எச்சரித்துள்ளார்.
“இதன் சமூக, பொருளாதாரப் பேரழிவுகளை நாம் பார்த்து வருகிறோம். வேலையின்மை, பொருளாதார சரிவு ஆகியவற்றுக்கு அரசாங்கங்களினால் சரியான தீர்வு காண முடியவில்லை. ஆனால் கரோனா கொள்ளை நோய் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தி வருகிறது. இதனால் சமூக அமைதியின்மை, பதற்றம், வன்முறை ஆகிய அபாயங்கள் இருக்கிறது, இதனால் நாம் நோயை எதிர்த்துப் போராடுவதில் பின்னடைவு ஏற்படலாம்” என்று எச்சரித்துள்ளார் கட்டெரெஸ்.
இது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் 8 பேரபாயங்களை அவர் அறிவுறுத்தினார்:
1. பொது ஸ்தாபனங்கள் மீதான நம்பகத்தன்மையை கரோனா முதலில் அழித்தொழிக்கும், குறிப்பாக நோயை அரசுகள் சரியாகக் கையாளவில்லை, தவறாகக் கையாள்கிறது என்று குடிமக்கள் நினைத்தார்களேயானால், அரசு இதில் வெளிப்படையாக இல்லை என்று நினைக்கத் தொடங்கினால் மக்களின் நம்பிக்கையில் சரிவு ஏற்படும்.
2. கரோனாவினால் ஏற்படும் பொருளாதார நெருக்கடி பெரிய அழுத்தக்காரணிகளை உருவாக்கி விடும், குறிப்பாக பலவீனமான நாடுகளில், வளர்ச்சி குன்றிய நாடுகளில், வளரும் நிலைக்கு மாறும் நிலையில் உள்ள நாடுகளில் பொருளாதாரத்தினால் பதற்ற நிலை உருவாகும். பெண்களுக்கு இதனால் பெரிய அலவில் பாதிப்பை ஏற்படுத்தும். மோசமாக பாதிக்கப்பட்ட தொழிற்துறைகளில் பெரும்பகுதி இவர்கள் பணியாற்றி வருகின்றனர். பொருளாதார அதிர்ச்சி வீட்டிலிருக்கும் பெண்களையே அதிகம் பாதிக்கும் ஏனெனில் இவர்களே குடும்பத்தை நிர்வகிக்கின்றனர்.
3. தேர்தல்களை தள்ளி வைப்பது, அல்லது வாக்களிப்பை நடத்த முடிவு செய்வது ஆகியவை இந்தக் காலக்கட்டத்தில் அரசியல் பதற்றங்களை உருவாக்கும். இதனால் நியாயத்தன்மையை அது இழக்கும் ஆபத்து உள்ளது. இது போன்ற முடிவுகளை பெரிய அளவில் ஆலோசனை செய்து கருத்தொற்றுமையை நோக்கியதகா இருக்க வேண்டும்.
4. இது போன்ற சமூக, பொருளாதார, சுகாதாரச் சூழல்களில் கரோனா ஏற்படுத்தும் நிச்சயமின்மைகள், ஸ்திரமின்மைகள் சில சக்திகளை மேலும் பிளவு படுத்தவும் குழப்பங்களையும் விளைவிக்கத் தூண்டி விடும். இதன் மூலம் வன்முறைகள் தலைவிரித்தாடும் சூழல் ஏற்படலாம். இதனால் தவறான பாதையில் சென்று தற்போது நடைபெற்று வரும் போர்கள் மேலும் வலுவடைந்து கோவிட்-19க்கு எதிரான போரை சிக்கலாக்கிவிடும்.
5. பயங்கரவாதம் என்ற அச்சுறுத்தல் இன்னமும் உயிருடன் தான் உள்ளது. கரோனா மீது அனைத்து அரசுகளும் கவனம் செலுத்தும் வேளையில் பயங்கரவாதிகள் இதனை தங்கள் தாக்குதலுக்கான வாய்ப்பாகப் பார்க்கும் அபாயம் உள்ளது.
6. இந்தக் கரோனாவுக்கு எதிரான தயாரிப்பிலும் மருத்துவத்திலும் வெளிப்படும் பலவீனங்கள் உயிர் பயங்கரவாத தாக்குதலுக்கான சாளரமாக அமைந்து விடக்கூடிய வாய்ப்புள்ளது, விஷமிகள் இது போன்ற விஷக் கிருமிகளை உலகம் முழுதும் பரவச்செய்யும் வாய்ப்பை இது உருவாக்கிவிடும்.
7.இந்த கரோனா நெருக்கடி ஏற்கெனவே நாடுகளிடையே, சமூகங்களிடையே, பண்பாடுகளுக்கிடையே இருக்கும் சண்டைகள் சச்சரவுகளை தீர்க்கும் பிராந்திய, தேசிய, சர்வதேச தீர்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும். கோவிட்-19க்கு எதிர்வினையாற்றும் சமயத்தில் அமைதி, உலக சமாதான நடைமுறைகள் தடைப்பட்டுள்ளன. அதே போல் எங்கும் செல்ல முடியாத நிலையில் செயலுக்கே கோவிட் தடை போட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடி தீர்வுகளில் ஈடுபட முடியாமல் செய்கிறது. மேலும் பல நம்பிக்கை சார்ந்த நடைமுறைகளையும் கோவிட்-19 தகர்த்து வருகிறது.
8. கோவிட்-19 காய்ச்சல், தொற்று நோய் பல்வேறு மனித உரிமைகள் சவால்களை முடுக்கி விட்டுள்ளது. சமூக விரோதம், துவேஷப் பேச்சு, வெறுப்புணர்வு ஆகியவற்றுடன் வெள்ளை இன/நிற மேட்டிமை மற்றும் பிற தீவிர, அடிப்படைவாத கும்பல்கள் சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக சுரண்டப்பார்க்கின்றன. மருத்துவம் அனைவருக்கும் கிடைப்பதில்லை இதிலும் பாகுபாட்டினை கண்டு வருகிறோம். அகதிகள் மற்றும் உள்நாட்டிலேயே அகதிகளானவர்களை அரசுகள் பாகுபாட்டுடனும் பாரபட்சத்துடனும் நடத்துவதைப் பார்க்கிறோம். இதை விடவும் எதேச்சதிகாரமும் வளர்ந்து வருகிறது. ஊடகங்கள் வாயை அடைப்பது, குடிமை வெளி மற்றும் பேச்சுரிமை கருத்துரிமையும் பாதிக்கப்பட்டு வருகிறது
என்று இந்த 8 பேராபயங்களை ஐநா தெளிவுறுத்தியுள்ளது. ஐநா தொடங்கியது முதல் இப்போதுதான் மிகப்பெரிய அபாயகரமான சோதனையை ஐநா சந்திக்கிறது.
ஒவ்வொன்றாகத் தெரியவரும் இந்த அதிர்ச்சியிலிருந்து உலகம் மீள தவிக்கிறது. போராடுகிறது. வேலைகள் காணாமல் போய் விட்டன. வர்த்தகங்கள் பெரிய அடி வாங்கியுள்ளது. தினசரி வாழ்க்கையில் அடிப்படை மாற்றங்கள், மோசமானது இனிமேல்தான் நடக்கவிருக்கிறது என்ற அச்சம் ஆகியவை மனிதர்களையும் நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றன.
”இது ஒரு தலைமுறையின் போராட்டம், ஐநா என்ற ஒன்று இருப்பதற்கான நியாயமும் இதுதான்” என்று கட்டெரெஸ் உணர்ச்சிமிகுதியுடன் பேசியுள்ளார்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
10 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago